Wednesday, November 28, 2012

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா???!!!!

உறவினர் மகன் பொண்ணு பாக்க போயிருந்தாப்ல. தனியா பேசணும்னு சொல்லியிருக்காங்க.. பேசி முடிச்சதும் மொதோ ஃபோன் உங்களுக்குத்தான் போடுவேன்னு!!” சொல்ல நானும் எல்லா வேலையையும் சீக்கிரமாவே முடிச்சிட்டு போனை பக்கத்துல வெச்சுக்கிட்டு உக்காந்திருந்தேன்.

 
பொண்ணு கொஞ்சம் குண்டாவே இருந்தாலும், அதையெல்லாம் கணக்குல சேக்க கூடாது அத்தைன்னு!! சொன்ன நல்ல பையன். போன் அடிச்சதும் டக்குன்னு எடுத்து,” என்னப்பா!! நல்ல விஷயமா!! சொல்லுன்னு” கேட்டேன். அம்புட்டுதான்... கொஞ்ச நேரத்துக்கு சத்தமே வரலை. என்னய்யான்னு, கேட்ட இருங்க அத்தை இன்னும் நான் அதிர்ச்சிலேர்ந்து வெளிய வரலைன்னு சொல்லி 10 நிமிஷத்துல போன் செய்வதா சொன்னாப்ல.

 எனக்கு செம குழப்பம். கல்யாணத்துக்கப்புறம் குண்டான டைவர்ஸா செய்யப்போறேன்னு... சொல்லித்தானே அந்தப்புள்ளை பொண்ணு பாக்கப்போச்சு. போட்டோவைவிடவும் குண்டா?? என்னன்னு புரியலையேன்னு யோசிச்சுக்கிட்டு இருந்தேன். திரும்ப போன் வந்தது. பேசினேன். அந்த உரையாடலை அப்படியே தர்றேன்.


பேசினியா?  என்னய்யா நடந்துச்சு!!!!

அதெல்லாம் பேசினேன் அத்தே. பேசினதுக்கப்புறம் தான் இந்த எஃபக்ட்!!

சொன்னாத்தானேப்பா விளங்கும்!

எல்லாம் ஓகேதான் அத்தை. சரி பேசி பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டு சம்மதத்தை சொல்லிடலாம்னு முடிவு செஞ்சுதானே போனேன்!!

ஆமாம்...

பேசும்போது வேலைக்கு போகணும்னு சொன்னாப்ல.

சரி.

நான் வெளிநாட்டுல இருக்கேன்.  உடனடியா வேலைக்கு ஏற்பாடு செய்யணும்னா கஷ்டம். தவிரவும் நான் கை நிறைய்ய சம்பாதிக்கறேன்.
அவசியம்னா வேலைக்கு போனா போதும் என்பது என் எண்ணம்.

சரிய்யா...

அதுக்கு அவங்க நான் படிச்சிருக்கேன். எங்கம்மாவம் படிச்சவங்க. ஆனா
எங்கப்பா அவங்களை வேலைக்கு  அனுப்பலை. அதனால பொருளாதாரம்
சரியில்லாம போச்சு. நாங்க ஆசைப்பட்ட படிப்பு படிக்க முடியலை....
என் பிள்ளைகளுக்கும் அந்த கதி வரக்கூடாதுன்னுதான் நான் வேலைக்கு
போகணும்னு சொன்னாங்க.

பாயிண்ட் சரி. என் சம்பளத்துலேயே நல்லா மிச்சம் பிடிக்கலாம். ஆனா
உங்க மனசுக்கு அது புரிபடரவரைக்கும் நீங்க வேலைக்கு போங்கன்னு சொன்னேன்.

இல்ல நான் கண்டிப்பா வேலைக்கு போவேன்னு சொன்னாங்க....
கொஞ்சமா ஜர்க் ஆனேன். இவ்வளவு கறாரா பேசறாங்களேன்னு.

ம்ம்ம்ம்.

ஏங்க நான் இருப்பது வெளிநாட்டுல. அதே இடத்துலேயே இருப்பேன்னு சொல்ல முடியாது. இதைவிட நல்ல ஆஃபர் வந்தா வேற இடத்துக்கு போகணும். அப்படி இருக்கும் போது நீங்க வேலையை விட்டுட்டு வருவீங்களா? இல்ல எப்படின்னு கேட்டேன்.

ச்சேச்சே.... அப்ப வேலையை விட்டுட்டு வந்து புது ஊருல வேலைத் தேடிக்கலாம்னு சொன்னப்ல.

சரி........

நாம இருக்கப்போறது வெளிநாடு. என் பெற்றோரோ, உங்க பெற்றோரோ அப்பப்போ தான் வந்து போக முடியும்.  அதனால நாளைக்கு குழந்தைங்களை வளர்க்கும் பொறுப்பு நம்ம ரெண்டு பேரோடதுதான். என் வேலைப்பளு பத்தி எனக்குத் தெரியும். ஆனாலும் என்னுடைய பங்களிப்பை நான் தருவேன். எப்படி மேனேஜ் செய்வீங்கன்னு கேட்டேன்.

அதெல்லாம் நான் மேனேஜ் செஞ்சுக்குவேன் கவலைப்படாதீங்க. சம்பாதிக்கப்போவதே பிள்ளைகளுக்காகத்தானேன்னு கேட்டாங்க அத்தை!!!

ம்ம்ம்ம் மேல சொல்லு.

ஒரு ஸ்டேஜுக்கு மேல நானே வேலையை விட்டுடுவேன்னு சொன்னாங்க.

எப்படி மேனேஜ் செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டா நல்லா இருக்கும்னு நினைக்கறேன்னு சொன்னேன்.

என்ன இருக்கு?  குழந்தையை(களை) க்ரச்சில் விட்டுட்டு வேலைக்கு போவேன். எங்க பெரியம்மா மக, மாமா மக எல்லோரும் அமெரிக்காவில்
அப்படித்தான் வேலைக்குப் போறாங்க. ரெண்டு பேரும் சம்பாதிக்கும் போது பணப்புழக்கம் தாராளமா இருக்கும். அப்ப க்ரச்சில் விடுவது பிரச்சனையா இருக்காது!!!ன்னு சொன்ன நொடியில அதிர்ச்சியாகி வெளிய வந்திட்டேன் அத்தே....

குழந்தைக்காக சம்பாதிக்கப்போறேன்னு சொல்லிட்டு, குழந்தையை க்ரச்சில் விட்டுட்டு சம்பாதிக்கப்போவாங்களாம். அப்புறம் அந்தக்குழந்தை யாரை அம்மான்னு!! கூப்பிடும்......  பிள்ளைங்க கேட்டதை வாங்கி கொடுப்பது, வாழ்க்கை தரத்தை உயர்த்தி பாத்துப்பது மட்டும்தான் பிள்ளை வளர்ப்பா அத்தைன்னு கேக்க, இப்ப நான் மவுனமா இருந்தேன்.

இதுல இன்னொரு கொடுமை தெரியுமா அத்தை. படிச்சிருக்கேன் வேலைக்கு போகணும், வேலைக்குப்போகணும்னு மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்றாங்க. ஆனா 28 வயசாவுது. இங்க இந்தியாவில ஒரு இடத்துல கூட வேலை பாத்தது இல்லை. வீட்டுக்கு பக்கத்துல இருக்கற  பள்ளிக்கூடத்துல டீச்சர் வேலைக்கு போயிருந்தா கூட ஏதோ ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும். இண்டர்வ்யூ அட்டெண்ட் செஞ்சிருக்காங்க. ஆனா ஒரு இடத்துல கூட வேலை கிடைக்கலையாம்....

ஓஒ அப்படின்னு சொன்னேன்.

இன்னொரு மேட்டர் சொல்றேன் கேளுங்க. வேலைக்கு அனுப்ப ஒத்துக்கிட்டா மட்டும் போதாதாம். நிச்சயதார்த்ததுக்குள்ள  வேலைக்கு ஏற்பாடு செஞ்சு ஆர்டர் வாங்கி கைல கொடுக்கணுமாம்!!!!!!

நான் கல்யாணமே வேணாம்னு முடிவுக்கு வந்திட்டேன் அத்தேன்னு...... புலம்பி தள்ளினிச்சு பிள்ளை!!!!!!!!!!

இது சத்தியமா கற்பனைக்கதை இல்லை. இன்றைய தலைமுறை பெண்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. பெண்கள் வேலைக்கு போவது தப்புன்னு சொல்ல வரலை.  போனா பொருளாதாரம் உயரும் சரி. ஆனா பிள்ளையின் மிக முக்கியமான வளரும் சூழலை இழக்குது. இதைப்பத்தி நான் நிறைய்ய பேரண்ட்ஸ் கிளப்பிலயும், என் வலைப்பூவிலேயும் எழுதிட்டேன்.

கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா பட்டிமன்றத்துக்கு அப்புறம் அதிகம் பேசப்படுவது  திருமணத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்கு போகலாமா? கூடாதா? என்பதாத்தான் இருக்கும்.

30 வருஷத்துக்கு முன்னாடியே தன்னுடைய குடும்பம் ஒரு கதம்பம் படத்துல விசு அழகா இதைப்பத்தி சொல்லியிருப்பாரு. படத்தின் கிளைமாக்சில் வேலைக்குப்போகும் மனைவி வேலையை விட்டுட்டு குழந்தையை பாத்துப்பாங்க. வீட்டுலயே இருக்கும் மனைவி வேலைக்கு போவாங்க.

இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா..... கிருஷ்ண பரமாத்மாவுக்கு தேவைன்னு வரும்போது போர் புரிந்த சத்யபாமாவா பெண் இருக்கணும். வேலைக்கு போவதும் போகாததும் அவங்க அவங்க குடும்ப சூழலை பொறுத்து இருக்கும்.
இன்னமும் இந்த பட்டிமன்றம் தொடருவதுதான் அவலம்.

பெண்விடுதலைக்கு எதிராகவோ, பெண்கள் முன்னேற்றத்துக்கு தடையாகவோ இந்தப்பதிவை நான் எழுதவில்லை.  கைதவறி விழுந்த கண்ணாடி சில்லு சில்லாக போவதைப் போல குடும்பம் சிதறுகிறது. அதுதான் இப்பொழுதைய நிலை.  நிறைய்ய பேசலாம்....... ஆனா மனசில்லை. :((



37 comments:

வெங்கட் நாகராஜ் said...

கேள்வி எதற்கு...

என்ன பதிவு இது? :)

அப்பாதுரை said...

'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?' என்கிற தலைப்புக்கு என்ன பொருள்?

pudugaithendral said...

வாங்க சகோ,

பதிவு பப்பிளிஷ் செஞ்சுகிட்டே இருக்கேன் உங்க கமெண்ட். படிச்சு பாருங்க.

pudugaithendral said...

வாங்க அப்பாதுரை,

அது அவங்க விருப்பம். கோடிட்ட இடத்தை நிரப்புவது போல அதுக்கு அவங்களுக்கு என்ன அர்த்தம் தோணுதோ அது.

