Thursday, January 27, 2011

சம்பங்கி பூவும்.... தாத்தாவின் நினைவுகளும்.

காட்டுபாக்கம் தாத்தாவுக்கு காடுபோல தாடியாம் எனும் பாட்டை
ஞாபகப்படுத்தும் தும்பைபூ தலைமுடி + தாடி, கெச்சலான உருவம்
இதுதான் முருக்கூர் தாத்தா. அவரது உண்மையான பெயர்
மகாலிங்கம். நான் வைத்த பெயர் முருக்கூர். புதுகைக்கு அருகில்
இருக்கும் முருக்கூரில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்.
தான் மட்டுமே அங்கே இருப்பார். விடுமுறை கிடைத்தால்
தனது மகள்கள் இருக்கும் திருச்சிக்கும், புதுகைக்கும் வந்து
செல்வார். வேலை ஓய்வு பெற்ற பின் அம்மம்மாவிடம் இருந்தார்.

அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் அவரது நாள். கிணற்றில்
தடால் என வாளி போட்டு தண்ணீர் இறைத்து பல் தேய்த்து
அந்த தண்ணீரை குடித்துவிட்டு ஆரம்பிப்பார் நாமஸ்மரனை.
காளி... காளி பத்ரகாளி.. இப்படி அதிகாலையில் சொல்லி
அடுத்தவர் தூக்கத்தை கெடுத்துவிடுவதைப் பத்தி தாத்தா
யோசித்ததே இல்லை. காபி குடித்துவிட்டு பூக்கள் பறிப்பார்.
குளித்து பூஜை சாப்பாடு, காலாற நடை, கொஞ்சம் பூனைத்தூக்கம்
மதியம் 3 மணிக்கு காபி, பிறகு விரும்பினால் எங்கேயாவது
சென்றுவருவார்( என் அம்மாவை பார்க்க வருவார்)
இரவு ஒரே டிபன் தான் அதை மாற்றி ஏதும் வித்தியாசமாக
ஏதும் கொடுத்தால் சாப்பிட மாட்டார். கோபம் ஜாஸ்தி.
இரவு உணவு அரிசி உப்புமா + தயிர். அலுக்காமல் சலுக்காமல்
அவர் எப்படி தினமும் சாப்பிட்டாரோ!!!

ஆடி வெள்ளி, தைவெள்ளிக்கள் பூஜை அமலோகப்படும்.
கேசரி,வடை, சக்கரை பொங்கல் அம்மம்மா செய்துவைக்க
பூஜை செய்வார் தாத்தா. உள்ளூரில் இருக்கும் என் அம்மா
வரவேண்டும் என கண்டிப்பாய் சொல்லிவிடுவார். என் அம்மாவென்றால்
தாத்தாவுக்கு ரொம்ப இஷ்டம். என் அம்மம்மாவின் சிறுவயதிலேயே
அவரது அம்மா இறந்துவிட தாத்தா மறுகல்யாணம் எல்லாம் செய்து
கொள்ளாமல் உறவினர் உதவியுடன் தனது பிள்ளைகளை வளர்த்தார்.

என் அம்மா அவரது மிக அபிமான பேத்தி. அம்மாவுக்கு பிடிக்குமென
கிராமத்திலிருந்து பழுத்த விளாம்பழம் கொண்டு வந்து அதை தட்டி
வெல்லம் சேர்த்து பக்குவமாக பிசைந்து கொடுப்பார். அம்மா
வர முடியாவிட்டால் சின்ன மாமாவிடம் டப்பாவில் போட்டு கொடுத்தனுப்புவார்.
இலங்கையில் விளாம்பழம் ஜூஸ் கிடைத்த பொழுது அம்மாவிற்காக
வாங்கி வைத்திருந்து கொடுத்தேன். அம்மா அப்போது நினைத்தது
முருக்கூர் தாத்தாவைத்தான்.

நான் பிறக்கும் முன் தாத்தாவின் மனைவி கனவில் வந்து செய்தி
சொல்லி அவசர அவசரமாக என் அம்மாவை பார்க்க வந்தாராம்.
என் நட்சத்திரமும் ஜாதகப்பெயரும் அந்த அவ்வாவுடையது என்பதில்
தாத்தாவுக்கு ரொம்ப சந்தோஷம். என் மீதும் மிகப் பிரியம்.
என் பெயர் சொல்லி கூப்பிடமாட்டார். “காளி” என்றுதான் அழைப்பார்.
தாத்தாவுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது.



எனக்கு பூக்களில் வாசம் இருந்தால் தான் பிடிக்கும். சம்பங்கி பூ
மிக இஷ்டம். அம்மம்மாவீட்டில் சம்பங்கி இருந்தது. அதை
பறித்து,கோர்த்து கவரில் போட்டு சின்ன மாமாவிடம் கொடுத்தனுப்புவார்.
புதுகை டவுன் பக்கம் வரும் வேலை இருந்தால் சரி. இல்லாவிட்டாலும்
கண்டிப்பாக போய் கொடுத்துவிட்டு வா என சொல்வார். மாமா
கோவமெல்லாம் அவர் முன் செல்லாது. திட்டி அனுப்பி விடுவார்.
முனுமுனுத்துக்கொண்டே மாமா கொடுத்து செல்வார்.

அப்பா வடக்கு4ஆம் வீதியில் வீடு வாங்கிய பொழுது அதை கொஞ்சம்
மராமத்து செய்ய வேண்டி இருந்தது. காண்ட்ராக்டில் வேலை செய்ய
கொடுத்திருந்தோம். இங்கே வேலை நடப்பது தெரிந்து தாத்தா வந்து
விட்டார். வந்தவர் சும்மா இருக்காமல் தார்பாய்ச்சி கட்டிக்கொண்டு
கூரை மேலே ஏறி கொத்தனாருடன் சண்டை. “கலவை சரியில்லை!!
ஓடு சரியாவெக்கலை..” என சத்தம் போட்டிருக்கிறார். கலவை
கலக்கும் பொழுது தான் சொல்லும் ரேஷியோவில்தான் சிமெண்ட்+
மண் கலக்க வேண்டுமென சொல்ல அவன் அப்படி போட்டால் கட்டாதுன்னு
சண்டை. இவர் இருந்தால் வேலைக்கு வரமாட்டேன் என்று கொத்தனார்
போயே விட்டார். தாத்தாவை வீட்டை விட்டா விரட்ட முடியும்!!
மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் காண்ட்ராக்டரை
வரச்சொல்லி தாத்தா அவருடன் பேசி தாத்தா சொல்படி கட்டுவதாக்
சத்தியம் வாங்கிய பிறகுதான் தாத்தா அம்மம்மா வீட்டுக்கு கிளம்பினார்.
வடக்கு 4 வீட்டை விற்றபொழுது இந்த நினைவுகள் வருத்தத்தை
தந்தன.

எல்லா வேலைகளும் தெரியும் தாத்தாவுக்கு. வயல் வைத்திருந்ததால்
அந்த வேலைகளும் செய்வார். சிறுவாச்சூர் மதுரகாளி தாத்தாவின்
இஷ்ட தெய்வம். எப்போதும் சுறு சுறுப்பு, அளவான சாப்பாடு என
ஆரோக்கியமாக இருந்தார். இறக்கும் பொழுது 96 வயதென நினைக்கிறேன்.
பாலை விட பாலாடை ருசி என்பார்கள். என் அம்மாவிடம்
தாத்தாவிற்கு மிக அன்பு. கொள்ளுப்பேத்தியான என் மேலும் அவர்
அன்பில் செலுத்தியது அதை பெரும் பாக்கியத்தை கொடுத்தது
இறைவன் அருளே!!

கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு
தாத்தா நல்ல உதாரணம்.


17 comments:

ஷர்புதீன் said...

nostalgia!

சாந்தி மாரியப்பன் said...

//கோபம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இருக்கும்//

ரொம்ப கரெக்டுங்க..

சம்பங்கிப்பூ எனக்கும் ரொம்ப பிடித்தமானது. இங்கே எப்போதாவதுதான் கிடைக்கும். பொங்கலுக்காக பூ வாங்கப்போனப்ப கிடைச்சது. கவர்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கிட்டு, இன்னும் வாசனை புடிச்சிட்டிருக்கேன் :-)). காய்ஞ்சப்புறம் பவுடர் செஞ்சு குளிக்கும்போது உபயோகப்படுத்தலாம்.

துளசி கோபால் said...

தாத்தா நினைவுகள் அருமை.

எனக்குத் தாத்தாக்களின் அன்பு கிடைக்கலை. நான் வருமுன் அவர்கள் இருவரும் போய்விட்டார்கள்.

pudugaithendral said...

ஆமாம் ஷர்புதின்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

கவர்ல போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுக்கிட்டு, இன்னும் வாசனை புடிச்சிட்டிருக்கேன் :-)). //

ஆஹா...
வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க துளசி டீச்சர்,

எனக்கு அப்பாவழி தாத்தாக்கள் யாரையும் பார்க்க வாய்ப்பில்லை. அம்மாவழியில் தான் அந்த பாக்கியம்.

வருகைக்கு நன்றி

வெங்கட் நாகராஜ் said...

தாத்தா பற்றிய உங்கள் பகிர்வு அருமை. நன்றி.

ஹுஸைனம்மா said...

தாத்தாக்களின் அன்பு கிடைப்பதும் ஒரு வரம்தான். உங்களுக்குக் கூடுதலாக, கொள்ளுத் தாத்தாகூட!!

pudugaithendral said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்

pudugaithendral said...

ஆமாம் ஹுசைனம்மா,

இப்படிபட்ட வரங்கள் இன்றைய தலைமுறையினருக்கு இல்லாமல் போக வாழ்க்கைமுறையும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

raji said...

இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன்.
அம்மாடி!எவ்வளவு வலைப்பூக்கள்
பகிர்வுக்கு நன்றி

Jaleela Kamal said...

தாத்தாவை பற்றீய் நினைவுகள் அருமை ,

எனக்கு தாத்தாவுடன் எந்த அனுபவமுமே இல்லை
பாட்டிகளுடன் தான்,.

Chitra said...

தாத்தாவின் அன்பில், நெகிழ வைக்கும் பதிவு.
very nice.

pudugaithendral said...

வாங்க ராஜி,

முதல் வருகைக்கு நன்றி.

பொழுது போகாம நிறைய்ய கடை திறந்து வெச்சிருக்கேன். அம்புட்டுதான்

pudugaithendral said...

வாங்க ஜலீலா,

உண்மையில் என் அம்மாவின் அப்பாவைவிட அம்மாவின் தாத்தாவிடம் அட்ராக்‌ஷன் அதிகம். அம்மாவின் அப்பா கொஞ்சம் கண்டிப்பானவர். ஆசிரியராச்சே! :))

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

நன்றி சித்ரா

ADHI VENKAT said...

கொள்ளு தாத்தாவை பற்றிய நினைவுகள் படிக்கும் போதே சந்தோஷமாய் இருக்கிறது. நீங்கள் பாக்யம் செய்தவர் தான்.