எங்க உறவுக்கார அக்கா ஒருத்தரை ரொம்ப வருஷம்
கழிச்சு பாத்தேன். அவங்களுக்கு ஒரே பொண்ணு.
அந்த பொண்ணை 5 வயசு பாப்பாவா பாத்தது.
இப்ப அந்த செல்லம் காலேஜ் படிக்குது. ரொம்ப
நாள் கழிச்சு பாத்ததுல சந்தோஷமா பேசிக்கிட்டு
இருந்தோம். ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தோம்.
”எம் பொண்ணு எப்பவும் கேர்ள்ஸ் ஸ்கூல், கேர்ள்ஸ்
காலேஜ் தான் கலா!! ஆம்பிளைங்களுடன் பேசவே
சான்ஸ் இல்ல! ரொம்ப ஸ்ட்ரிக்டா வளக்கிறேன்!”
அப்படின்னு சொன்னாங்க. எனக்கு ஒரே யோசனை.
”ஏங்கா உங்க பொண்ணை வேலைக்கு அனுப்பணும்னு
சொல்றீங்க! அப்ப கூட ஆண்களே இல்லாத
இடத்துக்குத்தான் அனுப்புவீங்களான்னு??” கேட்டேன்.
அவங்களுக்கு ஒரு மாதிரி ஆகிடிச்சு. எனக்கு
அந்தப் பொண்ணை நினைச்சு மனசு ரொம்ப வருத்தம்.
அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை.
கணவன் - மனைவி உறவில் ஆரம்பம் நட்பாகத்தான்
இருக்க வேண்டும். அப்போதுதான் சரியான புரிதல்
ஏற்படும்.
இதை கொஞ்சம் விவரமா பாப்போம்.
ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எதிர்பாலினருடன்
தொடர்பே இருக்கக்கூடாது என பொத்தி பொத்தி
வளர்த்தால் அலுவலகத்தில் வீட்டில் பிரச்சனை
ஏற்பட சாத்தியங்கள் அதிகம்.
வீட்டில் ஒரே ஆண்குழந்தை என்று வைத்துக்கொள்வோம்.
உடன் விளையாட அக்கா, தங்கை இல்லாத பட்சத்தில்
அவர்களுடன் விட்டுக்கொடுத்து வாழத்தெரியாது.
பெண்ணின் பிரச்சனை தெரியாது, புரியாது. அவளின்
வருத்தங்கள் புரிந்துகொள்ள முடியாது. வெளியிலும்
அவனுக்கு நல்ல பெண் நட்பு (நட்பு மட்டுமே)
கிடைக்காத பொழுது சுத்தமாக பெண்வாசனையே
இல்லாமல் தன் தாயையை வைத்து மட்டுமே
பெண்களை எடை போடுவான்.
இப்படி பட்ட சூழ்நிலையில் வள்ர்ந்து
வேலைக்குச் செல்லும் பொழுது அங்கே சக
பணியாளராக பெண்ணோ, அல்லது உயரதிகாரியாக
பெண்ணோ இருந்தால் அந்த சூழ்நிலைக்கு தன்னை
அட்ஜஸ்ட் செய்து கொள்வது கஷ்டமாகிவிடும்.
இதேதான் பெண் குழந்தைகளுக்கும். எல்லோரும்
தன் தந்தையைபோல நல்லவர்/கெட்டவர் என்ற
முடிவுக்கு பெண் வந்துவிடுவாள். அதே கோணத்தில்
பார்த்து பார்த்து பிரச்சனை ஆகிவிடும். வேறு
விதமாக கூட ஆண்கள் இருப்பார்கள் என்று புரியாததற்கு
காரணம் ஆண்களிடம் பழக்கம் இல்லாமல் இருப்பது.
ஆண்களே சுற்றி இல்லாத சூழலில் வளர்ந்த
காரணத்தால் அலுவலகத்தில் தன்னை
பொறுத்திக்கொள்ள இயலாமல் போய்விடும்.
புகுந்த வீட்டில் கணவனைத்தவிர வேறு
ஆண்மகன்கள் இருந்தால் அவர்களுடன் சரியாக
பேசத்தெரியாமல் போய்விடும்.
நம் குடும்ப உறவுகள் தவிர வெளியாருடனும்
பழகத்தெரிவது அவசியம். மனிதர்களை படிக்க,
புரிந்து கொள்ள இது அவசியம்.
