”நாம நம்ம கடமையை விடாமச் செய்யணும்!!”
அப்படின்னு அம்மம்மா சொல்லிகிட்டே இருப்பாங்க.
எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கும். என்ன கடமையை?
விடாமச் செய்யணும்?
அம்மம்மா அன்பின் திரு உருவம். எல்லார்கிட்டயும்
அன்பாத்தான் இருப்பாங்க. மத்தவங்க கிட்ட குத்தம்
பாக்கத் தெரியாது. அடுத்தவங்க அவங்க மனசை
புண்படுத்தினாக்கூட “அவங்களுக்குத் தெரிஞ்சது
அவ்வளவுதான்னு!” மனசு வருத்தப்பட்டுகிட்டு
இருப்பாங்க. தவிர சண்டை போட மாட்டாங்க.
நான் சொன்னதை நீ எப்பவும் விடாம செய்யணும்!
அப்படின்னு அம்மம்மா சொன்னாங்க. யோசிச்சு
பாத்தா அதை நடைமுறைப் படுத்த ரொம்ப
சிக்கல் இருக்கும் போல இருந்துச்சு.
நாம் நம்ம கடமையைச் செய்யும்போது அதை
அடுத்தவங்க ஏத்துக்கணும், நம் மேலே அன்பு
காட்டணும்னு தோணுவது இயல்பு. அதுஇல்லாத
பட்சத்துல தூக்கி போட்டுட்டு போயிடலாம்னு
தோணும். இது சராசரி மனித இயல்பு.
ஆனா அம்மம்மா சொல்வது எதிராளி நம்ம கிட்ட
எப்படி இருந்தாலும் நீ அவங்களுக்குச் செய்ய
வேண்டியக் கடமையை விடாதே!
என்னம்மா இப்படி சொல்றீங்க. என் மனசு
கஷ்டப்படுமே.
நம்ம மனசு கஷ்டப்படும் என்பதற்காக நாம்
செய்யவேண்டியக் கடமையைச் சரியா
செய்யாட்டி நீ பாவத்தை சுமப்ப!! இது அம்மம்மா.
உன் கை சுத்தமா இருக்கணும். உன் வேலையை
நீ செஞ்சிடு. எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காம
உன் கடமையைச் செஞ்சிடு. காலம் பார்த்துக்கும்.
ஏதோ வேதாந்த கிளாஸ்ல இருக்கறாப்ல இருக்குன்னு
சொன்னாலும் அன்பா அம்மம்மா சொல்வதைக்
கேட்டாத்தான் என்னன்னு? ஒரு எண்ணம்.
ஆண்டவன் என்றால் கொஞ்சம் பயப்படும் ரகம் தான்.
நாளைக்கு கணக்கு சொல்லும்பொழுது என் கைசுத்தம்,
யார் என்ன செய்தாலும் நான் என் வேலையை ஒழுங்கா
செஞ்சிட்டேன்னு சொல்லாமேன்னு ஒரு எண்ணம்.
அம்மம்மா சொன்னது மனசுல அப்படியே பதிஞ்சு போச்சு.
அன்பா அம்மம்மா கேட்கும் போது அதை கேட்டு
நல்ல பேத்தியாக என் கடமையைச் செய்வதை முதல்
வேலையா ஆரம்பிச்சேன். அன்னியிலேர்ந்து
என் வேலையை மகளாக, அக்காவாக, டீச்சராக
என்ன செய்ய வேண்டுமோ அதை கரெக்டா செஞ்சிடுவேன்.
திருமணத்துக்கு அப்புறமும் அதே குணம் தொடர்ந்துச்சு.
யார் என்ன சொன்னாலும் என் வேலை என் பொறுப்பில்
இது நான் செய்திருக்க வேண்டுமானால் அதை
செஞ்சிருப்பேன். என்ன செய்யணும்னு தெரியாட்டி
அம்மம்மாவை கேட்டு செஞ்சிடுவேன்.
ஒரு சமயம் புகுந்த வீட்டில் பிரச்சனை. அன்பே உருவான
மாமா ஏதும் சொல்ல முடியாத நிலை. அயித்தானும்
பெரியவர்களை ஏதும் சொல்ல முடியாத நெருக்கடி.
மாம்பலம் ரெங்கநாதன் தெருவில் என் அப்பாவின்
எதிரில் வைத்து என்னை அவமானப் படுத்தியது
ஒரு சொந்தம். கோவம் வந்தது. அது என் இயல்பு.
