Friday, March 12, 2010

கிரிக்கெட்டும் நானும்!!

அப்பொழுதெல்லாம் ரேடியோவில் வரும் கமெண்ட்ரிகள்தான்.
நாம் கேட்கும் நாடகமோ,சினிமா பாடலோ கேட்க முடியாமல்
போகும். 10 வயதில் கிரிக்கெட் மீது அவ்வளவு மோகம்
இருந்ததில்லை. எனது பள்ளி நண்பன் ஸ்ரீதர் வீட்டில்(ஸ்ரீதரின்
தாத்தா தான் எனக்கு ட்யூஷன் வாத்தியார்) ராஜா அண்ணா,
சிவா அண்ணா, ஸ்ரீதர், அவன் தம்பி சங்கர், தாத்தா எல்லோரும்
கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே வீட்டின் முன் விளையாடும்
காட்சி பாத்திருக்கிறேன். இப்படித்தான் கிரிக்கெட் அறிமுகம்.

அப்பாவுடன் சேர்ந்து அவரின் நண்பர் வீட்டில் கிரிக்கெட் மேட்ச்
பார்க்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது கொஞ்சம் விரும்ப
ஆரம்பித்தேன். அப்பாவே வீட்டில் டீவி வாங்கிய பிறகு
ஆரம்பமானது ஆட்டம்.

சாப்பிட எப்போ வருவீங்க? எனும் அம்மாவின் கேள்விக்கு
”இன்னிங்க்ஸ் முடிஞ்சு லன்ச் ப்ரேக்ல” என கோரஸ் போடுவோம்
நான், அப்பா, தம்பி மூவரும். அந்தப் பக்கம் இந்தப்பக்கம்
நகர மாட்டோம். இதில் அப்பாவுக்கு ரன் ரேட் உடனுக்குடன்
நாங்கள்தான் சொல்ல வேண்டும். (கணக்கு பாடம்
அப்போதும் நடக்கும்ல) எப்படி ரன் ரேட் கண்டுபிடிப்பதுன்னு
சொல்லிக்கொடுத்தது அப்பா தான். ஓவரை எடுத்திருக்கும்
ரன்னில் வகுத்தால் ரன் ரேட் வரும்.

சிமெண்ட் தரைதான் எங்க வீட்டில். அந்தத் தரையில்
சாக்பீஸ் வைத்து ரன் ரேட், ஸ்கோர் எல்லாம் எழுதி
வைத்து அடுத்து விளையாடுபவர்கள் ஜெயிக்க முடியுமா
என சர்ச்சை செய்து.... என அந்த நேரம் களேபரமாக
இருக்கும் வீடு. அம்மா வேறு வழியில்லாமல் தூங்கப்போய்விடுவார்.
ஹாலில்தான் டீவி. அவ்வாவின் கட்டிலும் அங்கேதான்.

வேற வழியில்லாமல் திட்டிக்கொண்டே கிரிக்கெட் பார்ப்பார்.
”பிடிடா, பிடிடா.. சும்மா தண்டத்துக்கு நிக்கறான். ஓடினா
என்ன? ” உன்னால தான் கேட்ச் போச்சு, நீ வீட்டுக்கு போய்
சாப்பிட்டு தூங்கு” இதெல்லாம் அவ்வாவின் கமெண்ட்ஸ்.
சாம்பிளுக்கு கொஞ்சம் தான் கொடுத்திருக்கேன்.

கிரிக்கெட் பைத்தியம் முத்திப்போய் ஒவ்வொரு வீரரைப்
பற்றிய குறிப்புக்கள் வயது, விளையாட ஆரம்பித்தது,
எவ்வளவு ரன் கள் எல்லாம் விவரமாக எழுதி படத்துடன்
ஒரு நோட்புக் தயார் செய்திருந்தேன். அப்பா பார்த்து
ரொம்ப சந்தோஷப்பட்டார். அடுத்த முறை மேட்ச்
ஆரம்பிக்கும் பொழுது இதே போன்ற விவரங்கள் டீவியில்
தெரியும் பொழுது ஏதும் விட்டுப்போயிருந்தால் குறித்து
வைத்துவிடுவேன்.


