Thursday, April 22, 2010

சீத்தாராமன் தாத்தா ட்யூசன் சென்டர்

3ஆம் வகுப்பு படிச்ச போது நடந்த டெஸ்ட் ஒன்றில்
என் வகுத்தல் கணக்கு தப்பாகிப்போச்சு. அதுவரைக்கும்
டெஸ்டில் குறைந்த மார்க் எடுக்காததால் ரொம்ப
கஷ்டா இருந்துச்சு. வீட்டுக்குப்போய் அம்மாகிட்ட
ரொம்ப அழுதேன். ”என்னைவிட ஸ்ரீதர் மார்க் கூடம்மான்னு
சொல்லி அழுதேன்”. ஸ்ரீதருக்கு அவங்க தாத்தாதான்
ட்யூஷன் டீச்சர்னு தெரிஞ்சதும் எனக்கும் சொல்லித்தருவாங்களான்னு
கேக்க அம்மாவை தூதுவிட்டேன்.

பின்னாடித் தெருவில் அவங்க வீடு. அம்மாவுக்கும்
தெரிஞ்சவங்க தான். அதனால போய் கேட்க
தாத்தாவும் சரின்னு சொல்லிட்டார். தாத்தா கையில
பிரம்போட ட்யூஷன் நடத்திக்கிட்டு இருந்தார்.
வம்பை விலைகொடுத்து வாங்கிட்டோமோன்னு
இருந்துச்சு. வேணாம்னு சொன்னா மத்தளத்துக்கு
இரண்டு பக்கமும் இடி மாதிரி ஆகிடும். ஆனது
ஆகட்டும் கிளாசில் ஸ்ரீதரை பீட் செய்யணும்.

அங்க நிறைய்ய பசங்க குறைஞ்சது பத்து பேராவது
ட்யூஷன் படிச்சாங்க. பெரிய கிளாஸ் பசங்களும்
அடக்கம். சாயந்திரம் 6 மணிலேர்ந்து 8 மணிவரை
எல்லா சப்ஜக்டும் பாடம் நடக்கும். மனப்பாடம்
செஞ்சு அங்கயே சொல்லிடணும்.

தாத்தா செம ஸ்ட்ரிக்ட். கணக்கு சரியா போடலைன்னா
வீட்டுக்கு போக விடமாட்டார். நல்லா கத்துக்க
முடிஞ்சது. தாத்தா எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா
இருந்தார். பாடம் நடத்தும் போது கண்டிப்பாகவும்
அப்புறம் அன்பாகவும் அவரால இருக்க முடிஞ்சதை
இன்னை வரைக்கும் நானும் கடைபிடிக்கிறேன்.

என் பசங்களுக்கு பாடம் எடுக்கும்போது கறாரா
அம்மான்னு டிமிக்கி கொடுக்க முடியாது, இப்ப
நான் ஒரு டீச்சர். அப்படின்னு சொல்லி படிக்க
வைப்பேன்.

சரி தாத்தா ட்யூஷன் செண்டருக்கு வருவோம்.
அவங்க பேரப்பசங்க அங்க படிச்சாலும் ஷ்பெஷல்
ட்ரீட்மெண்டெல்லாம் கிடையாது. தப்பு செஞ்சா
அடிதான். கரண்ட் கட்டான ஹையான்னு ஒரு
சந்தோஷம் வரும் மனசுக்குள்ள. அந்த நேரத்தையும்
தாத்தாவிட மாட்டார். விடுகதை, மணக்கணக்கு,
வாய்ப்பாடை பாதியிலேர்ந்து கேப்பதுன்னு
வகுப்பு விடாம நடக்கும். அதனால் வாய்ப்பாடு
அப்பப்ப படிச்சு மறந்திடாம இருக்கணும்.