இதற்காக ஆண்களிடம் குழைந்து பேசி, மேலே
விழுந்து பழகச்சொல்வதாக நினைக்க வேண்டாம்.
ஆரோக்கியமான நட்பு இருபாலருக்கும் வேண்டும்.
அப்பொழுதுதான் எதிர் பாலினரை புரிந்து கொள்ள
முடியும். ”ஆண் பிள்ளைகளுடன் விளையாடினால்
காதறுந்து போகும்” என்று பயமுறுத்தியோ எங்கே
தன் மகள் காதல் வலையில் விழுந்துவிடுவாளோ
என்ற பயத்தினால் பொத்தி பொத்தி ஆண்வாசனையே
இல்லாமல் செய்வதனால் பெண்ணை காப்பாற்றுவதில்லை,
மாறாக அவளுடைய புரிதல் குணத்தை தடுத்து
நிறுத்துகிறோம்.
குறிப்பிட்ட வயதிற்கு பிறகு பொது இடத்தில் வாழ்வில்
அந்தப் பெண் ஆண்களை சந்தித்தாக வேண்டும்.
ஆண்களே இல்லாத உலகமோ, பெண்களே இல்லாத
உலகமோ சாத்தியப்படாத பொழுது சகஜமாக
பெண்/ஆண் குழந்தையை வளர்க்க வேண்டும்.
பொத்தி பொத்தி வளர்த்து அவர்களின் வாழ்க்கையை
கஷ்டமுள்ளதாக ஆக்க வேண்டாம். மலர்ந்து
நட்புக்கொண்டு ஆரோக்கியமான சமூகத்தை
உருவாக்க கை கொடுப்போம்.
19 comments:
பொத்தி வைப்பதைவிட, விபரங்களை விளங்க சொல்லி கொடுப்பது, நாம் அற்ற பொழுதுகளில் அவர்களை பாதுகாத்து கொள்ள அவர்களுக்கே உதவும்.
:)
வாங்க ஜமால்
ரொம்ப நாளைக்கப்புறம் மீ த பர்ஸ்டா வந்திருக்கீங்க.
பொத்தி வைப்பதைவிட, விபரங்களை விளங்க சொல்லி கொடுப்பது, நாம் அற்ற பொழுதுகளில் அவர்களை பாதுகாத்து கொள்ள அவர்களுக்கே உதவும்.
ஆமாம்.
பெண்கள் பள்ளி/கல்லூரிகளில் படித்தவர்களால் ஆண்களுடன் சகஜமாக பழக முடியாது என்பது மித்!
சொல்லப்போனால், அப்படி படித்தவர்கள் தைரியசாலிகளாகவும், தன்னம்பிக்கையுடையவர்களாகவும், தலைமைத்துவத்துடன் இருப்பதைவுமே பார்த்திருக்கிறேன்.
மேலும், /ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும்./ இது எதற்கு? மனிதர்களுடன் அட்ஜஸ்ட் செய்து வாழவே தெரியவேண்டுமே தவிர ஆண்களுக்கோ அல்லது பெண்களுக்கென்று தனியா இருக்க வேண்டுமா..?
மற்றபடி, இடுகையின் ஒருசில கருத்துகளில் மட்டும் உடன்படுகிறேன்.
நல்ல ’பதிவு’.
//பொத்தி வைப்பதைவிட, விபரங்களை விளங்க சொல்லி கொடுப்பது, நாம் அற்ற பொழுதுகளில் அவர்களை பாதுகாத்து கொள்ள அவர்களுக்கே உதவும்.//
என் கருத்தும் இதேதான். கோ-எஜுகேஷனில் ப்டித்தாலும் எத்தனை குடும்பங்களில் ஆண்/பெண்களிடம் பேசக்கூடாதுன்னு சொல்லியே அனுப்பறாங்க தெரியுமா!!!
வாங்க முல்லை,
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க நன்றி.
நன்றி வெயிலான்
என் கருத்தும் இதேதான். கோ-எஜுகேஷனில் ப்டித்தாலும் எத்தனை குடும்பங்களில் ஆண்/பெண்களிடம் பேசக்கூடாதுன்னு சொல்லியே அனுப்பறாங்க தெரியுமா!!!//
ஆமாம் அமைதிச்சாரல்,
என் மகன் பட்ட கஷ்டத்தை பதிவாக்கியிருந்தேன். வருகைக்கு நன்றி
ஆண்களை பிரிப்பதால், அவர்கள் முரட்டுதனமாகவும், பெண்கள் மிக மென்மையானவர்களாவும்..ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஏற்கும் தன்மை இல்லாதவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்...
