Wednesday, March 31, 2010

சிலேட்டுக்கு ஒரு கொசுவத்தி

பதின்மவயதுக்கு கொசுவத்தி, பொண்ணு பாக்க போனது/
வந்ததுக்கு கொசுவத்தி சுத்தறாங்க. ஆனா நாம் படிக்கும்போது
இருந்து இப்ப காணாம போன சிலேட்டுக்கு கொசுவத்தி
சுத்தலாம்னு ரொம்ப நாளா ஆசை. பதிவர் பட்டர்ஃப்ளை
சூர்யா சொல்லிகிட்டு இருந்தாரு. இப்ப ஆரம்பிச்சிட்டேன்.


நான் படிச்சது தமிழ் மீடியம் தான். 5 ஆம் வகுப்பு வரை
சிலேட்டு இல்லாமல் பள்ளிக்கு போக முடியாது. வீட்டுப்பாடம்
எழுதி அது அழிஞ்சிடாம இருக்கத் பைக்குள் வைக்காம
கஷ்டப்பட்டு கைவலிக்க தனியா தூக்கிக்கிட்டு போனது
எல்லாம் ஞாபகத்துக்கு வருது.

ஆங்கில மீடியத்தில் படித்த பொழுது எனக்கு இனிமை
நினைவுகள் இல்லை. என்னை அங்கு யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை.
எல்லாம் சைல்ட் ஜீஸஸ் பள்ளியிலே படித்து
பல வருட நட்பாக இருந்த கூட்டம், 6 ஆம் வகுப்பு
முதல் ராணி ஸ்கூலிலும் சேர்ந்தே இருந்தார்கள்.
தனித்துதான் அலைந்தேன். அதை விடுங்க.




சிலேட்டுக்கு வருவோம். 4ஆவது வரை எனக்கு
சிலேட்டு மட்டும் தான். நோட் புக் அதுவும் 80 பக்க
நோட் 4 நோட் அறிமுகம் ஆனது 4ஆவதில் தான்.
அதுவரை சிலேட்டு. எனாமல் சிலேட் மார்கட்டில்
இருந்தாலும் அம்மா ஏனோ கல்லு சிலேட்டு
வாங்கிக் கொடுத்தார் 1 ஆம் வகுப்பில். அது
பொணம் கணம் கணக்கும். ”வேற சிலேட்டும்மா!”
என்று கேட்டதுக்கு ,”அடுத்த வருஷம் பாக்கலாம்!!
என்பது தான் பதில்.

அந்த அடுத்த வருஷம் வரவேயில்லை. ச்சே சே
நான் பாஸானேன். ஆனா சிலேட்டு மட்டும் அம்மா
வாங்கிக்கொடுக்க மாட்டாங்க. ஒவ்வொரு வருஷமும்
நல்லா படிச்சு முதல் 3 இடத்தில் மதிப்பெண்
வாங்கினவங்களுக்கு ஆண்டுவிழாவுல சிலேட்டு
பரிசா கொடுப்பாங்க. 6ஆவது போன பிறகும்
வந்து என் முந்தைய வருட ப்ர்ஃபாமன்ஸுக்கு
சிலேட்டு பரிசா வாங்கின கொடுமை நடந்ததால
என் பள்ளிப்பருவம் கல்லு சிலேட்டோடவே
முடிஞ்சிடிச்சு. :(((




இந்த மாதிரி அழகா மணி வைச்சு சிலேட்டு
பெருமாள் கோவில் மார்கெட்டில் இருக்கும்
கீதா கபே வீட்டு கடையில் வெச்சிருப்பாங்க.
எல்லோரும் லைட் வெயிட்ல சிலேட்டு வெச்சிருக்க
எனக்கு மட்டும் கணமான சிலேட்டு.

அம்மா இந்த சிலேட்டு வாங்க சொல்லும்
காரணம்,” இந்தச் சிலேட்டுதான் பெரிசா இருக்கு,
எனாமல் சிலேட்டு துருபிடிச்சு எழுத முடியாம
போகுது” அது இதுன்னு.ம்ம்ம்

6 ஆம் வகுப்பு வந்ததும் தானே ப்ரோகரஸ்
ரிப்போர்ட் எல்லாம். அப்பல்லாம் காப்பரிட்சை,
முக்காப்பரிட்சை, முழுப்பரிட்சை எல்லாம்
சிலேட்டிலேயே எழுதியிருக்கோம்ல்...

