Wednesday, August 27, 2008

கோலம்.. நான் போட்டக் கோலம்

மார்கழி மாதம் முன்பனி தலையில் ஏறாமல் தலைக்கு
முக்காடு கட்டிக்கொண்டு அம்மா கோலம் போடுவார்.
மார்கழி மாதத்திற்காகவே அம்மா வாசலை முன்பே
ரெடியாக்கி வைத்துக்கொள்வார்.

கெட்டியாக சாணம் கரைத்து தெளித்து
வாசலே வழுவழுவென்று இருக்கும்.

கலர் கோலம் போட்டு அவுட்லைனாக கோலப்பொடியை
கெட்டி கோடுகளால் இழைத்து அம்மா போட்டிருக்கும்
கோலத்தின் மேல் சூரியன் ஒளி பட்டு மின்னுவதை
பார்த்துக்கொண்டே இருக்கலாம். அம்மாதான்
போடுகிறார்களே என்று நான் கோலம் போட்டதே
இல்லை.கலர் கோலம் போடும்போது மட்டும் அம்மாவுக்கு
உதவியாக இருப்பேன். அம்மாவின் கலர் காம்பினேஷன்
என்னை வியக்க வைக்கும்.

ஒரு மார்கழி மாத நந்நாளில் உடல்நிலை சரியில்லை
என்று அம்மா தன் அம்மாவீட்டிற்கு (லோக்கல்தான்)
சென்று விட்டார். ஆயாம்மா வாசல் தெளித்து
சின்னதாக கோலம் போட்டுவிட்டு போய்விடுவார்.

காலேஜ் முடிந்து வந்த ஒரு சாயந்திரம்
வந்தார் எதிர் வீட்டு மணியக்கா!
“என்ன? ஊரே மார்கழி மாசம் கோலம்
போடறாங்க. உங்க வீட்டு வாசல்ல மட்டும்
தான் சின்னக் கோலமா இருக்கு” அப்படின்னாங்க.

அம்மா அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்கள்ல
அதான்னு” பதில் சொன்னை என்னைப் பார்த்து
கேட்டார்களே ஒரு கேள்வி!!!

வீட்டுல் பொம்பளைப்பிள்ளை நீ இருக்க.நீ ஏன்
போடக் கூடாது? இம்புட்டு வயசாயிடுச்சு
கோலம் போடத் தெரியாதா என்னன்னு”?!!
படக்குன்னு கேட்டுட்டு எந்திரிச்சி போயிட்டாங்க.

இப்படி படக்குன்னு கேட்டது என்னை
ஒரு யோசிக்க வெச்சது. அவமானமா போயிடுச்சு.
8.20 காரைக்குடி பஸ்ஸை பிடிச்சாத்தான் 9.20 மணிக்கு
காலேஜுல இருக்கலாம்.
அதுக்குள்ள வீட்டுல பாட்டிக்கு நிறைய உதவி
செஞ்சுவெச்சுட்டு போகணும். இப்ப கோலம் போடனும்னா
இன்னும் சீக்கிரமா எந்திரிக்கணும். ஆனாலும்
இந்த அவமானத்தை துடைச்சே ஆகணும்னு ஒருவெறி.


நல்ல வேளையாக அம்மா தன் கோல நோட்டை
இங்கையே வெச்சிட்டு போயிட்டாங்க. அம்மா
அடுத்த நாள் போடவேண்டிய கோலத்தை முதல்
நாள் இரவே ஒரு முறை சமையற்கட்டு தரையில்
போட்டு பார்ப்பாங்க. நானும் அது மாதிரி
புள்ளி வெச்சு போட்டு பாத்தேன். ம்ஹூம்.. ஒன்னும்
தேரல :(


ஆனாலும் என்ன செய்யறதுன்னு? ஒரே யோசனையோட
தூங்கப்போனேன். நாமதான் வரைவோமே.
நோட் புக்குல வரையறதை தரையில் வரைவோம்னு
முடிவு செஞ்சுட்டு தூங்கிட்டேன்.


அடுத்தநாள் காலையில் வாசல் தெளித்து
நான் கோலம் போடப் போவதை பார்த்த
எதிர் வீட்டு மணியக்கா, அட! நீ கோலம் போடபோறியா?
போடு போடு வந்து பார்க்கறேன்னு” சொன்னாங்க.நான் என் டிராயிங் நோட்டை எடுத்துகிட்டு போய்
படத்தை வரைஞ்சு 15 நிமிஷத்துல வீட்டுக்குள்ள
வந்துட்டேன். எல்லோரும் வந்து வந்து பார்க்கராங்க.