பேசாமல் போய்விட்டேன். ஏச்சுக்கள் பேச்சுக்கள்
எல்லாம் சுவாதீனமாக எடுத்துக்கொண்டேன்.
2 வருடங்கள் கழித்து என்னைத் திட்டியவரின்
மகளுக்குத் திருமணம். அம்ருதாவை கருவுற்றிருந்த நேரமது.
என்னைவிடப் பெரியவர் என்றாலும் சடங்குகள்,
சம்பிரதாயங்கள் தெரியாது. அதனால் திருமணத்தை
நடத்த வேண்டியது என் பொறுப்பானது.
கருவுற்றிருந்த நேரத்தில் என் உடலையும்பாராமல் அயித்தானுடன் பைக்கில் சென்று ஒவ்வொரு
உறவினரையும் பத்திரிகை வைத்து அழைத்தேன்.(இல்லாட்டி
சொந்தக்காரங்க மரியாதைக்குறைவாக நினைப்பாங்க)2 வயது ஆஷிஷ், வயிற்றில் 5 மாத கருவோடு திருமணத்தை முன்னின்று
நடத்தி மாமா கையில் 50ஆயிரம் ரூபாய் மிச்சம் பிடித்துக்
கொடுத்தேன். மாப்பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு என்
உபசரிப்பு ரொம்ப பிடித்திருந்தது. ரொம்பவும் புகழ்ந்து
சொல்லியிருக்கிறார்கள். மாமாவுக்கு எப்போதும்
என் மீது அன்பு. அது அப்போது மிக அதிகமானது.
அம்ருதா பிறந்த பிறகு வீட்டிற்கு வந்து
சண்டைபோட்ட சொந்தம் வந்து சொன்ன வார்த்தை,” நீதான்
என் முதல் மருமகள், நீ என் சொந்தம் என்று
சொல்லிக்கொள்வதில் பெருமை,” என்றார்.
எந்த எதிர்பார்ப்பும் இருக்கக்கூடாதுன்னு
அம்மம்மா ஏற்கனவே சொல்லிக்கொடுத்திருந்ததால்
நான் ஏதும் பேசவில்லை. “வந்ததை வரவில்
வைப்போம், சென்றதை செலவில் வைப்போம்”
எனும் மனநிலை 25 வயதிலேயே வர காரணம்
அம்மம்மா.
அதன்பிறகு அந்த உறவினர் நான் இல்லாமல்
ஏதும் செய்ய மாட்டார். என்னை தான் எதற்கும்
முன்னிருத்துவார். என் மீது அதீத பாசம்
காட்ட ஆரம்பித்தார். அப்போதும் என் கடமை
எதுவோ அதை செய்தேன். எதையும் அம்மாவீட்டுக்கு
சொல்லும் பழக்கம் எனக்கு கிடையாது.
ஆனால் அந்த உறவினரே அம்மம்மாவிடம்
நடந்தவற்றைச் சொல்லியிருக்கிறார்.
என் அம்மம்மாவுக்கோ ரொம்ப மகிழ்ச்சி.
அம்மம்மா சொல்படி நான் கேட்டதற்கு.
எனக்கும் மகிழ்ச்சி, எங்க அம்மம்மா சந்தோஷமா
இருக்க நானும் காரணம் எனும் மகிழ்ச்சி அது.
கீதையின் சாரம் கடமையைச் செய் பலனை எதிர்பாரேதே.
ஆனால் அதை கீதாசாரமாக எடுத்துக்கொண்டு
நான் செயல்படுத்திருப்பேனா என்பது சந்தேகமே.
அம்மம்மாவின் வாக்கு அவர் சொன்ன விதம்,
இன்றும் மனதில் ஆழ பதிந்து விட்ட விஷயமா
இருக்கு.
என் கோபமோ, மன வருத்தமோ என் கடமையை
செய்ய என்னைத் தடுக்காமல் பார்த்துக்கொள்வேன்.
உடம்பு நல்லாயில்லாம இருந்தாலும் சரி,
கரண்ட் கட்டுன்னாலும் சரி, லைலா புயல் அடிச்சிகிட்டு
இருந்தாலும் சரி பதிவு போடுவதே என் கடமைன்னு
நான் இருக்க காரணம் அம்மம்மாதான்ன்னு
சொல்லிகிடறேன். :)))))
20 comments:
நீங்க கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருக்கீங்க
:) கடமை கண்ணியம் தட்டுப்பாடுன்னு சிலர் இருக்கோம் :))
தட்டுப்பாடுன்னு//
என்னத் தட்டுப்பாடு??!!??!!
