Friday, April 05, 2013

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்!!!!!!!

நம்மளை இறக்கிவிட்ட டிரைவர் 6 மணி ஆனதும் எக்ஸிட் பாயிண்ட் கிட்ட வந்து எட்டி பாத்தாரு. 10 நிமிஷத்துல வந்திடறேன்னு சொன்னதும் ஓகே ஓகேன்னாரு. அங்கேயிருந்து அடுத்து கிளம்பும் இடத்துக்கு கொண்டு போய் விடுறேன்னு சொன்னார். அங்க 8 மணிக்குத் தானே ஷோ!! அதுக்குள்ள அங்க போய் என்ன செய்யன்னு கேட்க, கூட்டம், ட்ராபிக்னு ஏதோ சொன்னாரு. சரின்னு போனோம். தண்ணீர் பாட்டில் வாங்கணும்னு சொன்னதும், நாம போற இடத்துக்கு பக்கத்துல தான் செவன் - லெவன் அங்க வாங்கிக்கலாம்னாரு.


 செவன் - லெவன் அந்த ஊர்ல இருக்கற ஒரு சூப்பர் மார்க்கெட். ஒவ்வொரு பாட்டிலா தண்ணி வாங்கினா 13 தாய் பட் ஆவுது. ஆனா அதுவே 6 பாட்டில் கொண்ட பேக்கா வாங்கினா கொஞ்சம் விலை கம்மி. எப்படியும் தண்ணி பாட்டில் வேணுமே அதனால மொத்தமா வாங்கிகிட்டு இருக்கும் பொழுது பசங்க கண்ணுல அது பட்டது. உடனே முகம் பிரசன்னம் :)) எடுத்துக்கோங்கன்னு சொன்னது பாய்ஞ்சு போய் ஆளுக்கொண்ணு தூக்கிகிட்டு வந்தாங்க. இப்பவா சாப்பிட போறீங்க?ன்னு கேட்க சிரிப்புதான் பதில். வேறொண்ணும் இல்லை மைலோ பாக்கெட்.அதே டேஸ்ட்டுமா? மாறவேயில்லைன்னு குதூகலம். 3 வருஷத்துக்கப்புறம் மைலோ !!! நெஸ்லே கம்பெனியிதுதான், ஆனா நம்ம ஊர்ல ஏர்போர்ட் தவிர வேற எங்கயும் பார்த்தது இல்லை.  நாங்க தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதற்குள்ள டிரைவர் போய் நுழைவுச் சீட்டு வாங்கி வந்தாரு. எல்லாத்துக்கும் நாம முன்னாடியே பணம் கட்டியிருந்ததால பர்ச்சேசிங் தப்ப வேறெதுக்கும் பர்ஸை திறக்க வேண்டியதே இல்லை. தவிர டிரைவரோ, கைடோ போய் டிக்கெட் வாங்கி நம்ம கிட்ட கொடுத்திருவாங்க.

இந்த தண்ணி பாட்டிலை வண்டியில வெச்சுக்கோங்கன்னு சொல்ல அந்த டிரைவர் நான் கிளம்பிடுவேன் அப்படின்னு சொல்லிட்டு இன்னொருத்தரிடம் அறிமுகப்படுத்தி இவர் உங்களை இந்த ஷோ முடிஞ்சதும் சாப்பாட்டுக்கு அழைச்சிகிட்டு போவாருன்னு சொல்லி அவர்கிட்ட தண்ணி பாட்டில்களை கொடுத்தார். 1 மணிநேரம் ஷோ உங்களை 9 மணிக்கு இதே இடத்தில் வந்து பார்க்கிறேன்னு சொன்னார்.

சரி ஷோ ஷோன்னு சொல்றேன், ஷாக் ஆகிட்டேன்னும் சொல்றேன்.
என்ன ஷோ, என்ன ஷாக்?? ஷோ பேரு அல்கேஸர் ஷோ. அந்த பெரிய கட்டத்துக்கு முன்னாடி போய்கிட்டு இருக்கும்போதுதான் அந்த வார்த்தையையும், ஒரு உருவ பொம்மையையும் பார்த்துதான் ஷாக் ஆனது.

அல்கேஸர் கேபரே!!!!!!!!! இப்படி ஒரு பொம்மை வரவேற்றா!!!!


