Wednesday, August 16, 2023

திரும்பி பார்க்கிறேன் - பகுதி 3

மும்பை வாழ்க்கை 2 வருடங்களில் முடிவுக்கு வந்தது. 1000 ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்தேன். வெளிவரும்பொழுது 3500/- அப்போ அது ரொம்ப பெரிய்ய தொகை (1995).
ஏன் இந்த அல்பாயுசு?  என் படிப்புக்கும் மங்களம் பாடிய அவ்வாவின் உடல்நிலை  நான் வேலைக்கு சென்றபொழுது என்னாச்சு என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அதாவது சடனாக ஒரு நாள் நீ காலேஜ் போய் கிழிச்சதெல்லாம் போது. அவ்வாவுக்கு உடம்பு சரியில்லை. நீ இருந்து பார்த்துக்கோ என சொல்லப்பட்டது. இரண்டாவது செமஸ்டருடன் மங்களம் பாடப்பட்டது.

காலையில் பரிட்சை முடிந்து இனி நான் வீட்டில் தான் என நினைத்திருந்த பொழுது மாலையில் அம்மாவந்து நாளை முதல் இந்திராகாந்தி 
ஸ்கூலில் வேலை உனக்கு. மாதம் 300 சம்பளம். ட்யூஷன் எடுக்கணும். அதற்குத்தனி மொத்தம் 500 ரூபாய் வரும் எனச்சொல்ல இப்ப நான் வேலைக்கு போனால் அவ்வாவை யார் பார்ப்பது? இதற்கு நான் படிக்க போகலாமே? என கேட்க பதில் இல்லை. வரவும் வராது. பள்ளத்தூரில் படிக்க போக தினம் 10 ரூபாய் பஸ் காசு. படிப்பை நிப்பாட்டினால் அது மிச்சம். இப்ப வேலைக்கு போனால் வருமானம். இந்த நிலையில் தான் மும்பைக்கு வேலைத்தேடி அனுப்பட்ட பட்டது. 

இந்த முறை அவ்வாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக எங்கே பேத்தி கல்யாணம் பார்க்காமல் போய்ச்சேர்ந்துவிடுவோமோ என்ற எண்ணம் வர அவர் மகனிடம் சொல்லி மாப்பிள்ளை பார்க்கும் கட்டம் இனிதே ஆரம்பம்.

அப்பொழுது என்னுடன் நல்ல உறவில் இருந்த தாய்மாமன் பொங்கி எழுந்துவிட்டார். ஆனால் பெற்றவருக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நல்ல சம்பந்தமாக இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்வேன் என்று சொல்ல பல மாப்பிள்ளைகளை அவரே ரிஜக்ட் செய்தார் (எல்லாம் குப்பையும் கூர்வாளமும் தான். மாமா செய்தது சரியே)

அயித்தான் எங்களுக்கு முன்பே உறவு என்பதால் அவருக்கும் வேலை பர்மனெட் ஆகிவிட்டது (ஹிந்துஸ்தான் லீவர்) என்பதால் கேட்டு பார்ப்போம் என்று ஆரம்பிக்க ராஜலட்சுமியிடம் வளர்ப்பு என்று தெரிந்ததும் அந்த ஒரு தகுதியில் ஜாதகம் பொருத்தம் பார்க்கப்பட்டு பொருந்தவே வேற பெண்களில் ஜாதகங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு “ ராஜம் பேத்திதான் நம் வீட்டுக்கு மருமகள்” என வருங்கால மாமியார் சொல்லிவிட அயித்தான் தலையெழுத்து பாவம் என்னிடம் மாட்டிக்கொண்டார்.

ஏப்ரலில் பெண் பார்த்தார்கள். முன்னாடியே தெரிந்த உறவுக்கு இதெல்லாம் எதற்கு என்று கோவத்துடன் மும்பையிலிருந்து வந்தேன். பின்னே கரஸ்பாண்டன்சில் விட்ட படிப்பை படித்துக்கொண்டிருந்தேனே. மே மாதமும் லீவு கேட்டால் மேனேஜர் லீவு கொடுக்கணுமே எனும் கவலை எனக்கு.

பெண் பார்க்கும் படலம் உறவினரிடம் அதிகம் பழகியிராத தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்த அயித்தானின் அண்ணன் ( இன்று வரை நான் மிகவும் மதிக்கும் அன்பான சுப்ரமண்ய மாமா) மற்றும் அவரது  குடும்பத்தினருக்காக. சென்னையில் இருந்த எங்கள் உறவினர் வீட்டில் நடந்தது. வரதட்சனை தர மாட்டேன் ( அப்புறம் அதற்கு வேறு என்னால் ஏற்பட்ட  தண்ட செலவு என சொல்லபட கூடும் என்பதால் முன்பிருந்த இந்த கண்டீஷன்), பட்டுப்புடவை கட்ட மாட்டேன். இது இன்றளவும் நடைமுறையில் எங்கள் குடும்பங்களில் இருக்கும் ஒரு கொள்கை.  ஆனால் இந்த பட்டுப்புடவையில் ஒரு பிரச்சனை வந்தது.

தெலுங்கு சம்பிரதாயத்தில் முகூர்த்தம் நேரம் வெள்ளை புடவையை மஞ்சளில் ந்னைத்து காயப்போட்டு அதைத்தான் உடுத்துவார்கள். பிறகு மஞ்சள் கலரிலோ அல்லது கேரளா காட்டன் புடவைகளோ கட்டும் பழக்கம். இதனால் நாகவல்லி எனும் சடங்கிற்கு பட்டுதான். என்னிடமும் அந்த சடங்கிற்கு நாங்கள் பட்டு வாங்குவோம் அதை கட்டித்தான் ஆகவேண்டும் எனச் சொல்ல. அப்படின்னா இந்த சம்பந்தம் வேண்டாம்மான்னு அம்மம்மாவிடம் சொல்லிவிட்டேன்.

இந்த ஒரு புடவை மட்டும் அதுவும் நாகவல்லியிலும் தாலி கட்டும் நிகழ்வு இருப்பதால் கட்டாயம் அன்று மட்டும் உடுத்தி கொள்ளட்டும் அப்புறம் வேணாம் என இறங்கி வர என் அம்மம்மாவோ இந்த ஒரு பட்டுப்புடவைக்காக நல்ல(!)  சம்பந்ததை விட்டு விடாதே எனக் கெஞ்ச சரியென்று ஒத்துக்கொள்ள நிச்சயதார்த்தம் பாக்கு வெத்தலை மாற்றுதல் போன்ற எந்த சடங்கும் இல்லாமல் திருமண வேலைகள் பார்க்க ஆரம்பித்தனர்.

டிசம்பர் 1 1995 பழநியில் திருமணம் நடந்தது. சென்னை வந்து திரும்ப ரிஷப்ஷனுக்கு புதுகை போய் டிசம்பர் 16 1995 ஹைதை மாநகரம் வந்து இறங்கினோம்.

தொடரும்
அன்பும் நன்றிகளுடன்
புதுகைத்தென்றல்
17/8/23

No comments: