Monday, August 12, 2013

ஆசை.... ஆசை...... பேராசை இப்பொழுது!!!!!!

பதிவர் கீதா சாம்பசிவம் கல்யாண சடங்குகள் பத்தி எழுதிக்கிட்டு வர்றாங்க. படிக்க ரொம்ப நல்லா இருக்கு என்பதோட மட்டுமில்லாம நிறைய்ய விஷயங்கள் தெரிஞ்சிக்க முடியுது. அந்த பதிவுகளை படிக்கும்பொழுது என் மனசுலயும் ஒரு ஆசை.... எஸ்.... அதேதான். அதேமாதிரி பதிவுகள் எழுதணும் என்கிற பேராசைதான் அது :)

பல வீடுகளில் கல்யாண சடங்குகள் இவைதான்னு சரியா தெரியாம இருக்காங்க. மாப்பிள்ளை வீடுன்னா என்ன செய்யணும்? மணமகள் வீடுன்னா என்னென்ன செய்யணும் எல்லாம் தெரியவில்லை. வீட்டு பெரியவங்க கிட்ட கேட்டு குறிப்பு எழுதி வைக்கணும் என்பதெல்லாம் பலருக்கு தெரிவதில்லை. கடைசியில் மகனுக்கோ, மகளுக்கோ திருமணம்னு வரும்போது சாஸ்திரிகள் சொல்வதை செய்ய ஆயத்தமாவாங்க. இதுல முக்கியமான விஷயம் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும்னு தனி சடங்குகள் இருக்கும். அது சாஸ்திரிகளுக்கும் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்காது. கடைசியில கல்யாண வீட்டுல  கண்ணை கசக்கி, அழுது ஆர்பாட்டம் செய்வது எல்லாம் நடக்கும்.

அதைவிட நம்ம வீட்டுல இதுதான் முறைன்னு கேட்டு எழுதி வெச்சுக்கிட்டா நல்லதில்ல. கல்யாண சடங்குகள் பத்தி பதிவு எழுதணும்னு நினைச்சதும் அம்மம்மாக்கு போன் போட்டேன். நல்ல ஐடியா!!! எழுதுன்னு சொன்னாங்க. அவுட்லைனா போன்ல விவரம்கேட்டுகிட்டு, அதை எடுத்து தனியா எழுதின்னு ஆரம்பிச்சிருக்கேன்.  பதிவுகளுக்கு போட்டோ தான் ஸ்வாரஸ்யம் அதுக்குத்தான் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கு. பாப்போம் முடிஞ்ச வரைக்கும் படங்களுடன் பதிவு வரும்.


சரி எந்தவகை சடங்கு பத்தி பதிவு: அதுதான் மேட்டர். நமக்குத் தெரிஞ்சதுதான் பெஸ்ட். :)) தெலுங்கர்கள் கல்யாணம் பத்தின பதிவு. இதுலயும் இரண்டு வகை இருக்கு. ஆந்திரா தெலுங்கர்கள், தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கர்கள். இதுலேயே பேதம் ஆரம்பமாகுது. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அதாவது கிருஷ்ணதேவராயர் காலத்துல சிலர் ஆந்திராவிலிருந்து புறப்பட்டு தமிழகத்துக்கு வந்தாங்க.  அப்படி வந்தவர்களில் சிலர் தெலுகு பிராம்மணர்களும் இருந்தாங்க. 

அதிலும் உட்பிரிவுகள் இருக்கு. சைவர்கள் ஸ்மார்த்தா  வைதீகி என்று அழைக்க படுகிறார்கள்.  வேதம் படித்தவர்கள்  அல்லது அரசரவையில் வேலை பார்த்தவரள் (நியோகி) - வைஷ்ணவத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீ வைஷ்ணவா என அழைக்கப்படுகிறார்கள். ஆந்திராவில் அதிகம் யஜுர்வேதக்காரர்கள் தான்.  ரிக்வேதிகள் குறைவு. 

தெலுகு ப்ராம்மணர்களில் எனக்கு தெரிஞ்ச உட்பிரிவுகள் கர்ணகம்மலு, முலகநாடு, நியோகி, ஆறுவேல நியோகி, வெல்நாடு, வேங்கிநாடு, கோனசீமா, தெலுங்கான்யம். இங்க ஆந்திராவுல பார்த்தா இன்னும் கூட வருது. முக்கியமா இந்த மாதிரி பிரிவுகள் அவங்க இருந்த ஊரின் பேராவோ இல்லை பார்த்த வேலையை வெச்சோ தான் இருக்கு. கர்ணகம்மலு - இதற்கு அர்த்தம் பயங்கர குழப்பமா இருக்கு. கர்ணம் என்றால் காது - கம்மலு, அதேதான் கம்மல். அப்படி அர்த்தம் சொல்றவங்க இருக்காங்க. சிலர் கிராமத்துல கர்ணமா வேலை பார்த்தவங்க அப்படின்னு சொல்றாங்க.