எனக்கு ஒரே டென்ஷன். ஏதும் அசிங்கமா இருக்கோ?!!.
நம்ம கன்னிக்கோலத்திற்கு வந்த கோலமென்னென்னு!!
யோசிச்சுகிட்டே காலேஜுக்கு கிளம்பி போயிட்டேன்.சாயந்திரம் நான் வரும்போது பார்த்தால் விறகால்
என் கோலத்திற்கு பார்டர் கட்டப்பட்டிருந்தது.
(யாரும் மிதிச்சிடக்கூடாதாம் :) ) ஐயர்குளம்
வடகரையிலிருந்து வரை ஆட்கள் வந்து
என் கோலத்தை பார்த்து விட்டுப் போனதாக
பாட்டி பெருமை பொங்கச் சொன்னாங்க.அப்பாவும் அன்று சிரித்த முகத்துடனே
இருந்தாங்க. தம்பி சூப்பர் அக்கான்னு
பாராட்டினான்.

நான் போட்டக் கோலம் இதுதான்.
:))) ஸ்ப்ரைட் பாய்.அடுத்த வந்த சில நாட்களும் ராஜா, பூ, மயில்னு
வரைஞ்சு தள்ளிட்டு, ரங்கோலி கோலம் போடத்துவங்கினேன்.
அப்புறம் தான் புள்ளி வெச்சு கோலம் போட வந்தது.

இடுக்கு புள்ளி, நேர்புள்ளி, சிக்குக்கோலம்னு
அம்மா நோட்டில் இருந்த கோலங்கள் எல்லாம்
வாசலில் என்னால் போடப்பட்டது.

நான் கோலம் போடுவதைப் பத்தி சின்ன மாமா
தினம் அம்மாவுக்கு தகவல் சொல்ல அம்மாவும்
சந்தோஷப் பட்டார்கள்.


மணியக்கா கேட்ட படக் கேள்வியால
கோலம் போடக் கத்துகிட்டேன்.

இன்று என் குட்டி மகள் நான்
கோலம் போடும் போது பக்கத்தில்
வந்து நின்று கொண்டு வேடிக்கை
பார்ப்பாள். நான் போடுவது அவளுக்கு மிகவும்
பிடிக்கும். யாரும் மிதிக்காத படி பார்த்துக்கொள்வாள்.

வீட்டு வாசலிலேயே டிராபிக் போலிஸ் போல் நின்று கொண்டு
அப்பாவிற்கு காரை இப்படி அப்படிக்கொண்டாங்க
என்று சொல்லி என் கோலத்தை காப்பாற்றுவாள்.

அம்மா கஷ்டப்பட்டு போட்டிருக்காங்க?
மிதிக்காதீங்க என்று அண்ணனுக்கும், அப்பாவுக்கும்
அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பாள்.இது போன்ற ஒரு கொசுவத்தியை நீங்களும்
டேக்காக போடுங்களேன். நான் அழைப்பது
கயல்விழி முத்துலட்சுமியை.

21 comments:

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நல்ல ப்ராண்ட் கொசுவத்தி.. எங்கவீடுவரை புகை... நானும் புகைக்கு நடுவில் கொஞ்சம் கொசுவத்தி சுத்திட்டேன்..

கொசுவத்தி போட்டு ரொம்ப நாளாச்சு நீங்க டேக் போட்டதா நினைச்சு சுத்திடவா?

புதுகைத் தென்றல் said...

வாங்க கயல்விழி,

மழைக்காலத்திற்காக ஸ்பெஷல் கொசுவத்தி இது.

உங்களுக்கு டேக் போட்டுட்டேன்.

ஆயில்யன் said...

நல்லா இருக்கு அக்கா!

மங்களூர் சிவா said...

கோலம் எல்லாம் நல்லா இருக்கே நெட்ல கிடைச்சதோ!?!?

புதுகைத் தென்றல் said...

நெட்ல கிடைச்சதோ!?!?


ஆமா. இப்ப சந்தோசமா?!! :)

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

அக்கா கோடு போட்டா ரோடு போடுவீங்கன்னு தெரியும். புள்ளி வச்சா கோலமும் போடுவீங்கன்னு இப்ப தெரிஞ்சுபோச்சு :))

ராமலக்ஷ்மி said...

அழகழகான கோலங்கள். அதிலே நீங்கள் எக்ஸ்பெர்ட் ஆன கதையும் ரொம்ப அருமை.

