Sunday, July 21, 2013

குருவே சரணம்.....

லலிதாம்பிகையை தரிசிச்சாச்சு. மயிலாடுதுறையில் தான் ராத்திரி தங்க ஹோட்டல் புக் செஞ்சிருந்தோம். நெட்டில் தேடி கிடைத்த ஹோட்டல்தான். ஹோட்டல் பாம்ஸ். பழைய பஸ்ஸ்டாண்ட் எதிரில் இருக்கு.  அந்த மாதிரி ஒரு சின்ன ஊரில் அவ்வளவு தரத்துடன் அந்த ஹோட்டல் இருந்தது ஆச்சரியம் எனக்கு.

ஆனா பாருங்க இந்த மாதிரி கோவில்களுக்கு வார இறுதியில் போறதா இருந்தா முன்னக்கூட்டியே ஹோட்டல் புக் செஞ்சுக்கிடறது நல்லது. நவக்கிரஹ சுற்றுலாவுக்காக கும்பகோணம் மற்றும் அதை சுற்றியிருக்கும் எல்லா ஹோட்டல்களும் புக் ஆகிவிடுதாம்.  ஹோட்டல் ரூம் வாடகையில் காலை உணவும் சேர்ந்து தான் இருந்தது.

காலையில் 6 மணிக்கு எழும்பி குளித்து ரெடியாகி கோவிலுக்கு கிளம்பினோம். நாங்க  போனது வதாராண்யேஸ்வரர் கோவிலுக்கு. அம்மை பெயர் ஞானாம்பிகை. இந்த கோவிலில் இருக்கும்  மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய போயிருந்தோம். கோவில்வாசிலில் அப்பதான் கடை போட ஆரம்பிச்சிருந்தாங்க ஒரு வயசான அம்மா. ஆனா பூ மாலை கிடைக்கலை. அயித்தான் காரை எடுத்துக்கிட்டு போய் மஞ்சள் மாலை வாங்கி வந்தாரு.
மஞ்சள் வஸ்திரம் வாங்கியிருந்தேன்.

 வதான்யேஸ்வரர் கம்பீரமா இருந்தார். அவருக்கு ஒரு வணக்கத்தை வெச்சிட்டு ஞானாம்பிகாகிட்ட வந்தோம்.
பொளர்ணமி அன்று ஞானாம்பிகையை 108 முறை வலம் வந்தால் திருமணம் நடைபெறும், எல்லா வளமும் கிடைக்கும்னு போட்டிருந்தது. 3 சுத்து சுத்திட்டு மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு வந்தோம். அந்த கோவில் அர்ச்சகர் தட்சிணாமூர்த்திக்கு நாங்க கொண்டுபோயிருந்த வஸ்திரத்தை ரொம்ப அழகா கட்டிவிட்டார். மாலையை சாத்திட்டு அர்ச்சனை செஞ்சு ஆரத்தி காட்டிய போது தட்சிணாமூர்த்தி ஜொலிச்சாரு. இந்த தட்சிணாமூர்த்தி சிலையே பெருசா இருக்கு.அது என்ன மேதா தட்சினா மூர்த்தி.  மேதா தட்சிணாமூர்த்தியை பூஜை செய்வதால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கு, பிள்ளைகளுக்கு சகல கல்வி ஞானமும் கிடைக்கும். இந்த ஸ்தல புராணம் என்ன சொல்லுது?

நவக்கிரஹ குரு இந்த மேதா தட்சிணாமூர்த்தியை வழிபட்டு தன்னை வணங்குபவர்களுக்கு வேண்டியதை கொடுக்கும் வரத்தை தரும் சக்தியை தரணும்னு கேட்டு வழிபட்ட இடம். குரு பார்த்தால் கோடி கிடைக்கும்னு சொல்வாங்க. அந்த குருவே இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டிருக்கார்னா இந்த கோவிலின் சிறப்பை என்ன சொல்வது. தான் தான் சிவனுக்கு வாகனம்னு கர்வமா இருந்த நந்தியின் கர்வம் தணிய வெச்சதும் இங்கேதானாம்.வதான்யேஸ்வரர் கோவில், மேதா தட்சினாமூர்த்தி கோவில்னு சொன்னா பலருக்கு தெரியரதில்லை. ஆனா வள்ளலார் கோவில்னு சொன்னா விவரம் தெரியுது மக்கள்களுக்கு. இது குரு பரிகார ஸ்தலமும் கூட. திட்டை, ஆலங்குடி வரிசையில் இந்த மயிலாடுதுறை மேதா தட்சிணாமூர்த்தியும் ரொம்ப விசேஷம்.

கோவிலில் பூஜை முடித்ததும் விளக்கு ஏற்றிக்கொண்டிருந்தோம். அப்போது தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்வதைப் பார்த்து, மனம் குளிர அபிஷேக ஆராதனை தரிசனம் செய்து திரும்ப ஹோட்டலுக்கு வந்தோம். காலை உணவும் சேர்த்தே என்பதால் சாப்பிட்டு விட்டு ஹோட்டலை செக் அவுட் செய்து புறப்பட்டோம்......

தொடரும் 

9 comments:

அமைதிச்சாரல் said...

தொடருங்கள்.. தொடர்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேதா தட்சினாமூர்த்தி கோவில் - வள்ளலார் கோவில் சிறப்பு தகவலுக்கு நன்றி... தொடர்கிறேன்...

துளசி கோபால் said...

அடடா இந்த தொடரை மிஸ் பண்ணிட்டேன் போல:(


போய்ப் படிச்சுட்டு வர்றேன்.

மயிலாடுதுறை போனப்ப இந்தக்கோவில் விவரம் தெரியாமப் போச்சே:(

வெங்கட் நாகராஜ் said...

மேதா தக்ஷிணாமூர்த்தி - உங்கள் தயவால் நாங்களும் தரிசனம் செய்தோம்....

தொடரட்டும் பயணங்கள்.....

புதுகைத் தென்றல் said...

வாங்க அமைதிச்சாரல்,

வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

இன்னைக்கு குரு பூர்ணிமா. நேற்றைய என் பதிவு குரு பற்றியது தற்செயலா அமைஞ்சிருக்கு.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க துளசி டீச்சர்,

மெல்லவாசிச்சு வாங்க.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

இறைவனுக்கு நன்றி.

தங்களின் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள்

Ranjani Narayanan said...

குரு பூர்ணிமா அன்று உங்களது மேதா தட்சிணாமூர்த்தி பற்றிய தகவல்கள் மனதிற்கு இதமாக இருந்தன. உங்களின் புண்ணியத்தில் கொஞ்சம் எங்களுக்கும் வரும்.