இந்த ஷோ நல்லாயிருக்கும்னு  மெபல் (ஹாய் டூர்ஸ்) சொன்னாங்களே, இன்னொரு இடத்தை பத்தி கேட்டப்போ அங்க வேணாம், அது பிள்ளைகளுடன் போக முடியாதுன்னு சொன்னாங்களே!! இப்ப இந்த கேபரே பாக்கவா வந்திருக்கோம்......  வயது வந்த பிள்ளைகளுடன்!!!!  வேணாம் கிளம்பிடலாம் பணம் போனா போவுதுன்னு சொன்னேன். அயித்தானுக்கும் ஷாக் தான்.  போயிடலாம்னு நினைச்சு  கார் பார்க்கிங் கிட்ட வந்தோம். ஆனா கொஞ்ச நேரத்துல பெரிய்ய பெரிய்ய பஸ்களிலிருந்து நிறைய்ய வெளிநாட்டுக்காரங்க வந்து இறங்கினாங்க. அவங்க கூட சின்னச் சின்ன குழந்தைகள் கூட இருந்தது.

ஆனாலும் எனக்கு மனசு கேக்கலை. அவங்க கலாசாரத்துக்கு இதெல்லாம் ஓகேவா இருக்கலாம்.... அப்படின்னு சொன்னேன்.  அப்பதான் அங்க ஒருத்தர் கிட்ட விசாரிச்சோம். சார் கேபரேன்னா பசங்களுக்கு எப்படி டிக்கட் கொடுப்போம்!!  இது மிஸ் செய்ய கூடாத ஒரு நிகழ்ச்சி கண்டிப்பா இருந்து பாருங்கன்னு சொன்னார். அரை மனசோடத்தான் உட்கார்ந்திருந்தேன். உள்ளே நெட்ல வைரலா சுத்திக்கிட்டு இருந்த “கங்கம் ஸ்டைல்” பாட்டுக்கு டான்ஸ் நடக்கும் சத்தம் கேட்டது.


நம்மளுடைய டிக்கெட்டை கொடுத்ததும், வெளியே வெல்கம் டிரிங் கொடுத்தாங்க. பெப்சி, ஃபாண்டா தான்!! சீட் எல்லாம் ரிசர்வ் செஞ்சு வெச்சிருந்தாங்க. அரைவட்ட வடிவில் சீட்கள், முன்னே மேடை ஜிகு ஜிகுன்னு மின்னின திரையால மூடப்பட்டு இருந்தது.  முதல் வரிசையிலிருந்து சில வரிசை வரை விஐபி இருக்கைகள். அதற்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா காசு.


கரெக்டா 8 மணிக்கு திரைவிலகி நடனம் ஆரம்பம். கொஞ்சம் கவர்ச்சிகரமான உடையில்தான் நடனம் இருந்தது. எந்திரிச்சி போயிடலாம்னு எழுந்த நேரத்துல அடுத்த பாட்டு ஆரம்பமே நல்லா இருந்தது. உடைகளும் கண்ணியமா இருக்க உட்கார்ந்தேன். அதற்கப்புறம் எழுந்திருக்கும் மனதே வரவில்லை. பல தேசிய பாட்டுக்கு நடனங்கள் அற்புதமா.... நம்ம ஆஜா நாச்லே பாட்டுக்கும் நடனத்தின் போது நிறைய்ய விசில்கள் பறந்ததன்.

ஒவ்வொரு பாட்டுக்கும் பேக்ரவுண்ட் செட்டிங் மாத்தியது ரொம்ப அழகு.
அதை ரொம்ப நேர்த்தியா செஞ்சிருந்தாங்க. ஜப்பானிய பாடலில் செட் அழகா, நடனமாடியது அழகான்னு சொல்ல முடியாம அருமையா இருந்தது.


பென்குவின்கள் மாதிரி உடை அணிந்து ஆடை நடனம் ரொம்ப அழகு.
அந்த நேரத்தில் நாம அமர்ந்திருக்கும் இடத்தில் கூட பனிமழை தூவுவது போல ஏதோ விழுந்தது.. இன்னொரு பாடலின் போது திரைவிலக்காமல் பாடல் மற்றும் ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் திரையின் மத்தியில் மட்டும் வெளிச்சம் விழா ஒரு ஆண் பாட, அடுத்து அவருக்கு பக்கத்தில் பெண் ஒருத்தி பாடுவது தெரிந்தது. இப்படி இருவரும் எசப்பாட்டு படித்துக்கொண்டு கடைசியில் முழுவதுமாக விளக்கொளியில் பார்த்த பொழுது ஆச்சரியம்!!
ஒரு பாதி ஆணாக, மறுபாதி பெண்ணாக உடையணிந்தது பாடியது ஒருவரே!!!