கேள்விகளை டீச்சர் போர்டில் எழுதி வெச்சிருப்பாங்க.
அதைப்பாத்து பதிலை சிலேட்டில் எழுதுவோம்.
சிலேட்டில் எழுத இடமில்லாட்டி வரிசையில்
நின்னு டீச்சரிடம் கரெக்‌ஷன் செஞ்சு மார்க்கை சிலேட்டின்
இடது மூலையிலோ, வலது மூலையிலோ
எழுதி அனுப்புவாங்க. தொடர்ந்து எழுதுவோம்.
கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து
100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல
அதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி
அனுப்புவாங்க.

அதை கர்வமா தலையில வெச்சுகிட்டு வீட்டுக்குப்
போய் அப்பா, அம்மா வரும் வரைக்கும் அழிபடாம
பாதுக்காத்து காட்டுவது ஒரு சுகம்.

அந்த சிலேட்டை பாதுகாத்தல். சரி இண்ட்ரஸ்டிங்கா
இருக்கும். கல்லு சிலேட்டுக்கு கரி பூசுதல் அது
ட்ரெஸ்ல ஒட்டுதல், ”கோவப்பழம் போட்டு தேச்சா
சிலேட்டு கறுப்பாவே இருக்கும்னு!!” ஃப்ரெண்ட் சொல்ல
அம்மாகிட்ட அனத்தி கோவாப்பழத்துக்கு சொல்லி
வைக்கச் சொல்லுவது. எச்சி தொட்டு அழிக்கக்கூடாது
எனபதால் பக்கத்திலேயே ஈரத் துணி வெச்சு அழிச்சு
எழுதி படித்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.


DEO INSPECTIONக்கு வந்திருந்த பொழுது கணக்கு
டெஸ்ட் கொடுத்து அதை செஞ்சு DEO கிட்டயே
வெரி குட் வாங்கினது எல்லாமும் அந்த சிலேட்டில்தான்.

இந்தச் சுகம் இப்பத்த பிள்ளைங்களுக்கு இல்லை.
எல் கே ஜி யிலேயே நோட்புக் பென்சில்தான்.
என் சிலேட்டுக்கதை பிள்ளைகளுக்குச் சொன்னால்
“சிலேட்டில் பரிட்சை எழுதினீங்களா!!”” அப்படின்னு
ஆச்சரியாமா கேக்கறாங்க.

இதுவே ஆச்சரியம்னா ஆங்கில படிக்க ஆரம்பிச்சதே
4ஆம் வகுப்புல என்பதை எங்க போய்ச் சொல்ல.

சரி சரி அதை விடுங்க.

இப்ப இதைத் தொடர் பதிவாக்கணும்.
(அப்பாடி ஒரு தொடர் பதிவாவது நான்
ஆரம்பிச்சதா சரித்திரத்துல எழுதுவாங்கல்ல) :)))

தொடர நான் அழைப்பது

ஆயில்யன் பாஸ்

அப்துல்லா தம்பி


கண்மணி டீச்சர்


நர்சிம்

இதைத் தொடர வைக்கப்போகும் அன்பு நெஞ்சங்களுக்கு
என் நன்றிகள்.

20 comments:

ஆயில்யன் said...

ஆஹா சிலேட்டு பத்தியா? :))) கோவக்கா இலையை பறிச்சு பை நிறைய வைச்சுக்கிட்டு போனதுலேர்ந்துல்ல ஆரம்பிக்கணும்ம் !

Anonymous said...

ஐ! சின்ன புள்ளையில பல்பத்த திண்டது நினைவுக்கு வருதுங்க.. ஹா ஹா ஹா.... :)

எனக்கு எல் கே ஜி, யூ கே ஜி வரையிலும் சிலேட்டுதான்னு நினைக்குறேன்.. அதுலத்தான் அரபியும் தமிழும் எழுதி பழகினேன்.. சிலேட்டு குச்சியால அழகா அனா ஆவன்னா எழுதினா என்ன அழகா இருக்கும்!