நல்ல பதிவு கலாம்மா!!
வாழ்த்துக்கள்!!
ஆமாம் ரங்கன்,
வருகைக்கு நன்றி
ஆஹா...இது கருத்து சொல்லுற இடுகையா..தெரியாம வந்துட்டேன்...அடுத்த பதிவில் சந்திப்போம்:))
குசும்பன் அவர்கள் இந்த தலைப்பை வைத்ததற்காக ராயல்டி கேட்பார் :)
"அப்பாவைத் தவிர வேறு ஆண்மகனுடன் பழக்கமே இல்லை.
ஆண்களுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வது தெரியாமலேயே
போய்விடும். அந்த பெண்ணிற்கு திருமணம் ஆனாலும்
கொஞ்சம் கஷ்டம் தான். ஆண் நட்பே இல்லாத
காரணத்தால் கணவனிடம் நட்பு ஏற்பட வாய்ப்பில்லை."
அப்படி சொல்லிவிடமுடியாது தென்றல். முல்லை சொல்லறமாதிரி அது தனிப்பட்டவர்களை பொருத்தது. ஒரு திருமணத்தின் வெற்றி சரியான புரிதலிலும், மனமுதிர்ச்சி, வளர்ச்சியினாலும் . கல்யாணத்துக்கு முன்ன என் வீட்டில் அப்பாவை தவிற ஆண்கள் இல்லைங்க :)). பொத்தி வளக்கவும் வேண்டாம், ரொம்ப அளவுக்கு மீறிய சுதந்திரமும் வேண்டாம்.
வருகைக்கு நன்றி நிஜம்ஸ்
வாங்க சின்ன அம்மிணி,
அவர் பதிவுலேயே இந்த தலைப்பு நானும் நினைச்சிருந்தேன்னு சொல்லிட்டேன்.
:))
வருகைக்கு நன்றி
நல்ல இடுகை! என் சின்ன அக்காவுக்கு ஒரே பையன். ரொம்ப செல்லம். படித்து முடித்து 2 நாள் முன்னே ஒரு பன்னாட்டு ஐடி கம்பனில வேலை கிடைத்து சென்னைக்கு போனான். கூடவே அக்கா,அத்தான் எல்லாம்போய் வீடு எடுத்து தங்க வைத்து வந்து அக்கா என் கிட்ட நேத்து போனில் ஒரே அழுகாச்சி. அதுக்கு மேல அவன். எங்களுக்கு தான் சிரிப்பா வந்துச்சு. நீங்க சொல்வது மாதிரி தான் அவனை அம்மா செல்லமா வளர்த்து விட்டாங்க. ஹூம் பார்ப்போம். அவனுக்கு கல்யாணம் எல்லாம் ஆகும் போது அக்கா நிலமை+ அவன் நிலமை எல்லாத்தையும்.
பதிவின் எல்லா கருத்துக்கும் உடன்படுகிறேன்!
நல்ல பதிவுங்க புதுகை... இப்ப நெறைய மாறிடுச்சு... இன்னும் மாறனும் ஆனா...
varugaiku nandri buvana
நானும் பெண்கள் பள்ளி, பெண்கள் கல்லூரி என்றிருந்தவள்தான்.. என்னையும் வீட்டைத்தவிர ஆண் வாசனையே இல்லாமத்தான் வளர்த்தாங்க. நான் மேற்படிப்பு படிக்கும்போதோ வேலைக்கு செல்லும்போதோ அது ஒரு பெரிய விஷயமாக படவில்லை.. எது சரி, எது தவறு என்று கற்றுவித்த பிறகும், முதிர்ச்சி அடையும்போது எல்லாவற்றையும் இயல்பாக எதிர்கொள்வது எப்படி என்று நமக்கு தானாக தெரியும்.. :)
வேலைக்கு செல்லவில்லை என்றால் கூட ஆண்வாசனையே இல்லாமல் வளர்க்கப்பட்டவர்களுக்கு திருமணத்தில் எந்த பிரச்சினையும் எங்க வீட்லயாச்சும் பார்ககலை சகோதரி..
Post a Comment