பெரிய நகரத்தில் வளர்வதற்கும் புதுக்கோட்டைப் போன்ற சிறிய ஊரில் வளர்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதிலும் ஊரிலேயே புகழ்பெற்ற பள்ளியின் குடும்பத்து வாரிசு என்பதால் பலருக்கும் தெரியும்.
அங்கேயிருந்து மும்பைக்கு போனது என் வாழ்வில் மட்டுமல்ல என்னிலும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மும்பைக்கு முன் மும்பைக்கு பின் எப்படி இருந்தது என்று சொல்வதை விட மும்பைக்கு போயிருக்காவிடில் இப்பொழுதைய நான் சாத்தியமே இல்லை என்று சொல்லலாம்.
அப்பாவின் ராஜ்ஜியத்தில் அதிகம் யாருடன் பேசக்கூடாது, வீட்டிற்கு யார் வந்தாலும் தண்ணீர் கொடுப்பதோடு அல்லது அப்பா வீட்டில் இல்லாத பட்சத்தில் வந்தவர் பற்றிய தகவல் தெரிந்து சொல்ல வேண்டும் என்ற அளவில் தான் அடுத்தவர்களுடன் பழக்கம். சிரித்து பேசி, மகிழ்ந்து அனுபவத்தி இதெல்லாம் ரொம்ப அரிதான் விஷயம். பசங்க 2 படத்தில் “ யாருக்கும் தெரியாம நாம பாட்டுக்கு வாழ்ந்துட்டு போயிடனும்யான்னு” ஒரு பெற்றவர் சொல்வர். என் அப்பாவும் அப்படித்தான் வளர்த்தார்.
கடைக்கு போவேன், சாமான்கள் வாங்குவேன். தனியாக சைக்கிளில் போய் அரிசி மூட்டை சுமத்தல் போன்ற வேலைகள் அதாவது வெளி வேலைக்கு பழக்கியிருந்தார். ஆனால் யாருடனும் பழக பேச தெரியாது. ஓரளவுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருந்த சமயம் அது.
அப்படி இருந்த என்னை என் கூட்டை உடைத்து 360 டிகிரி மாற்றம் என்று சொல்வார்களே அப்படி ஒரு மாற்றத்தை எனக்கு மும்பை வாழ்க்கை தந்தது. அதில் முக்கிய பங்கு என் தாய்மாமா திரு. சத்யநாரயணனையே சாரும்.
மும்பையில் வாழ்ந்தவர்களுக்கு வேறெங்கும் போய் செட்டிலாக ஈசி என்பார்கள். அவ்வளவு அனுபவங்களை கொடுத்துவிடும். ரயிலில் பயணம், திட்டமிட்ட பயணம். ஒரு நொடி தவறினாலும் மிஸ்ஸாகும் ரயிலால் ஏற்படும் தாமதம் என ஒரு ஒழுங்கமைப்பு.
பண்டிகை கொண்டாட்டங்கள் ஆகட்டும், தினந்தோறும் ரயில் பயணங்கள், ரயில் பயணிக்களுடன் நட்புக்கள் அவர்களின் மூலம் கற்றல்னு எனக்குள் நிறைய்ய தாக்கத்தை கொடுத்து என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியது.
நான் வேலை பார்த்த இடத்திலும் நிறைய்ய சவால்கள். என்னை அறியாமாலேயே என்னிடம் 4 பேர் பார்க்கும் வேலையை கொடுத்து செய்ய வைத்து தவறும் பொழுது .திறம்பட செய்யவில்லை என குற்றம் சுமத்துவார்கள். பொறுத்தது போதும் பொங்கியெழுன்னு நான் குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன். “வடு மாங்காய் கடிப்பது போல் பதில் சொல்லாட்டாதான் என்ன” என்ற மேலதிகாரியின் கேள்விக்கு அப்படி பதில் சொல்ல வைத்தது நீங்கள் தான் என்று சொல்லும் வகையில் என் தன்னம்பிக்கை பெறுகியது.
நான் யார்? என் திறமை என்ன? எனக்கு வேண்டியது என்ன? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? இதை உணர்வதுதான் நம் தேவை. இதை மட்டும் நாம் உணர்ந்துவிட்டால் அப்புறம் நமக்கு நாமே தான் எஜமானன்.
இந்த உள்நோக்கிய பயணம் புரிதல் எனக்கு மும்பை வாழ்க்கை தந்ததோடு இன்றளவும் மறக்க முடியாத ரயில் பயணங்கள், ரயில் சிநேகங்களைத் தந்து என்னை அரவணைத்து, ஆதாரித்து.
மாமா எனக்கு பர்சனாலிட்டி டெவலப்மெண்டிற்கு வழி வகுத்தார் என்றால் அம்மம்மா என்னை ஆற்றுப்படுத்தினார் என்றே சொல்ல வேண்டும். எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வியின் பின்னால் இருக்கும் கடினமான தருணங்கள் எனக்குள் நிறைய்ய கோபத்தை விதைத்திருந்தது. காயங்களின் ஆறாத நிலையும் அதற்கு இன்னும் எண்ணெய் ஊற்றியது. அம்மம்மாவின் வழிகாட்டுதல், உன் கடைமையை மட்டும் செய்து விடு, அடுத்தவர்கள் செய்ய வேண்டியது பற்றி நீ என்னாதே போன்ற வாழ்க்கை பாடங்களும் இன்றளவும் எனக்கு வழிகாட்டுகிறது.
ராஜலட்சுமியின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா எனப் பாடிக்கொண்டு எனக்குள் என்ன மாற்றம் நிகழ்த்திக்கொள்ள வேண்டுமோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று இருந்தது எனக்கு பலவிதத்தில் உதவி செய்தது.
பகிர இன்னும் இருக்கு
தொடரும்
அன்பும் நன்றிகளுடன்
புதுகைத்தென்றல்
15/8/23
No comments:
Post a Comment