Friday, April 16, 2010

சென்னையில் என் முகவரி

நங்கநல்லூரில் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு
கோடம்பாக்கத்துக்கு குடி பெயர்ந்த பொழுது அம்ருதாவுக்கு
4 மாதம் முடிந்திருந்தது. அப்பொழுதுதான் ஒரு பெரிய
புயலில் சிக்கி நான் உயிர் பிழைத்திருந்த நேரம்.

புதுவீட்டுக்கு பால்காய்ச்சி வந்த உடன் க்ரவுண்ட் ஃப்ளோர்
வீடாக இருக்க கிச்சனிலிருந்து செல்லும் கதவைத்
திறந்து வெளியே வந்தால் பக்கத்துவீட்டில் ஒரு
பெண்மணி சிநேகமாக சிரித்தார். “இங்க பாருடா
குட்டிப்பாப்பா” என தன் மகன்களை அழைத்து
காட்டினார்.

அவரின் கணவர் புகழ்பெற்ற கல்லூரி ஒன்றில்
பேராசிரியர். கொஞ்சம் இல்லை இல்லை அதிகமாகவே
கண்டிப்பானவர். தானுண்டு தன் வேலையுண்டு என
இருப்பார். அவரை மெல்லக் கரைத்தவள் அம்ருதா.
அம்ருதாவுக்கு மட்டும் அவர்கள் வீட்டில் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்ட் நடக்கும். அவள் என்ன செய்தாலும்
அவளை ஒன்றும் சொல்லக்கூடாது என்பது அந்த
அங்கிள் போட்டிருந்த சட்டம்.

அம்ருதா கொஞ்சம் தவழ ஆரம்பித்ததும் பின் கதவு
வழியாக தவழ்ந்தே பக்கத்து வீட்டுக்கு போய்விடுவாள்.
அதுவும் அங்கிள் கல்லூரி முடிந்து வீடு திரும்பியதும்
பின் பக்கம் சேர் போட்டுக்கொண்டு காற்று வாங்கிக்
கொண்டு பேப்பர் படிப்பது அல்லது மாலை டிபன்
சாப்பிடுவது பழக்கம். அப்போது அம்ருதா கங்காரு
குட்டிப்போல் அங்கிளின் லுங்கியில் அமர்ந்திருப்பாள்.
“நாங்க கூட இப்படி உங்க கிட்ட உக்காந்தது இல்ல!
அம்ருதா மட்டும் ஏன்?” என கேட்கும் பிள்ளைகளுக்கு
அங்கிளின் பதில் “அது பெண் குழந்தைடா தம்பி!”

அம்ருதா முதலில் அடி எடுத்து வைத்து நடந்தது
இவர்கள் வீட்டில் தான். அதில் நோபல் அம்மாவுக்கு
ரொம்ப சந்தோஷம். தனக்கு பெண்குழந்தை இல்லை
என்ற குறை தீர்க்க வந்தவள் அம்ருதா என அங்கிளுக்கும்
ஒரே குஷி.

நோபல் அம்மா என்றே அவரை நாங்கள்
அழைத்து பழகிவிட்டோம். அவரின்
பெயர் சொன்னால் அம்ருதாவுக்குத் தெரியாது.
நோபல் அம்மா ஆண்ட்டி என்பாள்.
அந்தக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினர் போல்
பல நேரம் அங்கே தான். இரவு ப்ரேயர்
சொல்லும் பொழுது கூட தானும் ஜபமாலையை
உருட்டிக்கொண்டு அங்கேதான் இருப்பாள்.

பிள்ளைகளுக்கும் அம்ருதாவுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்.
அம்ருதா வீட்டில் இருக்கும் நேரம் அப்பாவிடம்
திட்டுகிடைக்காது என்பது கூடுதல் சந்தோஷம். :))


அயித்தான் இலங்கைக்கு போன அந்த 1 1/2 வருடங்கள்
நான் தனியாக கழித்த பொழுது எனக்கு உதவிய
அன்பு நெஞ்சங்கள் இவர்கள். அந்தக் கொடுமையான
காலகட்டத்தில் என் காலில் கொதிக்கும் பால் கொட்டி
அவதிப்பட்டேன். சமைத்துக்கொடுத்து பார்த்து கொண்டது
நோபல் அம்மாதான். அங்கிளும் ஊருக்கு போயிருந்து,
அயித்தானும் ஊருக்கு போயிருந்தால் ஒரே கொண்டாட்டம்
தான் எங்களுக்கு. இருவருக்கும் பிடிக்காத சமையல்,
அதே சமயம் பிள்ளைகள் விரும்பும் சோறு சமைப்போம்.
அதுவும் நான் கொஞ்சம் செய்வேன். நோபல் அம்மா
கொஞ்சம் செய்வார். இருவீட்டு சாப்பாட்டையும்
சேர்த்து பிள்ளைகள் சாப்பிடுவார்கள்.

என்னுடன் பேச மட்டும்தான் அங்கிள் அனுமதித்திருந்தார்.
நோபல் அம்மா வைத்திருந்த பழைய கேஸ் அடுப்பை
மாற்றி, புது மிக்ஸி வாங்கி, தினமும் மஸ்கா அடித்து
அடித்து அங்கிளை வாஷிங் மெஷின் வாங்க வைத்தது
எல்லாம் என் சாதனைன்னு இப்பவும் நோபல் அம்மா
சொல்வாங்க. நோபல் அம்மா கிறிஸ்துமஸுக்கு
பலகாரம் செய்யும் பொழுது நானும் உதவுவேன்.
கேக் செய்யும் அழகே தனி. ருசியா இருக்கும். என்
பங்காக ஜாங்கிரி செய்து கொடுப்பேன்.