கடசி லைன் பஞ்ச் சூப்பர்!
அருமையாக எழுதி இருக்கீங்க தென்றல். வாழ்த்துக்கள்.
உங்க கடமையுணர்ச்சியை நினைச்சு ஆனந்தக்கண்ணீர் வருது. இன்னிக்கு ஒரு பதிவுதான் வந்திருக்கு. நிஜமாவே உடம்பு சரியில்லியோ !!! :-))))
வாங்க அருணா,
பதிவு போடறதுல புயல்னு அடிக்கடி எல்லோரும் சொல்வதனால ஏதானும் சமாதனம் சொல்லணும்ல. அதான்.
வருகைக்கு நன்றி
நன்றி வித்யா,
இன்னைக்கு ஒரு பதிவுக்கு காரணம்
கரண்ட் கட் அமைதிச்சாரல். நேத்து அடிச்ச காத்து மழைக்கு இரவு 11 மணி வரை கரண்ட் இல்ல. நொந்து நூலா போய்க்கினு இருக்கோம். இதுல லைலா புயல் இன்னும் இரண்டு நாளைக்கு மழையாகொட்டப்போகுதுன்னு சொல்றாங்க. எப்படியோ ஏதோ உங்களை எல்லாம் காப்பாத்திடுது பாருங்க. :)))
நல்ல அழாகான விஷயம் சொல்லி இருக்கீங்க...முயற்சி செய்து பார்க்கிறேன்...
முதல் வருகைக்கு நன்றி கமலேஷ்,
ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். ஆனா பழகிட்டா நல்லா இருக்கும்.
ஆல் தி பெஸ்ட்
ரொம்ப நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க.
ஆனா அதை செயல் படுத்துவதுதான் கஷ்டம். :)
//கடமையைச் செய் //
இது கஷ்டமே இல்லை
//பலனை எதிர்பாரேதே//
இதைத்தான் practical ஆ digest செய்து கொள்ளுவது கஷ்டம்
அதிலும் நான் கொஞ்சம் "பசங்க" அன்பு மாதிரி. expecting appreciation :(
பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய் என்பதை அழகாக விளக்கிவிட்டீர்கள்.
அப்படின்னா கிவ் அண்ட் டேக்னா என்னங்க அர்த்தம்
நீங்க உங்க க்டமையை செய்துட்டீங்க..
என்ன வெயிலா இருந்தாலும் நாங்களும் எங்க கடமையை செய்யனுமில்ல்ல .. ஹிஹி பின்னூட்டம்.. :)
வாங்க ராவி,
எல்லோரும் நம்மளை அப்ரிசியேடோ அகஸப்டோ செய்ய மாட்டாங்க. அதுக்காக சில உறவுகளுக்கு நம் கடமையை நாம் செய்யாமல் இருந்திடக்கூடாது என்பது அம்மம்மா சொல்லிக்கொடுத்தது. செயல்படுத்துவது கொஞ்சம் இல்ல நிறைய்யவே கஷ்டம்
வருகைக்கு நன்றி
அப்படின்னா கிவ் அண்ட் டேக்னா என்னங்க அர்த்தம்//
வாங்க கோமா,
எல்லோரும் அந்த பாலிசியைக் கடைபிடிப்பது இல்லீங்களே! என் வீட்டுக்கு வந்தா என்னக் கொண்டு வர்ற, உன் வீட்டுக்கு வந்தா என்னத் தர்ற என்பது போலத்தானே சிலர் இருக்காங்க
வருகைக்கு நன்றி
கடமையைச் சரியா செய்த முத்துலெட்சுமிக்கு பாராட்டுக்கள்
நாங்களும் எங்க கடமைய செஞ்சிடறோம் (பின்னூட்டம்தான்)!
:)
thanks siva :)
சரியா சொன்னிங்க... வாழ்றது சில வருடங்கள்... மறுபடியும் இதே சொந்தமா பிறப்போமோ என்னமோ...நம்ம கடமைய நாம செய்யணும்...இது எல்லாருக்குமான படிப்பினை... இதை எனக்கு யாரும் சொல்லி தரலை... என்னோட அம்மா வாழ்த்து காட்டிட்டு இருக்காங்க... அதுல எனக்கு எப்பவும் பெருமை உண்டு... நல்ல பதிவுங்க புதுகை
நான் எங்க அம்மம்மாவை ஃபாலோ செஞ்சுகிட்டு இருக்கேன் புவனா
வருகைக்கு நன்றி
Post a Comment