தாத்தாவை நினைக்கும் பொழுது மறக்காமல்
ஞாபகத்துக்கு வருவது அவங்க மருமக.
அவங்க வீட்டுல 4ம் பசங்க. பெரிய அண்ணா
ராஜா. அந்தக்கால நிழல்கள் ரவி மாதிரி இருப்பார்.
அதே ஹேர்ஸ்டைல், டிரெஸ் அப்படின்னு சூப்பரா
இருப்பார். இரண்டாவது சிவாண்ணா. அப்ப ஏதோ
ஹாஸ்டலில் தங்கி படிச்சார்னு நினைக்கிறேன்.
அப்புறம் என் வகுப்புத் தோழன் ஸ்ரீதர் அவன் தம்பி
பேர் மறந்துவிட்டேன்.

இப்படி வீட்டில் 4ம் பசங்களே இருந்ததால் நான்
என்றால் மாமிக்கு உயிர். வீட்டில் நடக்கும்
எந்த நிகழ்வுக்கும் நான் இருப்பேன். நல்ல நாள்
பெரியநாளுக்கு அவங்க வீட்டில் செய்யும் பலகாரங்கள்
எனக்காக வீட்டுக்கு வரும். ட்யூஷனில் கொஞ்சம்
ஃப்ரீயாக இருக்கும் நேரம் தாத்தா,” ட்யூஷன் முடிஞ்சதும்
மாமியை மறக்காம பாத்துட்டு போ” என்பார்.
அது வேறெதுக்குமில்லை. மாமி நெய் காய்ச்சி
இருப்பார். அந்த நெய்க்காயச்சும் பாத்திரத்தில்
அரிசிமாவு போட்டு சிவக்க வறுத்து, சர்க்கரை
சேத்து பொடி செய்வாங்க. நெய்பொடின்னு
பேரு. அது கூட எனக்காக எடுத்து வெச்சிருப்பாங்க.

நானும் இலங்கையில் இருந்த பொழுது சுத்தமான
எருமைப்பால் வாங்கி ஏடு எடுத்து நெய்க்காய்ச்சினேன்.
அந்த வாணலியில் மாமி ஞாபகமாய் நெய்பொடி
செய்தேன். அம்ருதாவுக்கு ரொம்ப பிடித்தது.
அவளுக்காக நெய்காய்ச்சும் பொழுது பொடி செய்வது
பழக்கமாக இருந்தது.

இங்கே வந்த பிறகு நல்ல பால் கிடைக்கவில்லை.
சமீபத்தில் நல்ல பால் கிடைத்து ஏடு எடுத்துவைத்து
வீட்டிலேயே நெய்காய்ச்சி பொடி செய்து கொடுத்தேன்.
அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம்.


சீத்தாராமன் தாத்தா பள்ளியில் ஆசிரியராக இருந்து
ஓய்வு பெற்றவர். ஒவ்வொரு ஆசிரியருக்கும் பாடம்
எடுக்கும் பாணி தனித்து இருக்கும். தாத்தாவிடம்
கண்டிப்பு படிப்புக்கு மட்டும்தான். மிரட்டலிலேயே
காரியம் சாதித்து விடுவார் தாத்தா.

பல நாட்களுக்குப் பிறகு அம்மாவிடம் தாத்தாவைப்
பற்றி கேட்ட பொழுது தாத்தாவுக்கு கண்பார்வை
இல்லாமல் போனதாகச் சொன்னார். தாத்தாவைப்
பார்க்க போயிருந்தேன். ஒரு சிங்கம் நடை தளர்ந்து
போயிருந்ததாக பட்டது. ஆசிர்வாதம் வாங்கிக்
கொண்டு வந்துவிட்டேன். தாத்தா இப்போது இல்லை.

இவரைப்பற்றி நினைக்காத நாளில்லை. அதே போல்
இன்னொரு ஆசிரியை. இவர் என் குழந்தையின்
ஆசிரியை. வாழ்நாள் இருக்கும் வரை மறக்கவே
முடியாத, மறக்கக்கூடாத ஒருவர். அவரைப்பற்றி
அடுத்த பதிவில்.

தொடரும் போட்டு ரொம்ப நாளாச்சு பாருங்க.10 comments:

Porkodi (பொற்கொடி) said...

நெய்ப்பொடியா.. பேரே வாசனையா இருக்கு.

புதுகைத் தென்றல் said...