Jayashree said...

கரிசலாங்கண்ணி இலைல கரிய வச்சு அரைச்சு சிலேட்டுலபூசி கருகருன்னு வெச்சு பலப்பமால எழுத ரொம்ப அழகா பளிச்சுனு இருக்கும்பா!! பலப்பம் மாவு பலப்பம்மா இருக்கணும் . பல்லு கூசற மாதிரி கிரீச் சத்தம் போடாம !! சிலேட்டு மட்டுமா கருப்பாகும் டிரஸ் முழுக்க, கை,மூஞ்சி, விரல் எல்லாமும் தான். அம்மாவிடம் ரெண்டு " மொத்து மொத்து" கரிச் சுசாபினு பேர் வேற!!

Ananya Mahadevan said...

//அப்பல்லாம் காப்பரிட்சை,
முக்காப்பரிட்சை, முழுப்பரிட்சை எல்லாம்
சிலேட்டிலேயே எழுதியிருக்கோம்ல்...//
ரிப்பீட்டேய்!!! ஆமா.. சண்முகன் அருள் நெறி பள்ளியில், மார்க்கை ஈரசாக்கில் எழுதித்தர, அதை பெருமையாக வெளிப்புறம் மார்க் தெரியும்படி பிடித்துக்கொண்டு அக்கிரஹாரம் முழுதும் நடந்து வர, செல்லவ்வா, 93தானா? பாக்கி 7 மார்க்கு எங்கே? 100 வாங்கி இருக்க வேண்டாமா? என்றதும் காத்து போன பலூன் போல புஸ்ஸ்ஸென்றாகிய என் முகம்!!! நல்ல நினைவுகள்!

pudugaithendral said...

வாங்க பாஸ்,

ஆரம்பிங்க. மீ த வெயிட்டீஸ்

pudugaithendral said...

வாங்க நாஸியா,

கலர் குச்சின்னுஒண்ணு விக்கும். அது 5 பைசா. அது வாங்கிக்கொடுக்கச் சொல்லி ரொம்ப கெஞ்சி கூத்தாடினா கிடைக்கும். நான் பலப்பம் சாப்பிட்டதே இல்லை. :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

ஆஹா உங்களுக்கும் கொசுவத்தி சுத்திட்டேனா ஜெயஸ்ரீ,

:))) வருகைக்கு நன்றி. நான் சிலேட்டுக்கு கரி, கோவைப்பழம் மட்டும்தான் போட்டிருக்கேன். அந்தக் கரி 1 நாள்ல பள்ளை இளிச்சிடும். அப்புறம் சிலேட்டு பழைய நிறத்துக்கே வந்திடும்.

வருகைக்கு நன்றி

ராவி said...

Smart phone, Touch Screen, Electronic Book Reader ..... என்று போகும் இந்த வேகத்தில் இன்னும் சில வருடத்தில் சிலேட்டு எல்லாம் மீயுசியத்தில் தான் பார்க்க வேண்டும். என் லிஸ்டில் பிரவுன் பேப்பர் அட்டை போட்டு ஓட்டும் Label, Reynolds Pen, Hero Pen எல்லாம் உண்டு.

Thamira said...

நான் இரண்டாம் வகுப்பு வரைக்கும் சிலேட்டு மட்டும் என்கிறாமாதிரி ஞாபகம். அப்படின்னா என்னை விட 4 வயசு அதிகமா இருக்கும் உங்களுக்கு. ஹிஹி..

(அப்புறம் சிலேட் ரொம்ப கனம்ங்கிறதுக்காக கணம்னு எழுதிட்டீங்களா என்ன? :-))

இராகவன் நைஜிரியா said...

10 படிக்கிற வரைக்கும், வீட்டில் மனப்பாடம் செஞ்சதை எழுதிப் பார்த்தது ஸ்லேட்டில்தான்...

அது ஒரு கனாக் காலம்..

Raghu said...

ஸ்ஸ்ஸ்ஸ்.....இப்ப‌டிதான் தொட‌ர்ப‌திவுலாம் ஆர‌ம்பிக்குதா?....:)

சாந்தி மாரியப்பன் said...