வருகைக்கு மிக்க நன்றி

வெங்கட் நாகராஜ் said...

வெறும் தலைப்போடு பதிவு வந்ததா... அதான் நானும் அப்பாதுரை சாரும் கேட்டுட்டோம்.

நல்ல பகிர்வு. அவரவர் குடும்ப சூழலுக்கு எது பொருத்தமோ அதைத் தானே செய்ய வேண்டும்... சரிதான்.

pudugaithendral said...

வாங்க சகோ,

அதை பெத்தவங்க பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கத் தவறிட்டாங்கன்னு நினைக்கிறேன். :((

வருகைக்கு மிக்க நன்றி

சாந்தி மாரியப்பன் said...

இன்னிக்கு அவசியம்ன்னோ அவசியமில்லைன்னோ தோணறது நாளைக்கு தலைகீழா மாறலாம். நம்ம சூழ்நிலைக்கு எந்தக்கால கட்டத்திலும் எது ஒத்து வருதோ அதைச் செய்யறது நல்லதுங்கறது என் கருத்து.

அங்கே இருக்கற பிள்ளைங்களோட ஏக்கம் வழியற முகங்களைப் பார்த்ததாலயோ என்னவோ என்னதான் நியாயப்படுத்தினாலும் க்ரீச்சை என்னால் ஏத்துக்க முடியலை.

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

இன்னிக்கு அவசியம்ன்னோ அவசியமில்லைன்னோ தோணறது நாளைக்கு தலைகீழா மாறலாம்.//

அதே அதே..

நம்ம சூழ்நிலைக்கு எந்தக்கால கட்டத்திலும் எது ஒத்து வருதோ அதைச் செய்யறது நல்லதுங்கறது என் கருத்து.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிப்பா

Mahi said...

Nice post!

ஆத்மா said...

மிக அழகான பதிவு....
அவர்கள் வேலைக்குப் போவதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்

ப.கந்தசாமி said...

பெண்களுக்கு ஏன் காலாகாலத்தில கல்யாணம் நடக்கமாட்டேங்கறது இப்ப புரிஞ்சு போச்சு.

மன்சி (Munsi) said...

இந்தப் பெண் சொல்வது சரி என்று சொல்லவில்லை. அவங்களாக வேலை தேடாமல் மாப்பிள்ளையைத் தேடித் தரச்சொல்வது அபத்தம். ஆனால், பெண்கள் டே கேர் சென்டரில் குழந்தைகளை விட்டுவிட்டு போவதால் குழந்தைக்கு அம்மா என்பதே மறந்துவிடும் என்று சொல்வது ரொம்பவே அபத்தம்.

உங்கள் மருமகன் அவர் குழந்தை வளரும் வரை உயிருடன் இருப்பதற்கு என்ன நிச்சயம்? நெருப்பு என்றால் வாய் வெந்துவிடாது. ஒருவேளை நடக்கவே கூடாதது நடந்தால் மனைவி குழந்தையின் நிலை என்ன? உறவினர்கள் பார்ப்பார்கள், மாமனார் பார்ப்பார் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

பெண்களோ ஆண்களோ கண்டிப்பாக வேலை செய்ய வேண்டும். வேறு வழியில்லை. கட்டாயமாகிவிட்டது. ஆசைப்படாமல் அளவாக செலவளித்து நிறைய சேமித்து வை அது இது என்று நீங்கள் ஒரு ஆகியூமென்ட் சேக்குக்கு சொல்லலாம்.

நடக்கக் கூடாது நடந்தால் நாளைக்கு நடுத்தெருவுக்கு வரப்போவது அந்த குடும்பமே. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யக் கூடாது என்று பெரியவாள் சொல்லுவார்கள். ஏதோ குழந்தை ஒரு நிலைக்கு வரும் வரை ஆண்கள் உயிருடன் இருப்பார்கள் என்பது 100% நிச்சயம் என்கிற மாதிரியான எண்ணத்தை எல்லோரும் மாற்ற வேண்டும்.

மன்சி (Munsi) said...


உங்களுடைய இந்த படைப்பு மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. கணவன் இறந்த பின்னர் தேவைப்பட்டால் வேலை தேடிக்கொள்ளலாம் என்று இருக்க முடியாது. குப்பை கூட்டும் வேலைக்கே எக்பீரியன்ஸ் கேட்கிறார்கள் இந்த உலகத்தில்

வல்லிசிம்ஹன் said...

அதே அதே. பாவம் அந்தப் பிள்ளை. எனக்கும் இந்த அனுபவம் இருக்கு. எங்க மகன் இருக்கும் இடத்தில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு.நாங்க பார்த்த ஒரு பெண்ணும் இதையே கேட்டாள். இல்லாட்ட்அ நீங்க என்னை சமையல் காரியாகவும் வேலைக்காரியாகவும் உபயோகப் படுத்துவீங்கன்னு தீர்மானமாச் சொல்லிட்டா. அந்த கறார் பேச்சுதான் எங்களை விரட்டியது.
எனக்கென்னவோ குழந்தைகள் ஒரு 5 வயது வந்த பிறகு வேலைக்குப் போவது பரவாயில்ல அதுவும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சுடும்.
சமயத்தைப் பொறுத்தே வேலை.நல்ல பதிவு தென்றல்

pudugaithendral said...

வாங்க மஹி,

வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க சிட்டுக்குருவியின் ஆத்மா,

கருத்துக்கு ரொம்ப நன்றி

pudugaithendral said...