எனக்கு கிரிக்கெட் விளையாடுவதை விட பார்க்க
ரொம்ப பிடிக்கும். அப்பா சொல்லிக்கொடுத்துதான்
வ்யூகம் எப்படி அமைக்கிறார்கள் என்பதெல்லாம்
தெரியும். அப்பாவும் தம்பியும் வீட்டிலேயே
கிரிக்கெட் விளையாடி அம்மாவுக்கும், பாட்டிக்கும்
டென்ஷன் ஏற்றுவார்கள்.


எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்றால்
அது சந்தேகமே இல்லாமல் கபில் தேவ்தான்.
ஆல் ரவுண்டர். பல மேட்சுகளில் முதல் ஓவர்
கபில்தன். கண்டிப்பாக மெய்டன் ஓவர் + ஒருவிக்கெட்
ஆவது எடுத்துவிடுவார். அப்படியானால் அந்த
மேட்சில் நாம் ஜெயித்துவிடுவோம் என்பது
என் செண்டிமெண்ட். அதற்காக கபிலுக்கு
பிரார்த்தனை நடக்கும்.

தன்னருகில் வரும் பந்தை கீழே குனிந்து
எடுக்காமல் கால்மேலே ஓடிவர
வைத்து கபில் எடுக்கும் பாணியே அழகு.




எந்த வருடம் என ஞாபகம் இல்லை. பொங்கல்
அன்று கிரிக்கெட் மேட்ச். அம்மாவிடம் திட்டு
வாங்கிக் கட்டிக்கொண்டு பழியாக டீவி முன் இருந்தோம்.
மேட்ச் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கபிலின்
பேண்ட் கிழிந்துவிட ஒரு பெரிய துணியை பின்னாடி
செருகிக்கொண்டு அந்த மேட்சில் ”பொங்கல் ஷாட்”
அடித்து வெற்றி வாகை சூடினார்.

கபில்கிரிக்கெட்டுக்கு டாடா காட்டிய அன்றோடு
நானும் கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.

கபில் வீட்டிற்கு வந்து பாயசம் குடித்த மாதிரி
எல்லாம் தம்பி கனவு கண்டிருக்கிறான். :)

அடுத்து எனக்கு பிடித்தது ஸ்ரீகாந்த். மூக்கை மூக்கை
உறிஞ்சிக்கொண்டு, அடிக்கடி ஆகாசத்தை பார்த்துக்
கொண்டு என அவரது மேனரிசங்கள், வந்தமோ
அடிச்சமோ, போனமா எனும் பாணி எல்லாம்
ரொம்ப பிடிக்கும். ஆதித்ய ஹுருதயம் எனும்
சூரிய வழிப்பாட்டு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டுதான்
அவர் விளையாடுவதாக தெரிந்து எங்கும் எப்போதும்
பிரார்த்திக்கலாம் எனும் எண்ணம் எனக்கு வந்தது.
சீகா என செல்லப் பெயர் இவருக்கு வைத்திருந்தேன்.



சென்னையில் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில் ஒரே
நாளில் 14 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை புரிந்த
நரேந்த்ர ஹிர்வானியை மறக்க முடியுமா??


ஆஸ்த்ரேலிய கேப்டன் ஆலன் பார்டர் மிக இஷ்டம்.



DAVID BOON இவரை மறக்கவே முடியாது. அந்த பெரிய
உருவத்தை எடுத்துக்கொண்டு செம ஆட்டம்.


இலங்கையின் துலிப் மெண்டிஸ் பிடிக்கும்.


இந்தியா-பாகிஸ்தான் இரண்டும் தான் ஃபைனல்ஸுக்கு வரவேண்டும்
என பலரும் விரும்புவார்கள்.