ஆயிரம்தான் மணி சிலேட்டு,எனாமல் சிலேட்டு வந்தாலும், என் ஓட்டு கல் சிலேட்டுக்குத்தான். பலப்பத்தை நாங்க குச்சின்னு சொல்லுவோம்.கலர்குச்சி,மாவுக்குச்சி,சாக்பீஸ், கடல்குச்சின்னு விதவிதமா எழுதுவோம்.கல்சிலேட்டுல எழுத்துக்களெல்லாம் என்ன அழகா இருக்கும் தெரியுமா!!!

சாந்தி மாரியப்பன் said...

தென்றலுக்கு ஒரு சேதி, இங்க வாங்க.

http://amaithicchaaral.blogspot.com/2010/04/blog-post.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//கடைசியில் எல்லா மார்க்கையும் சேத்து
100க்கு இவ்வளவு மார்க்குன்னு பெருசா சிலேட்டுல
அதுவும் தண்ணி தொட்டு சாக்பீஸால எழுதி
அனுப்புவாங்க//

வாவ்... நெஜமாவா. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. சும்மா சொல்ல கூடாது, நீங்க கொசுவத்தி expert , ஒத்துகிட்டே ஆகணும்

pudugaithendral said...

வாங்க ராவி,

ஹீரோ பேனா பெருமையைப் பத்தி என் பசங்க கிட்ட நிறைய்ய வாட்டி கொசுவத்தி சுத்தியிருக்கேன். இங்க் பேனா, ரீபில் இப்ப இதெல்லாம் நாம கொசுவத்தி சுத்தி பதிவா போட்டு வச்சாத்தான் வருங்கால தலைமுறைகளுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.

நிறைய்ய ஞாபகப்படுத்தி கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்க :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

அப்படின்னா என்னை விட 4 வயசு அதிகமா இருக்கும் உங்களுக்கு. ஹிஹி..//

நீங்க படிச்ச ஊரு , ஸ்கூல் இதனால நீங்க சிலேட்டு பாவிக்கும் வருடம் குறைஞ்சிருக்கலாம் ஃப்ரெண்ட். நான் என்ன நடிகையா வயதை மறைக்க. 1973ல பிறந்தேன். போதுமா. :))))

//கணம்னு எழுதிட்டீங்களா என்ன?//

நிறைய்ய ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோடத்தான் தமிழ் கத்துகிட்டதே. இந்த இரண்டு வருஷத்துல கொஞ்சம் தேறியிருக்கேன்னு அம்மா சொல்லுவாங்க. மன்னிக்கணும்

pudugaithendral said...

வாங்க இராகவன்,

எனக்கும் சிலேட்டில் எழுதி படிப்பது ரொம்ப பிடிக்கும். படிச்சதை அதில் தான் எழுதிபாத்திருக்கேன்.

இப்பவும் அதே முறையை வீட்டில் பின்பற்றினால் பேப்பரை மிச்சப்படுத்தலாமேன்னும் யோசிக்கிறேன். சிலேட்டு வெச்சு எழுத இப்பத்த பசங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது வேற.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

இப்ப‌டிதான் தொட‌ர்ப‌திவுலாம் ஆர‌ம்பிக்குதா?....//

யெஸ்ஸு..:))

வருகைக்கு நன்றி ரகு

pudugaithendral said...

மாட்டி விட்டுட்டீங்களே அமைதிச்சாரல். :))) கண்டிப்பாய் பதிவு போடுவேன்

pudugaithendral said...

சும்மா சொல்ல கூடாது, நீங்க கொசுவத்தி expert , ஒத்துகிட்டே ஆகணும்//

ஒரு ரகசியம் சொல்லவா. முன்பெல்லாம் தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள்னு பிரபலங்களை சந்தித்து அவங்களோட கலந்துரையாடுவாங்க. நம்மையும் யாராவது பேட்டி எடுத்தா எப்படி இருக்கும்னு கற்பனை செஞ்சு பாத்திருக்கேன். அப்படி கேக்கும் போது பதில் சொல்ல பழைய நினைவுகளை கொசுவத்தி சுத்திக்குவேன்.

இப்ப அதுவே பதிவாகிப்போச்சு :)))

வருகைக்கு நன்றி அ. தங்க்ஸ்.