Tuesday, November 03, 2009

நான்

”காலிங் பெல் அடிக்கற சத்தம் கேக்குது எந்திரி..!!”


”கண்ணையே திறக்க முடியலீங்க. குழந்தை
ராத்திரியெல்லாம் தூங்கலை. நல்ல ஜுரம்.
கீழயே படுக்கலை. தொடலை வெச்சு ஆட்டி,
ஆட்டி கால் வலிக்குது, நீங்க போய் கொஞ்சம்
பாருங்களேன்...”

முனுமுனுப்போடு அவர் எழுந்து போவதைப்
பார்த்துவிட்டு 5 நிமிடம் படுக்கலாம்னு கண்ணை
மூடினேன்.

கண்ணத்தொறந்து பாத்தா மணி 7. ஐயோ!
அவருக்கு காபி கலக்கணும், டிபன் செய்யணும்னு
நினைப்பு வர பல் தேய்க்க ஓடினேன்.

பால் கவர் பக்கத்தில் கிடக்க நிம்மதியாக பேப்பர்
படிச்சுகிட்டு இருந்தார். பாலை காய்ச்சி அவருக்கும்
எனக்கும் காபி போட்டு கிட்டு வந்தேன்.
சூடான காபி தொண்டையில் இறங்கினதும் தான்
கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்துச்சு.

”ஏங்க, குழந்தைக்கு ஜுரம் குறையல. டாக்டர்
கிட்ட திரும்ப போகணும் போல இருக்கு.
கூட வர்றீங்களா??”

”என்ன பேசற? எனக்கு இன்னைக்கு முக்கியமான
மீட்டிங், வேலை இருக்கு. நீயே பாத்துக்க.
8 மணிக்கு கிளம்பனும் அதுக்குள்ள டிபன்
ரெடி செஞ்சிடு.”

இவருக்கு எப்பவும் வேலை தான்.
லீவே எடுக்க மாட்டார். எல்லா
இடத்துக்கும் நான் தான் போகணும்.

குழந்தை முழிச்சு அழற சத்தம் கேட்க
குழந்தையை எடுக்க ஓடினேன். ஸ்வெட்டருக்கும்
மேலயும் ஜுரம். பாலை கொடுத்திட்டு
இட்லியும் சட்னியும் செஞ்சு அவருக்கு
கொடுத்தேன். அவர் ஆபிஸ் கிளம்பிட்டார்.

குழந்தைக்கு மருந்து கொடுத்து படுக்க
வெச்சிட்டு வேலை செய்யலாம்னு நினைச்சேன்.
குழந்தை விடாம ஒரே அழுகை. என்னை
விட்டு இறங்கவேயில்லை!! செண்பகத்தம்மா
வேலைக்கு வந்திட்டாங்க. அவங்க வேலை
செஞ்சு முடிச்சதும் குழந்தையை தூக்கிகிட்டு
டாக்டர் கிட்ட போனேன்.

ஆஸ்பி்டல்ல ஒரே கூட்டம். எனக்கு 8ஆவது
டோக்கன் தான் கிடைச்சது. நெஞ்சோட
அணைச்சு வெச்சிருக்கதால குழந்தை தூங்கறான்.
கைவலிக்குதுன்னு கை மாத்திக்க கூட
துணைக்கு ஆளில்லாம உக்காந்திருந்தேன்.


11/2 மணி நேரம் கழிச்சி நர்ஸம்மா,”அடுத்து
நீங்கதான் உள்ள போகணும்னு” சொன்னாங்க.
குழ்ந்தையை காட்டினேன்.” சளி அதிகமா
இருக்குங்க, அதனால ஜுரமும் விடாம
இருக்கு. 2 நாள்ல குறைஞ்சிடும். இந்த
மருந்தை 4 மணி நேரத்துக்கொருமுறை
கொடுங்க,” அப்படின்னு டாக்டர் சொன்னார்.


வெளியே வந்து மருந்து, டயப்பார்
எல்லாம் வாங்கிகிட்டு மணியை பார்த்தா
மணி 12. வீட்டுக்கு போக எப்படியும் அரை
மணி நேரம் ஆகும். அவசரத்துல இரண்டு
இட்லி மட்டும் சாப்பிட்டு வந்தேன். இனி
போய் தான் சமைக்கணும். குழந்தை
அழாம இருக்கணுமேன்னு நினைச்சுகிட்டே
ஆட்டோவில ஏறினேன்.

வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து புள்ளைய
இடுப்புல வெச்சுகிட்டே கிச்சனுக்கு ஓடினேன்.
அதுக்குள்ள புள்ள பசிக்கு அழுக சமாதனம்
செஞ்சுகிட்டே மிச்சமிருந்த இட்லியை சூடாக்கி
ஊட்டி மருந்து கொடுத்தேன்.

”நீ இப்படி படுத்துக்க ராசா, அம்மா உம்
பக்கத்துல உக்காந்துகிட்டே காய் நறுக்குவேனாம்,”
அப்படின்னு சொல்லி கீழ படுக்க வெச்சதுதான்
தாமசம் வீல்னு அழ ஆரம்பிச்சான்.


”இனி என்னிய விட்டு இறங்க மாட்டான்.
நான் எங்க சமைக்கறது??!!! நான் சின்னபுள்ளையா
இருந்தப்ப எனக்கு உடம்பு சரியில்லாட்டி அம்மா
ஆஸ்பத்திரி போவாங்க. அம்மா வந்து கஷ்டபடக்கூடாதுன்னு
சமைச்சு வெச்சு, மத்த வேலைகளும் பாத்துகிட்ட
அப்பத்தா ஞாபகம் ஏனோ வந்துச்சு எனக்கு.

கண்ணுல கரகரன்னு ஓடற கண்ணீரோடு குழந்தைய
மடியில போட்டு தூங்க வைக்க ஆரம்பிச்சேன்.

20 comments:

Ungalranga said...

//கண்ணுல கரகரன்னு ஓடற கண்ணீரோடு குழந்தைய
மடியில போட்டு தூங்க வைக்க ஆரம்பிச்சேன்.//

ஒரு பெண்ணாய் இருந்தால்தான் வலியை உணரமுடியும் என்றில்லை..அப்படி கற்பனை செய்தாலே எனக்கு வலிக்கிறது..

:( அருமையான கதை..!

Pandian R said...

இதுபோன்ற நினைவுகள்தான் வாழ்வை சிறக்க வைக்கிறது. அர்த்தமான பதிவைக் கொடுத்ததற்கு நன்றி.

கோபிநாத் said...

யப்பா...எங்க ஆரம்பிச்சி எப்படி முடிச்சிங்க...கலக்கல் ;)

Rajalakshmi Pakkirisamy said...

hmmm

pudugaithendral said...

நன்றி ரங்கன்

pudugaithendral said...

இதுபோன்ற நினைவுகள்தான் வாழ்வை சிறக்க வைக்கிறது. //

ஆமாம் ஃபண்டு,

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

கலக்கல்//

நன்றி கோபி

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ராஜலட்சுமி

S.Arockia Romulus said...

கூட்டுக்குடும்ப‌மே கோயில்...............

Vidhya Chandrasekaran said...

அழுத்தமான பதிவு:(

pudugaithendral said...

வருகைக்கு நன்றி ரோமுலஸ்

pudugaithendral said...

நன்றி வித்யா

நர்சிம் said...

இந்த சப்ஜெக்ட்டில் பிடித்த எழுத்து நடையில் எழுதி இருக்கிறீர்கள்.

அமுதா said...

:-(( இது பல இடங்களில் நடக்கும் உண்மை என்று எண்ணும் பொழுது மனம் வருந்துகிறது

pudugaithendral said...

ஆமாம் ஃப்ரெண்ட்,

கொஞ்சம் வித்யாசமா ட்ரை செஞ்சு பாக்கலாமேன்னு எழுதினேன்

pudugaithendral said...

ஆமாம் அமுதா,

இது சர்வ சாதாரணமான நிகழ்வு.
அதில் எனக்கும் வருத்தமே.

வருகைக்கு நன்றி

அன்புடன் அருணா said...

அப்பத்தாக்கள் இப்போதெல்லாம் தனியாகக் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள்...புதுகை.

Yousufa said...

அக்கா,

தொடர்பதிவுக்கு உங்களை அழைத்திருக்கிறேன் இங்கே, எழுதுவீர்களா?

pudugaithendral said...

அப்பத்தாக்கள் இப்போதெல்லாம் தனியாகக் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள்..//

அவங்களும் தனிக்குடித்தனம் நடத்தறாங்கப்பா. வசுதேவ குடும்பகம் மாதிரி உலகமே தனிக்குடித்தனம் தான்.

:(( :))

pudugaithendral said...

கோத்துவிட்டாச்சு. பதிவு 2 நிமிஷத்துல வருது ஹுசைனம்மா