வாங்க மன்சி,

என வலைப்பூவுக்கு இதுதான் உங்க முதல் வருகைன்னு நினைக்கிறேன். (5 வலைப்பூ துவங்கி 5 வருஷமாச்சு. எப்பவும் பாத்ததில்லை. அதனால சொன்னேன்)

எதுக்குமே நாம கியாரண்டி தர முடியாது. அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு யாராலும் தீர்மானமா சொல்ல முடியாது. தேவைக்கு வேலை பார்ப்பது என்பது வேறு, தனது கெரியரை மட்டுமே பார்ப்பேன் என்பது வேறு.

சம்பாதிக்கும் பணத்தில் சேமித்தால் கண்டிப்பாய் எதிர்காலத்தில் பிரச்சனை இராது. பாலிசிகள், ஷேர்கள் என எத்தனையோ இருக்கு. அதெல்லாம் முறையா திட்டமிட்டால் பணப்பிரச்சனை முளைக்காது.

நடக்ககூடாது நடந்தால்.... இது உங்க கருத்து. அதுவும் நிச்சயமா தெரியாது. ஆனா அந்தப்பெண் குழந்தையை க்ரச்சில் விட்டு விட்டு போனால் என்ன நடக்கும் என்பது நிச்சயம் தெரியும். விளைவுகளை எத்தனை பணம் சம்பாதித்து கொடுத்தாலும் சரி செய்துவிட முடியாது.

pudugaithendral said...

ஆளே போயிட்டா பணத்துக்கு என்ன செய்வான்னு கேக்கறீங்களே மன்சி, இன்னைக்கு பல முதியவர்கள் தனிமை அனுபவிக்க காரணம், குழந்தைகளுடன் நேரம் செலவிடாமல் வேலைக்காக ஓடியது. அன்று குழந்தைக்கு மனம் ஒட்டவில்லை, வயதான பிறகு பெற்றோரை தவிக்க விடுவது தவறாக தெரியவில்லை.

என்னுடைய படைப்பு மேலோட்டமாக எழுதப்படவில்லை. இந்தப் பிரச்சனைக்கு பின்னால் குழந்தை இருக்கிறது. அந்த ஜீவனைப்பற்றிய கவலையே இல்லையா? அந்த பிஞ்சு மனம் படும் பாடு சொல்லிப்புரியாது. அனுபவித்தவர்களோ இல்லை, உணர்ந்து கொள்ள முடிந்தவர்களாலோ, என்னைப்போல குழந்தைகள் சைக்காலஜி படித்த ஆசிரியைகளோ, அல்லது மெத்த படித்த ைக்காயாரிஸ்டுகளாலோத்தான் முடியும்.

இதன் விளைவு ஒரு தலைமுறையின் மனவளர்ச்சியை, உடல்வளர்ச்சியை மொத்த வளர்ச்சியை பாதிக்கிறது. இதைப்பத்தி பேரண்ட்ஸ் கிளப் பதிவுகளில் பாருங்கள் தெரியும்.

pudugaithendral said...



கணவன் இறந்தால் ஒரு பெண் எப்பாடு பட்டாவது குடும்பத்தை தூக்கி நிறுத்துவாள். ஆனால் அதே மனைவியை இழந்த கணவன் குழந்தையுடன் திண்டாடுவர்கள். மிக சொற்பமானவர்களே தாயுமானவராக ஜொலிப்பர்.

அம்மா இல்லாவிட்டால் அன்பு, அனுசரணை எதுவும் கிடையாது. தாயன்பை ஈடு செய்ய தகப்பனாலும் முடியாது. அப்படி இருக்கும் போது அந்தத் தாய் உயிரோடு இருக்கும்போது குழந்தையின் வளர்ச்சிக்கு செலவிடாமல் போனால் நடக்கும் விபரீதம் சொல்லிவிட முடியாது.

பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்லவில்லை. திருமணத்திற்கு முன் நானும் வேலை பார்த்தவள். திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு வரும்பொழுது ட்ரான்ஸ்பர் ஆர்டருடன் தான் வந்தேன். சூழ்நிலை புரிந்து நானே வேலையை விட்டேன். கணவர் சம்பாதித்து வந்ததில் சிக்கனமாக குடும்பம் நடத்தினேன். என் பிள்ளைகளுக்கு அருகில் இருந்தேன். அதுவே அவர்கள் வளர்ந்த பொழுது டீச்சராக, ப்ரஃபசராக வேலை செய்தேன். இப்பொழுது அடலஸன்ஸ் வயதில் இருவருக்கும் என் தேவை இருக்கும் என்பதால் அவர்களுடன் பொன்னான நேரத்தை கழித்துவிடுகிறேன்.

பணத்தை கொண்டு மட்டும் சந்தோஷத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது. இதை நாமும் உணர்ந்து, பிள்ளைகளுக்கும் உணர்த்தினால் அடுத்தவர்கள் போல் நாம் வாழவில்லையே எனும் நினைப்பை பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க முடியும்.

pudugaithendral said...