வாங்க பொற்கொடி

சுவையும் அபாரம் செய்வதும் சுலபம். நெய்காச்சின பாத்திரம் இல்லாவிட்டாலும் வீட்டில் நெய், அரிசிமாவு, சர்க்கரை இருந்தா போதும் செஞ்சு ருசிக்கலாம்

வல்லிசிம்ஹன் said...

இந்த நெய்பொடி மாவுக்காகக் கழுகாக வீட்டில் காத்திருப்போம். வாராவாரம் வெள்ளிக்கிழமை நெய் காச்சும் நாள். அம்மாவிடம் நைச்சியம் செய்து கசண்டு எடுத்துக் கொண்டுவிடுவேன். மிச்சமிருக்கும் நெய்யில் அரிசிமாவு சர்க்கரை கலந்து சாப்பிட்டது அமிர்தம்.
இந்தத் தாத்தாவீடும் இப்ப்படித்தான் போல. இப்போது இவர் மாதிரி பார்க்க முடியும்னு எனக்குத் தோன்றவில்லை. நல்ல கொசுவர்த்தி தென்றல்.

Geetha Achal said...

பழைய நினைவுகள் எப்பொழுதும் இனிமை தான்...நெய்பொடி சூப்பர்ப்...இங்க படித்த பிறகு தான் நானும் அதனை எல்லாம் சாப்பிடு இருக்கேன் என்பதே நியாபம் வருகின்றது...நன்றி...

வெங்கட் நாகராஜ் said...

நெய்ப் பொடி - நல்லாவே இருக்கு. நாங்க கூட எங்கம்மா நெய் காய்ச்சும் போது பக்கத்திலேயே காத்திருப்போம் - அவங்க கடைசில அதுல தளிரான முருங்கை இலை போட்டு தருவாங்க - ரொம்ப நல்லா இருக்கும். ம்ம்ம்... பழைய நினைவுகள்.

வெங்கட் நாகராஜ்

அமைதிச்சாரல் said...

//என் பசங்களுக்கு பாடம் எடுக்கும்போது கறாரா
அம்மான்னு டிமிக்கி கொடுக்க முடியாது, இப்ப
நான் ஒரு டீச்சர். அப்படின்னு சொல்லி படிக்க
வைப்பேன்.//

நல்லாத்தான் இருக்கு. எங்க வீட்டிலும் இது உண்டு. ஆனா.. ஹெட்மாஸ்டர் வந்தாத்தான் கதை கந்தலாயிடும்.அப்புறம் recessதான்.

புதுகைத் தென்றல் said...

இப்போது இவர் மாதிரி பார்க்க முடியும்னு எனக்குத் தோன்றவில்லை. //

ஆமாம் வல்லிம்மா,
நெய்க்கசண்டு, நெய்யில் போடப்படும் முருங்கை இலைன்னு அது ஒரு இனிய காலம்.

வருகைக்கு நன்றி

புதுகைத் தென்றல் said...

இங்க படித்த பிறகு தான் நானும் அதனை எல்லாம் சாப்பிடு இருக்கேன் என்பதே நியாபம் வருகின்றது.//

ஓ சந்தோஷம் கீதா ஆச்சல்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் வெங்கட் நாகராஜன்,

முருங்கை இலைப் போட்டா நெய்யோட கணிசம் குறைஞ்சிடும்னு அவ்வா திட்டினாலும் விட மாட்டோம்ல, வீட்டுலயே முருங்கை மரம். இளசா இலை பறிச்சு வெச்சிருப்பேன்.

வாரா வாரம் வெண்ணெய்க்காரர் கொண்டு வந்து நெய் போடும்பொழுது எங்களுக்கு கிடைக்கும் கொசுறு வெண்ணெய் என பல சுகமான நினைவுகள்

புதுகைத் தென்றல் said...

ஹெட்மாஸ்டர் வந்தாத்தான் கதை கந்தலாயிடும்.//

வாங்க அமைதிச்சாரல்,

நாங்க ஹெட்மாஸ்டரை பாடம் எடுக்க விடமாட்டோம். :))
வருகைக்கு நன்றி