என்னதான் ட்ரை பண்ணாலும் நோட்ல அழகா வரைய முடிகிற என்னால் இரண்டு விரல்களுக்கிடையே பொடியால் கோடாக இழுக்கையில் பொடிக் கோடா வராது பொலபொலவென வந்து விடும்:(! என் பெரியம்மா பெண் இதில பெரிய எக்ஸ்பெர்ட். ஒரு முறை எங்கள் வீட்டு முற்றத்தில் 15 அடி நீளம் 10 அடி அகலத்துக்கு புள்ளி வைத்து அவள் போட்ட தேர்க்கோலம் இன்றைக்கும் கண்ணுக்குள் நிற்கிறது. உங்கள் பெண்ணைப் போல அவள் போடும் கோலங்களுக்கு நாங்கள் காவல் நிற்போம். எனது திண்ணை பதிவில் கூட அவளது கோலத்தின் ஒரு படம் உண்டு.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
மங்களூர் சிவா said...
கோலம் எல்லாம் நல்லா இருக்கே நெட்ல கிடைச்சதோ!?!?
==>
=)))
உங்களோட வழக்கமான கமெண்டைக் காணோமேன்னு நினைச்சேன்.

புதுகைத் தென்றல் said...

வாங்க அப்துல்லா,

இடத்துக்கு தக்க கோடோ, கோலமோ போடணும்ல. :)

புதுகைத் தென்றல் said...

அழகழகான கோலங்கள். //

ஹி ஹி. இது நெட்டில் சுட்ட படங்கள் தான் ராமலக்ஷ்மி.

புதுகைத் தென்றல் said...

அம்மா, சித்தி எல்லோரும் சூப்பரா கோலம் போடுவாங்க. சித்தியின் கோலங்கள் மதுரை அக்ரிணி வளாகத்தில் ரொம்ப பேமஸ்.

அம்மா, சித்திக்கு முன்னாடி நான் போடும் கோலம் ஒன்னுமே இல்லை.

ஆனாலும் அம்ருதாவுக்கு ரொம்ப பிடிக்கும். அது போதுமே எனக்கு.

புதுகைத் தென்றல் said...

வாங்க சாமான்யன்,


உங்களோட வழக்கமான கமெண்டைக் காணோமேன்னு நானும் நினைச்சேன்.

என்ன இப்பல்லாம் காற்புள்ளி முக்கால் புள்ளி போடாமல் உடனே கமெண்டிடறீங்க. ஆசசரியமா இருக்கு!!!

இசக்கிமுத்து said...

‍கோலத்தை போல உங்க கோல அனுபவமும் அழகு!

புதுகைத் தென்றல் said...

வாங்க இசக்கி முத்து,

தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Ram said...

Entha Ooorunga?

புதுகைத் தென்றல் said...

புதுகை எனப்படும் புதுக்கோட்டைங்க

நானானி said...

உங்களுக்குள் உள்ள திறமையை வெளிக் கொணர ஒரு மணியக்கா வேண்டியிருக்கு. டாங்க்ஸ் மணியக்கா!!

இன்னும் உங்க புத்துக்குள் என்னென்ன பாம்பு இருக்கோ...?யார் மகுடி ஊதி வெளிக் கொணருவார்களோ?

புதுகைத் தென்றல் said...

வாங்க நானானி,

அனுமன் போல நம் பலம் நமக்கே தெரியாமல் இருக்கும். யாராவது வந்துதான் தூண்டிவிடுவாங்க.

இன்னும் உங்க புத்துக்குள் என்னென்ன பாம்பு இருக்கோ...?யார் மகுடி ஊதி வெளிக் கொணருவார்களோ?//

அடிக்கடி மகுடி ஊதத்தான் அயித்தான் இருக்காகளே!! இப்ப ட்ரைவிங் கத்துக்க மகுடி ஊதி உசிப்பிவிட்டு அதுவும் நடக்குது. :))

ஹுஸைனம்மா said...

இது இப்ப தற்செயலாக் காணக் கிடைச்சுது. ஸ்ப்ரைட் பாயை கோலமாப் போட்டு கோல வரலாறையே மாற்றி எழுதிட்டீங்க போங்க!! ;-)))

புதுகைத் தென்றல் said...

ஸ்ப்ரைட் பாயை கோலமாப் போட்டு கோல வரலாறையே மாற்றி எழுதிட்டீங்க போங்க!! ;-)))//

ஸ்மைலியும் போட்டுட்டீங்க. வருகைக்கு நன்றின்னு சொல்லிக்கிறேன்.

Jaleela Kamal said...

ஹ ஹா ரொம்ப வ வித்தியாசமான கோலம்