வாங்க வல்லிம்மா,

எனக்கென்னவோ குழந்தைகள் ஒரு 5 வயது வந்த பிறகு வேலைக்குப் போவது பரவாயில்ல அதுவும் பள்ளிக்கூடம் போக ஆரம்பிச்சுடும்.
சமயத்தைப் பொறுத்தே வேலை//

அதேதான். வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி வல்லிம்மா. கண்டிப்பா வேலை கிடைக்கும். திருமணத்திற்கு முன் வேலை பார்த்திருந்தால்.... அந்த எக்ஸ்பீரியன்ஸை வைத்து நடுவில் ப்ரேக் எடுத்த பின்னரும் வேலையை தொடரலாம். அப்படி எத்தனையோ பேரை எனக்குத் தெரியும். என் தோழி தன் மகன் 10ஆம் வகுப்பு பரிட்சை முடித்ததும் தனது 38ஆவது வயதில் ஐபிஎம் கம்பெனியில் இங்கே ஹைதையில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

மும்பையில் வங்கியில் வேலைப்பார்த்த என் தோழி, கணவருக்கு இலங்கைக்கு மாற்றலாக வேலைக்கு விடுப்பு கொடுத்துவிட்டு வந்தார். அதன்பிறகு ஒரு சூழலில் ரிசைன் செய்துவிட்டார். பிறகு மாண்டிசோரி பயிற்சி எடுத்துக்கொண்டர். மகள் டாக்டருக்கு படிக்க லண்டன் சென்றுவிட இவர் சென்னை வந்து தற்போது ஒரு ஆசிரியையாக பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.

இதெல்லாம் உதாரணங்கள்...

வருகைக்கு மிக்க நன்றி வல்லிம்மா

pudugaithendral said...

வாங்க ஐயா,

இது மட்டுமல்ல நிறைய்ய கண்டீஷன் கள் போடறாங்க.

பையனோட அப்பா, அம்மா கூட இருக்க கூடாது.

அப்பா அம்மாவுக்கு மாதாமாதம் பணம் அனுப்பனுமா?

கடன் ஏதும் இருக்கா?

சொந்த வீடு இருக்கா? இருந்தா யார் பேருல? உடன் பிறப்பு யாரும் இருந்தா அவங்களுக்கு ஏதும் இருக்கா?

ம்ம்முடியலை ஐயா. (எழுத முடியலைன்னு சொன்னேன் லிஸ்ட் ரொம்ப பெருசு. :( )

வருகைக்கு மிக்க நன்றி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. அவரவர் குடும்ப சூழ்நிலையை பொறுத்து வேலைக்கு போவதும் போகாததும்...

எத்தனை சம்பாதித்தாலும் அதற்கேற்ற செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும். இருக்கும் வருமானத்தில் சேமித்து வைப்பதே சிறந்தது.

நேற்று இந்த பதிவு வெறும் தலைப்பு மட்டுமே வந்திருந்தது?

இப்போதுள்ள பெண்கள் தாலி கட்டிக்க கூடாதாம், புடவை கட்ட மாட்டார்களாம், ஜீன்ஸ் டாப்ஸாம், யார் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியாதாம்.... இப்படியெல்லாம் கூட சொல்கிறார்கள்.

ஹுஸைனம்மா said...

//நிச்சயதார்த்ததுக்குள்ள வேலைக்கு ஏற்பாடு செஞ்சு ஆர்டர் வாங்கி கைல கொடுக்கணுமாம்//

இது நல்ல ஐடியாவா இருக்கே!! :-)))

என்ன செய்ய தென்றல், ஒரு காலத்தில் அதிகமா அடக்கப்பட்டு வச்சிருந்ததில, இப்ப வெடிச்சு கிளம்பறாங்க போல. இந்த மாதிரிப் பெண்களைப் பார்த்தா பரிதாபமும் வருது.

pudugaithendral said...

வாங்க கோவை2தில்லி,

நேற்று இந்த பதிவு வெறும் தலைப்பு மட்டுமே வந்திருந்தது?//

அது எப்படின்னு புரியலை :)

இப்போதுள்ள பெண்கள் தாலி கட்டிக்க கூடாதாம், புடவை கட்ட மாட்டார்களாம், ஜீன்ஸ் டாப்ஸாம், யார் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க முடியாதாம்.... இப்படியெல்லாம் கூட சொல்கிறார்கள்//

சுடிதார் போட்டுக்கிட்டு தாலிகட்டிக்கிட்டா தப்பான்னு பொண்ணோட அப்பா ஒருத்தர் என் கிட்ட கேட்டாரு. புடவையே கட்டாதபோது பட்டுப்புடவை கட்டிக்க வேணாமேன்னு கேக்கறது எப்படி தப்புன்னு புரியலை.

ம்ம்ம்ம்.....

வருகைக்கு மிக்க நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

போன ஜெனரேஷன் பெண்கள் ரொம்ப கொடுமை அனுபவிச்சிருக்காங்க. அதனால தன் பெண்ணாவது நல்லா இருக்கணும்னு நினைச்சு இப்படி சொல்லிக்கொடுக்கறாங்க. இதெல்லாம் நாம எழுதி, பேசி மாறிடக்கூடிய விஷயமா தெரியலை.

எனக்கும் இவங்களை பாக்கும் போது பாவமாத்தான் இருக்கு. பெண்ணடிமை படுத்தப்பட்டபோதும் பாவம், புதுமைப்பெண்ணாகிறோம்னு புறப்பட்டு இருக்கும் சூழலும் பாவம்.

வருகைக்கு மிக்க நன்றி

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா.இதே மாதிரி என் தம்பிக்கு பெண் பார்க்கும் போது நடந்தது. கொஞ்சமா வேற மாதிரி. பெண் செம குண்டு.ஆனால் கட்டாயம் வேலைக்கு போவேன் அந்த கம்பெனியே என்னால் தான் நடக்குது என்கிற மாதிரியே அந்த பெண் பேசியது. தான் குண்டு என்ற எண்ணம் ஒரு துளியும் அந்த பெண்ணிற்கு இல்லை.