இன்னொரு பாட்டின் போது நடனமணிகள் தங்களின் தலையில் பெரீய்ய கிரீடங்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் அவர்களின் பாராம்பரிய நடனமாடுகிறார்களோ!!!! மினி ச்யாமில் போட்டோ எடுக்க அவர்கள் எங்கள் தலையில் வைத்த கீரிடமே கனமாக இருந்தது. அதைவிடவும் உயரமான கிரீடங்களுடன், இந்த பெண்மணிகள் ஆடியது அழகு.


அதற்கடுத்து வந்த பாட்டில் “நைட் இன் த ம்யூசியம்” சினிமாவில் வருவது போல ஒரு ம்யூசியம். ஒரு திருடன் வந்து சிலை ஒன்றின் கையில் இருந்த தங்க உருண்டை போன்ற ஒன்றை எடுத்து செல்கிறான். கொஞ்ச நேரத்தில் ஒரு பாடல் ஆரம்பிக்க யார் பாடுகிறார்கள் ....!!!! சிலையிடம் சின்ன அசைவு.
அது சிலை போலவே தானே இத்தனை நேரமும் இருந்தது என  யோசித்துக்கொண்டிருந்த பொழுதே 3 சிலை போல இருந்தவர்கள் முன்னே வந்த ஆடுகிறார்கள். உடம்பெல்லாம் சிலை போல பெயிண்ட் அடித்திருந்தார்கள்.

அடுத்து எஸ் “கேங்க்ணம் ஸ்டைல்”.  பார்வையாளர்களும் பரவசப்பட்டு ஆடிக்கொண்டிருந்தனர். அடுத்து கடைசியாக வந்த நடனத்தில் மறுபடியும் கிளாமர் உடை நடனம். முதல் பாட்டும், கடைசி பாட்டையும் தவிர்த்து பார்த்தால் மிக அழகான நடன நிகழ்ச்சி. கேபரே என்று போட்டு பயமுறுத்தாமலோ, அல்லது பலரை ஏமாற்றாமலோ இருந்திருக்கலாம்!!! கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றுதான். அந்த நடனம் முடிந்து வெளியே வந்து பார்த்தால் அடுத்த ஷோவுக்கு இன்னும் நிறைய்ய பஸ்களில் கூட்டம். அதற்குள் அந்த நடன உடையுடனேயே மங்கையர்கள் வெளியே வந்து நிற்க அவர்களுடன் போட்டோ எடுக்க பலர் ஆயத்தமானர்கள். அதற்கு தனி கட்டணம்.

நாங்கள் எங்கள் டிரைவரைத்தேடுவதற்குள் அவரே எங்களை கண்டுபிடித்து அழைத்துப்போனார். ஸ்பைசி ரெஸ்டாரண்ட் பெயருக்கு ஏற்ப காரசாரமான உணவு தான். அதே புஃபே டைப் உணவு. ஆனால் காலை உணவில் இருந்த கறிகளும், க்ரேவிகளும் இல்லை. சாப்பிட்டு வந்ததும் ட்ரைவர் அழைத்து சென்று ஹோட்டலில் இறக்கினார். அடுத்த நாள் காலை 9.30மணிக்கு ரெடியாக இருக்கும்படி சொல்லிவிட்டு போனார்.

தொடரும்......


13 comments:

அமைதிச்சாரல் said...

சில இடங்களில் பேரைப்பார்த்து ஏமாந்துடறது என்னவோ நிஜம்தான். ஆனா திரும்பி வந்திருந்தா ஒரு நல்ல ஷோவை மிஸ் செஞ்சுருப்பீங்க இல்லையா :-)

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

ஜிகு ஜிகு உடைகள், சில பாட்டுக்கு அரைகுறை உடைகள் தவிர்த்திருந்தால் பார்த்து களிக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சிதான்.

மிஸ்ஸாகி இருக்க வேண்டியது :)

வருகைக்கு மிக்க நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யமாக இருந்தது... தொடர்கிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

சில சமயங்களில் வெளித் தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடுகிறோம்....

நல்ல நிகழ்ச்சி....

கோவை2தில்லி said...

நல்ல அனுபவம் தான். தொடர்கிறோம்..

Anonymous said...

Rightuu..
ஆஜர்

மன்சி (Munsi) said...

7-11 is not a super market; it is a convenience store.

மன்சி (Munsi) said...

and its an international chain

மன்சி (Munsi) said...

சில கடற்கரைகளில் குழந்தைகளுடன் போனால் கூட ஆணை கை பிடித்து அழைக்கும் பெண்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து குழந்தைகளுடன் போகும் நாடு அல்ல.

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு மிக்க நன்றி தனபாலன்

புதுகைத் தென்றல் said...

ஆமாம் சகோ,


வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வருகைக்கு நன்றி கடைசி பெஞ்ச்

புதுகைத் தென்றல் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மன்சி