இம்ரான் மிக மிக பிடித்த ஆட்டக்காரர்.


முதாஸர் நஸர். இவருக்கு நெற்றியில் நீளமாக
திருமண் போட்டுவிட்டால் ஸ்ரீரங்கம் பக்கம் அனுப்பி
வைக்கலாம். நீண்ட மூக்கு இந்திய முகம்.


மறக்க முடியாத இன்னொரு வீரர் sir-richard-hadlee.
விக்கெட்டை வீழ்த்தும் மந்திரத்தை பந்துக்கு சொல்லிக்
கொடுக்கும் மந்திரக்காரர் என பத்திரிகைகள் புகழாரம்
சூட்டும்.



இந்த சிரிப்பில்தான் ஹிந்தி நடிகை நீனாகுப்தா மயங்கி
போயிருக்க வேண்டும். அட்டாகசமாக நடந்து வந்து
அனாயசமாக ஆடும் viv-richards.




எத்தனையோ நினைவுகள் கிரிக்கெட்டை பற்றி. ஒவ்வொரு
ஆட்டக்காரரும் என்னவோ என் சொந்தம் போல வேறு
நாடாக இருந்தாலும் அவர்களது ஆட்டத்தை ரசித்திருக்கிறேன்.

அதன் பிறகு கிரிக்கெட் பார்க்க மனதே இல்லை. கபில் இல்லாத
மேட்சை என்ன பார்ப்பது? எனும் எண்ணம் தான்.” பூஸ்ட் இஸ்
த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி” என கபிலுடன் விளம்பரத்தில்
வந்த சச்சின் இப்போதும் ஆடி இந்தியாவுக்கு பெருமை
சேர்க்கிறார். பாராட்டுக்கள்.

இன்று IPL மேட்சுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.
இன்றோடு பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் பிள்ளைகள்
இருவரும் திருவிழாவுக்கு தயாராகிவிட்டார்கள்.
DECCAN CHARGERS, MUMBAI INDIANS, CHENNAI SUPER KINGS
இந்த மூன்று அணிக்கும் தான் வீட்டில் சப்போர்ட்
நடக்கிறது.

அடுத்த தலைமுறை கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்து
விட்டது.


என்னையும் இழுத்து டீவி முன் உட்கார வைத்துவிட்டான்
மகன். முதல் பந்து கபில் போல் விக்கெட் எடுத்தார்
சமிந்தா வாஸ். என் நினைவுகள் பின்னோக்கி ஓடின.


18 comments:

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முதாஸர் நஸர். இவருக்கு நெற்றியில் நீளமாக
திருமண் போட்டுவிட்டால் ஸ்ரீரங்கம் பக்கம் அனுப்பி
வைக்கலாம். நீண்ட மூக்கு இந்திய முகம்//

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க. சூப்பர் பதிவு

ஐ நான் தான் first கமெண்ட்

தமிழ் அமுதன் said...

good post..!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இரண்டு விதயங்கள் தெரிகின்றன உங்கள் கிரிக்கெட் ரசனையின் மூலம்..

உங்களுக்கு வயது 40 ப்ளஸ்...

நீங்கள் இப்போது கிரிக்கெட் ரசித்துப் பார்ப்பது இல்லை !

இன்னொன்று..அது யாருங்க அவ்வா? எழுத்துப் பிழையா?

pudugaithendral said...

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க//

:))

நீங்களேதான் மீ த பர்ஸ்ட்

pudugaithendral said...

நன்றி ஜீவன்

pudugaithendral said...

உங்களுக்கு வயது 40 ப்ளஸ்...//

ஏன் அதற்கு குறைந்த வயதினர் இந்த ஆட்டக்காரர்களை பார்த்திருக்க வாய்ப்பே இல்லையா??


நீங்கள் இப்போது கிரிக்கெட் ரசித்துப் பார்ப்பது இல்லை !//

கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்னு சொல்லியிருக்கேன். பார்த்தால்தானே ரசித்து பார்க்க முடியும்.