என் தம்பி பெண் வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் இந்த பெண்ணை டூவீலரில் கூட பேலன்ஸ் செய்து கூட்டி போக முடியாது.எப்படி வாழ்க்கையில் பேலன்ஸ் செய்வேன் என்று கவலை பட்டான். அப்புறம் வேண்டாம் என்று முடிவு செய்தோம். காரணம் குண்டு என்பதால் அல்ல. அந்த பெண்ணின் குணத்தால்.

pudugaithendral said...

வாங்க அமுதா கிருஷ்ணா,

இங்கயும் இந்தப்பொண்ணு போட்டோவில் பாத்ததைவிட குண்டுதானாம். அதுவாவது பரவாயில்லை. ப்ரசண்டபிளா உடை அணிந்திருக்கலாம். மெகா ஸ்லீவ் கைகள் வைத்த ரவிக்கையால் கைகள் பருத்து இருந்துச்சாம். மதனி சொன்னாங்க. ஆனாலும் பரவாயில்லைன்னு ினைச்சிருந்தாங்க. என்னவோ போங்க. பொண்ணு கிடைப்பதே கஷ்டமா இருக்குன்னா, இதுல கிளை பிரச்சனைகள் வேற....
வருகைக்கு மிக்க நன்றி

மன்சி (Munsi) said...

ப்ரொபசராக இங்கே எப்படியும் 40 / 45 வயதுக்கு மேலாகிவிடும், அதற்கு கூட முழு மூச்சாக நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும். அசோசியேட் ப்ரொபசராகி, அசிஸ்டென்ட் ப்ரொபசராகி, ப்ரொபசராகுவது இலகுவானது அல்ல. எனக்கு இந்தியா பற்றித்தெரியாது. ஆனால் இங்கே ப்ரொபசராவது அவ்வளவு எழிதானது அல்ல.

நீங்கள் ப்ரொபசராக வேலை செய்திருப்பதாகக் கூறுகிறீர்கள். நிறைய ஆராய்ச்சி செய்திருப்பீர்கள். கட்டுரைகள் எழுதி இருப்பீர்கள். அத்தனை வருட அனுபவத்தில் இருப்பவருக்கு வேணுமானாலும் திருப்ப போய் சேருவது இலகுவாக இருக்கலாம். மற்ற வேலைகளுக்கு அந்தளவுக்கு க்ராண்டி இல்லை.

சிக்கனம் பிடித்து சேமித்தாலும், அடுத்த மாத சம்பளம் வரும் என்று என்ன க்ராண்டி? ஆண்கள் எல்லோரும் ரொம்ப நாட்கள் இருப்பார்கள் போன்ற பிரமை எப்படி ஏற்பட்டு இருக்கிறது எங்கள் சமூகத்தில்.

வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் பிள்ளைகளை ஒழுங்காக வளர்ப்பதில்லையா? அவர்கள் சாதிக்கவில்லையா? பணம் தான் முக்கியம் என்று சொல்லவில்லை. பாசத்தை வைத்து ஒரு வேளை வயிற்றை நிரப்ப முடியாது என்று உங்களுக்குத் தெரியாதில்லை. இன்று வரை அடிப்படைத் தேவை என்பது உணவு, உடை, உறையுள் ஆகிவிட்டது.

வயோதிபர் இல்லம் உருவாகியதற்கு நீங்கள் கூறுவது மட்டும் காரணமில்லை. எங்கள் வரட்டுப் பிடிவாதம், மாற மாட்டோம். வெளிநாட்டு உணவை ருசி பார்க்காமலே ஐயே மனுசன் சாப்பிடுவானா என்று எள்ளி நகையாடுகிறோம். இவோல்வ் ஆக என்றுமே நாங்கள் ஓப்பினாக இருக்கவில்லை. எல்லோருடைய தவறுமே அது. எல்லாவற்றையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யச் சொல்லவில்லை. நல்லதுகளை எங்கே இருந்தாலும் எடுத்துக் கொள்ள நாம ஓப்பனாக இல்லை என்பதே கசப்பான உண்மை.

நல்ல ஸ்கூலில சேர்க்கவும் பகட்டு வாழ்க்கைக்கும் ஆக மட்டுமே ஆணும் பெண்ணும் வேலைக்குப் போகவேண்டும் என்றில்லை. உயிருடன் இருக்கும் வரை என்னால் உழைத்து என்னையும் குடும்பத்தினையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

உன் காதல் மட்டும் போது நிலவைக் கூரை ஆக்கி குடிசையிலும் வாழ முடியும் என்பது எப்படி அபத்தமாகத் தோன்றுமோ, அப்படியே பாசம் பற்றி அதிகமாக பேசுவது அபத்தமாகத் தோன்றுகிறது.

பணத்தை வைத்து அன்பை வாங்கமுடியாது என்றால் பாசத்தை வைத்து வயிற்றைக் கழுவ முடியாது. எல்லாவற்றையும் தேவையான அளவு பலென்ஸ் பண்ணிக்கப் பழகிக்க வேண்டும்.

எல்லோரும் ரெஸ்பொன்சிபிலிடீஸை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டாமல், பகிர்ந்து கொண்டு குடும்பத்தை நடத்த அனுபவம் உள்ளவர்கள் சொன்னால் நல்லது. அதை விடுத்து, ஏதோ நம்ம இந்தியர்கள் தான் பிள்ளை பெத்துக்கறாங்க பாசமாக வளர்க்கிறாங்க என்று சொல்லுவது ரொம்பவே கடுப்பை ஏற்படுத்துகிறது. நம்ம ஆளுங்களுக்கு இந்த டிபென்சிவ் மனப்பான்மை ரொம்பவே அதிகம். அதைத் தான் நீங்களும் செய்கிறீர்கள். நாம ஓபினாக இல்லை. அது தான் உண்மை.