நோபல் அம்மாவின் பெரிய மகன் என் வளர்ப்பு மகன்.
பதினம் வயதுக்குழந்தையாக இருந்த அவனுக்கு
அப்பாவின் கண்டிப்பும் கறாரும் கோவம் வரும்.
அவனுடன் பேசி மனதை மாற்றுவேன். கோவம்
வந்தால் என் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து விடுவான்.
சென்றவாரம் போன் செய்து,”ஆண்ட்டி!
ஆஷிஷுக்கு முகப்பருவுக்கு ஏதோ மருந்து
கொடுத்தீங்களாமே! எனக்கும் சொல்லுங்க”
என கேட்டான் என் 25 வயது வளர்ப்பு மகன்.
அவனிடம் ஏதும் பேசவேண்டும் என்றால்
நோபல் அம்மா எனக்கு போன் செய்து
“நீங்களே உங்க வளப்புக்கு சொல்லுங்க,
நீங்க சொன்னா கேப்பான்!” என்று சொல்வார்.


எந்த ஒரு பெருநாளுக்கும் வாழ்த்து சொல்ல
நாங்கள் மறந்ததில்லை. அப்படியே எங்கள்
திருமணநாள், குழந்தைகள் பிறந்தநாள் என
வாழ்த்துக்கள் பரிமாறிக்கொள்வோம். சென்னைக்கு
வந்தால் இன்றும் நாங்கள் முதலில் செல்வது
நோபல் அம்மா வீட்டுக்குத்தான். “உன் ஃப்ரெண்ட்
வர்றாங்க, ஷ்பெஷலா செய்!” என ஆர்டர்
போட்டிருப்பார் அங்கிள். “இவரு சொல்லித்தான்
நான் செய்யணுமா, எனக்குத் தெரியாதாக்கும்”
இது நோபல் அம்மா. :))

சொந்தங்களே வீட்டுக்கு விருந்தினர் வருவதை
பிடிக்காத இந்தக் காலத்தில் 2 வருடங்கள்
பக்கத்துவீட்டில் இருந்த பழகிய நட்பு எங்க
வீட்டுக்கு வரலைன்னா பாத்துக்கங்க என்று
மிரட்டும் பாசம்...


சென்ற ஜூலையில் ஒரு திருமணத்திற்காக
நான் மட்டும் சென்னை வந்த பொழுது நேரே
சென்றது நோபல் அம்மா வீட்டுக்குத்தான்.
நோபல் அம்மா பிறந்தநாளுக்காக ட்ரெஸ்
வாங்கிப்போயிருந்தேன். “நீங்களும் வாங்கியிருக்கீங்களா!
நானும் உங்க பர்த்டேக்கு புடவை வாங்கி
வெச்சிருக்கேன்” என்றார். இன்னமும் என்னை
மறக்காமல் இருப்பது ஆண்டவனின் அருள்.

என்றும் நல்ல திடகாத்திரத்துடன், நல்ல
சந்தோஷத்துடனும் அந்தக் குடும்பம் வாழ
வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
ப்ரார்த்திக்கிறேன்.


16 comments:

வல்லிசிம்ஹன் said...

முகம் நக நட்பும் அகம் நகும் நட்பும் கிடைத்திருக்கிறது உங்களுக்கு தென்றல். எங்கள் வாழ்க்கையிலும் இது போல உதவிய அடுத்த வீட்டுக்க்காரர்கள் அநேகம். உங்கள் பதிவைப் பார்த்ததும், அவர்களை மறந்துவிடாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.வளர்ந்து பெருகட்டும் உங்கள் உறவு.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

ஆண்டவன் அருளில் நல்ல நட்புக்கள் எனக்கு. இப்போதும் வலையுலகைல் அது தொடர்கிறது. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

ராம்ஜி_யாஹூ said...

nice post thanks for sharing

pudugaithendral said...

thanks for your visit ramji_yahoo

எம்.எம்.அப்துல்லா said...

//நோபல் அம்மா ஆண்ட்டி //

:))

இராகவன் நைஜிரியா said...

நல்ல நட்புகள் வாழ்வின் உன்னதமான ஆதாரம். உங்களுக்கு கிடைத்த நட்பைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கின்றது.

செ.சரவணக்குமார் said...

அற்புதமான நட்பு. வாசிக்கும்போதே மனம் நெகிழ்ந்தது. நல்லா நட்பு என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

pudugaithendral said...

வருகைக்கும் ஸ்மைலிக்கும் நன்றி அப்துல்லா

pudugaithendral said...

ஆமாம் இராகவன்,

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி சரவணக்குமார்

Anonymous said...

Touched =))

சாந்தி மாரியப்பன் said...

டச்சிங்கான பதிவு.

மணிநரேன் said...

:)

pudugaithendral said...

thanks amaithicharal

pudugaithendral said...

thanks maninaren

மாதேவி said...

படித்ததும் மனம் நெகிழ்ந்தது.

நட்புக்கள் கிடைப்பதும் அவை தொடர்வதும் மிக்கமகிழ்ச்சி தரக்கூடியவை.