பதிவை நன்றாக படித்து பாருங்கள் அறிவன்

settaikkaran said...

உங்களது ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போது, எப்படி இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாரை நிறைய சாப்பிடுவீர்களோ? :-))

pudugaithendral said...

வல்லாரை நிறைய சாப்பிடுவீர்களோ?//

சின்ன வயசுல ஞாபக மறதிக்காக அப்பாகிட்ட நிறைய்ய திட்டு வாங்கியிருக்கேன். இந்த ஞாபக மறதியால நீ ரொம்ப அவதிப்படப்போற எனும் ஆசிர்வாதம் மாத்திடிச்சோ என்னவோ!!! :))

வருகைக்கு நன்றி சேட்டைத்தம்பி

சுரேகா.. said...

கலக்கலா..கிரிக்கெட்டை சுத்திவந்திருக்கீங்க! விவ்.ரிச்சர்ட்ஸ் , பூன் கமெண்ட் அருமை! :)

ஆஸிஷ் , அம்ருதாவுக்கு விடுமுறை வாழ்த்துக்கள்! :))

ஹுஸைனம்மா said...

நிறைய விஷயங்களை ஞாபகப்படுத்திட்டீங்க. அதெல்லாம் ஒரு காலம்!!

விவ் ரிச்சர்ட்ஸின் அந்த சம்பா டைப் டான்ஸும் பார்க்க சூப்பராருக்கும்!! ரவி சாஸ்திரியின் அந்த ஆல் சிக்ஸ் ஓவர், டேவிட் பூனின் தொடர்வசைமாறிப் பொழிதல் எல்லாம் கொசுவத்தி சுத்துது!!

pudugaithendral said...

வாங்க சுரேகா,

நலமா? வாழ்த்தை சொல்லிடறேன்.
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கொசுவத்தி உங்களுக்கும் சுத்த ஆரம்பிச்சிடிச்சா ஹுசைனம்மா?
சந்தோஷம்

சாந்தி மாரியப்பன் said...

பதிவு சூப்பரா இருக்கு தென்றல். அதென்னவோ,கிரிக்கெட்டில் நடந்த தில்லுமுல்லுகளுக்குப்பின் கிரிக்கெட் பார்ப்பதில் ஆர்வம் இல்லாம போயிட்டுது. இதோ இங்க பக்கத்துலதான் IPL மேட்ச். பாக்கப்போகணும்ன்னு தோணலை.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்..

உங்க கானகந்தர்வன் விகடனின் வரவேற்பறையில் பாராட்டப்பட்டுள்ளார்.

http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_16.html

பாச மலர் / Paasa Malar said...

ஒரு காலத்தில் கடைசி வரை ஆர்வம் மாறாமல் இருக்கும் என்று நினைத்த விஷயம்...இப்போது நேரமுமில்லை..ஆர்வமும் குறைந்து விட்டது...நல்ல ஃப்ளாஷ் பாக் கலா..இதைப் படித்ததும்

pudugaithendral said...

யுகாதி வேலைகளில் பிஸியா இருந்திட்டேன். நீங்க சொல்லித்தான் விஷயம் தெரியும்,
நன்றி அமைதிச்சாரல்

pudugaithendral said...

ஆமாம் பாசமலர்,

நானும் மாறமாட்டேன்னு நினைச்சிருந்தேன். பட்டுன்னு ஒரேநாள்ல மூட்டை கட்டி வெச்சிட்டேன்.

வருகைக்கு நன்றி

மங்களூர் சிவா said...

இரண்டு விதயங்கள் தெரிகின்றன உங்கள் கிரிக்கெட் ரசனையின் மூலம்..

உங்களுக்கு வயது 60 ப்ளஸ்...

நீங்கள் இப்போது கிரிக்கெட் ரசித்துப் பார்ப்பது இல்லை !

:))))))))))))

ஹி ஹி
சும்மா ஜோக்குக்கு