மன்சி (Munsi) said...


சில வருடங்களாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக படைப்புக்களைப் படித்திருக்கிறேன். பின்னூட்டம் இடவேண்டும் என்று நினைத்ததில்லை. அவ்வளவே.

குண்டாக இருப்பதற்கு சோம்பேறித்தனம் மட்டுமே காரணமில்லை. சிலருக்கு எவ்வளவு தான் கட்டுப்பாடாக சாப்பிட்டு எக்சர்சைஸ் செய்தாலும் உடல் இளைப்பதில்லை.

இங்கே எழுதுபவர்கள் பலருக்கு ரொம்பவே குறுகிய மனப்பான்மை உள்ளதோ என்ற எண்ணம் இங்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. நம்ம இனத்துக்கு இது ஒரு சாபம்.

மன்சி (Munsi) said...

typo கார‌ண்டி

pudugaithendral said...

வாங்க மன்சி,

இங்கே எழுதுபவர்கள் பலருக்கு ரொம்பவே குறுகிய மனப்பான்மை உள்ளதோ என்ற எண்ணம் இங்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது. நம்ம இனத்துக்கு இது ஒரு சாபம். //

இதையே நாங்களும் திருப்பி சொல்லலாம். அடுத்தவங்க தான் தப்புன்னு நீங்க நினைக்கற மாதிரிதான் நாங்களும் நினைக்கிறோம். நான் சொல்வதுதான் சரின்னும் சொல்லலை. நீங்க அதை ஏத்துக்கிட்டே ஆகணும்ன்னு பதிவு எழுதலை. என் எண்ணம், என் விருப்பம். வந்து படிக்கறவங்க அவங்க கருத்தை சொல்றாங்க. மாத்தி கருத்து இருந்தா அதைப்பத்தி ஒரு புரிதல் ஏற்படுத்திக்கறதுதான் எங்க நட்புக்களின் பழக்கமே தவிர, விதண்டா வாதம் பேசிக்கிட்டு இருக்க மாட்டோம்.

அப்படி மாற்று கருத்து இருந்தாக்கூட தனி மடலில் பேசிப்போம். இது பொது மேடை.

pudugaithendral said...

உங்க பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிக்கும் நான் பதில் சொல்ல முடியும். ஆனா நீங்க புரிஞ்சிக்கப்போறது இல்லை. //
குண்டாக இருப்பதற்கு சோம்பேறித்தனம் மட்டுமே காரணமில்லை. சிலருக்கு எவ்வளவு தான் கட்டுப்பாடாக சாப்பிட்டு எக்சர்சைஸ் செய்தாலும் உடல் இளைப்பதில்லை. //

அதேதான் திருமணத்திற்கு முன்பே குண்டாக இருப்பதால் பின் விளைவுகள் ஜாஸ்தி. அது உங்களூக்கு தெரிஞ்சிருக்கும். தைராய்டு பிரச்சனையா கூட இருக்கும். ஏன் நம்ம உடம்பு இப்படி இருக்கு என்பதற்கான அவர்னேஸ் வரணும். அது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தால் தான் நல்லது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். திருமணத்திற்கு பிறகு, வயது இதெல்லாம் கூட கொஞ்சமான உடல்பருமனை ஓகேன்னு சொல்லலாம்னாலும், திருமணத்திற்கு முன்னாடி ஜீரோ ஃபிகர் சைஸுக்கு இருக்கச் சொல்லலை. ஓவர் வெயிட்டா இல்லாம இருப்பது நல்லது.

சரிவிடுங்க. நான் சொல்வதை சொல்லிட்டேன். இதுக்கும் நீங்க என்ன பின்னூட்டம் காட்டமா போடறீங்கன்னு பாப்போம். :))

மன்சி (Munsi) said...

//அடுத்தவங்க தான் தப்புன்னு நீங்க நினைக்கற மாதிரிதான் நாங்களும் நினைக்கிறோம். //
இது தான் நூறு வீதம் சரின்னு இல்லை. ஒரு பக்கத்தை மட்டுமே வைச்சு எழுதின பதிவு மாதிரி இருக்கு.

//உங்க பின்னூட்டத்தின் ஒவ்வொரு வரிக்கும் நான் பதில் சொல்ல முடியும். ஆனா நீங்க புரிஞ்சிக்கப்போறது இல்லை. //
எப்படி ஜட்ஜ்மென்டலாக இருக்கீங்க பாருங்க‌! ப்ரொபசராக இருந்தேன்னு சொல்றீங்க. எத்தனை மாணவர்களைப் பாத்திருப்பீங்க. ப்ரொபசருன்னு சொன்னது பொய் இல்லையே? இவ்ளோ அனுபவம் இருக்கும் நீங்களே ஒரு கோணத்தை மட்டும் பாத்திட்டு பொண்ணுங்க இப்படித்தான்னு சொல்றீங்க.

ஒரு பிரச்சினைக்கு பல கோணங்கள் இருக்கு.

கண்மூடித்தனமாக பெண்ணுக்கு சப்போட்டி பண்ணி விதண்டாவாதம் செய்யாமல் அவங்க பண்ணினதும் தப்புன்னு தான் சொன்னேன். அதுவுன் என்னோட பின்னூட்டத்தின் "முதல் வரி". அதையே மனசுல "எடுத்தக்காம" நான் விதண்டாவதமாக சொல்றேன், எல்லோரையும் தப்பு சொல்றேன்னு முத்தர குத்தறீங்க. என்ன நியாயம்?

நிறையப் பேர் உங்களோ படைப்புக்களைப் படிக்கறாங்க. நிறைய எழுதறீங்க. நீங்களே ஒரு கோணத்தை மட்டும் பாத்திட்டு பதிவு எழுதுவது சரியா?

பொதுமேடையில் நீங்கள் எழுதும் போது மாற்றுக் கருத்து போட்டால் விதண்டாவாதமா? தனி மடலில் பேசுவது தான் இங்கிதமா? ப்ரொபசராக இருந்த குடும்பத்தலைவி, நான் ஏன் மத்தவன் சொல்றதை கேட்க வேண்டும் என்று நீங்கள் கூறுவது போல இருக்கு.


மன்சி (Munsi) said...

திருப்பவும் சொல்றேன், பணத்தால பாசம் கிடைக்காது சந்தோசம் கிடைக்காது, பாசத்தால ஒரு வேளை வயிற்றை நிரப்ப முடியாது. இரண்டையும் பலன்ஸ் பண்ணிக்கப் பழக வேண்டும். நம்ம காலில நின்னு நல்ல கடமைகளை (பெற்றோர் பிள்ளைகள் கடமைகளை - டைம் செலவளிப்பது அதில் ஒன்று) செய்ய வேண்டும். நம்ம சோம்பேறித்தனத்தால் நம்ம கடமையை ஒழுங்காக செய்யாமல், வேலைக்குப் போனால் குடும்பத்துடன் டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது, குழந்தையைப் பார்க்க வேணும் என்றால் வேலைக்குப் போகமுடியாது என்று இருக்கிறோம். சோம்பேறித்தனம், வரட்டுப் பிடிவாதம், இரண்டுமே நம்ம ஆளுங்களுக்கு சாபம்.

ஒரு கட்டத்துக்கு மேல நம்ம ஆளுங்களுடன் பேசிப் பயனில்லை. இவ என்னத்த சொல்றது. நாம வாழாத வாழ்க்கையா? நமக்கு இல்லாத அனுபவமா? நமக்குத் தெரியாதா? இது தான். இந்த மென்டாலிட்டி தான், இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறீர்கள் இல்லை. இடைஞ்சல் இல்லாமல் நாமளாவே கத்துகவும் அனுமதிக்கிறீர்கள் இல்லை.

ரொம்ப ஆதங்கமாக இருக்கிறது. ஆற்றாமையால் கோவம் வருகிறது.

ப்ரொபசராக இருந்தவங்களுக்கு எவ்வளவு வருட அனுபவம் இருந்திருக்கும். எத்தனை தலைமுறையை (பத்து வருடங்களுக்கு ஒரு முறை தலைமுறை மாற்றம் ஏற்படும் என்று எங்கோ படித்த ஞாபகம்) பார்த்திருப்பீர்கள். நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் யார் புரிந்து கொள்வார்கள்.

வேறு சொல்வதற்கில்லை.

pudugaithendral said...

வாங்க மன்சி,

இப்ப என்ன நீங்க சொல்வதுதான் சரின்னு சொல்றீங்களா? சொல்லிட்டு போங்க அதுக்கு ஏன் என்னையும் ஒத்துக்கிட்டே ஆகணும்னு சொல்றீங்க.நான் உங்களை என் கருத்தை ஒத்துக்கிட்டேதான் ஆகணும்னு உங்களை மாதிரி அடம்பிடிக்கலை. உங்க கருத்து அதுன்னா, இது என் கருத்து. அவ்ளோதான். தேவையில்லாத வார்த்தைகளை உபயோகிச்சு உங்க பின்னூட்டத்தை படிக்கும்போதுதான் கடுப்பாகுது.

நான் உங்களை குத்தம் சொல்லலை,அப்புறம் ஏன் நீங்க வரிக்குவரி குத்தம் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கீங்க.

மேல பேச எனக்கு விருப்பமில்லை.

மன்சி (Munsi) said...

உஙகள் மேல் எனக்கு எந்த பகையும் இல்லை. நீங்கள் எழுதும் நல்ல கட்டுரைகளையும் படித்திருக்கிறேன். நல்லதை நல்லது என்று சொல்ல நூறு பேர் இருக்காங்க. அதனால் என்றுமே நல்லது என்று பின்னூட்டம் இடாவிட்டாலும் பலருடைய லிங்கை என் நண்பர்களுக்கு அனுப்பி இருக்கிறேன்.

அதிகமாக என்னைப் பாதித்தது இரண்டு ஆக்கங்கள். ஒன்று இங்கு இன்னும் ஒன்று ஒரு இரத்தப் பதிவு. இரண்டுக்கும் மட்டுமே பதில் போட்டிருக்கிறேன். யாரையும் குறை சொல்லி நோகடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை.

மன்சி (Munsi) said...

சரி என்று ஏற்றுக் கொள் என்று சொல்லவில்லை. இந்தக் கோணமும் இருக்கு என்றாவது விளங்கிக் கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன். ஒரு விஞ்ஞானி பெரிய பூனை வெளியே போக பெரிய துளையும், சின்னது போக சின்னத் துளையும் இட்டாராம். விஞ்ஞானி என்றாலும் சில விடயங்களைக் கவனிக்கத் தவறுகிறார்கள். அதை தவறு என்று சொல்லவில்லை. சுட்டிக்காட்டும் போது இதுவும் நியாயமாகத் தானா என்று யோசிக்கவாவது செய்வீர்கள் என்ற நப்பாசையில் கொட்டியது. அவ்வளவே.