ஆந்திராவில் வெங்கடகிரிங்கற ஊர்ல ஒரு தெருவுக்கு பேரே கர்ணகம்மா ஸ்ட்ரீட். கர்ணூலிலும் இதே பேர்ல ஒரு தெரு இருக்கு. தமிழகத்தில் கோயம்புத்தூரில் மட்டும் 200 கர்ணகம்ம பிராமின் குடும்பங்கள் இருப்பதா சொல்றாங்க. சென்னையில் நிறைய்ய பேர் இருக்காங்க. அதனலாத்தான் கர்ணகம்ம சபான்னு ஆரம்பிச்சு அந்த பிரிவை சேர்ந்தவர்களின் ஏழை குழந்தைக்கு படிப்பு, திருமணத்திற்கு உதவுவது, சமஷ்டி பூணல், சமஷ்டி கல்யாணம் எல்லாம் நடத்தறாங்க.

ஆனா ஆந்திரா பிராம்மின்ஸ் சிலர் கர்ணகம்மா பிராம்மணர்களே இல்லை, அவர்கள் கம்மா வகையறாக்கள்னு சொல்வாங்க. எது எப்படியோ தனது சம உட்பிரிவுக்காரர்களுக்கு இணையா  முன்னேறி வர ஆரம்பிச்சாச்சு. எஸ் மீ டூ கர்ணகம்மா. அதனால எங்களுக்குன்னு தெரிஞ்ச சடங்கு விவரங்களை இங்கே தொகுத்து வழங்க போறேன்.

தமிழகத்துக்கு வந்து செட்டில் ஆன தெலுங்கர்கள் பலர் தங்களுடைய வீட்டு பெயரை சேர்த்துக்கொள்வதை விட்டுட்டாங்க. சில சடங்குகள் தமிழர்கள் மாதிரி இருக்கும். சிலது ஆந்திராவுல இல்லாத மாதிரி இருக்கும். காரணம் சில தெலுங்கு பத்ததிகள் கன்னட மாத்வா பத்ததிகள் மாதிரி இருக்கும். (பத்ததி paddadthi) - முறை அல்லது சடங்கு)

இப்பதான் தெலுகு மேட்ரிமோனில் எல்லாம் வந்திருக்கு. அப்பல்லாம் ஒரே உட்பிரிவுகளுக்குள்தான் திருமணம் செய்வாங்க. முலகநாடு பெண்ணுன்னா முலகநாட்டு பையனுக்குத்தான் தருவாங்க. இப்ப subsects no bar அப்படின்னு சொல்லி கல்யாணம் நடக்குது. பெரியவங்க கொஞ்சம் முகம் சுழிச்சாலும் ஒத்துக்கறாங்க. அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களுக்கு சொல்லி வெச்சு பையன், பொண்ணு தேடுவது இன்னமும் வழக்குல இருக்குன்னாலும், தெலுகு பிராம்மணசபா (TBM) மணமகன், மணமகள் விவரங்களை தொகுத்து வழங்கறாங்க. மாதாமாதம் பணம் கட்டினவங்க பெயர் விவரங்களை விளம்பரமா கொடுத்து ஒரு புத்தகமே மெம்பர்களுக்கு அனுப்பி வைக்கறாங்க.

வரும் பதிவுகளில் தமிழகத்தில் செட்டிலான  தெலுகு பிராமின் கர்ணகம்மலு பிரிவினரின் கல்யாண சடங்குகள் பத்தி பதிவுகள் வரும். அதிலும் ரிக் வேத முறை. இதை ஏன் இவ்வளவு முறை சொல்றேன்னு சொன்னா ரிக்வேத பத்ததிக்கும், யஜூர் வேத பத்ததிக்கும் வித்தியாசம். ஆந்திரா- தமிழ்நாடு தெலுங்கர்களின் சடங்குகளில் இருக்கு வித்தியாசம். யோசிக்காம சிலர் இப்படி கிடையவே கிடையாதுன்னு சொல்லிட வாய்ப்பு இருக்கு.

ஆரம்பம்.... ஆரம்பம்  ஆனதே...


6 comments:

இராஜராஜேஸ்வரி said...

நம்ம வீட்டுல இதுதான் முறைன்னு கேட்டு எழுதி வெச்சுக்கிட்டா நல்லதில்ல.

நல்ல முயற்சி.. பாராட்டுக்கள்..!

சாந்தி மாரியப்பன் said...

இதை நானும் நினைத்ததுண்டு. ஆனா, ஒரு வருடத்துக்குள் நடந்த மூன்று தம்பிகளின் திருமணங்களிலும் வெவ்வேறு வகை சடங்குகள். கேட்டா இப்படித்தான் செய்யணும்ன்னு பதில் வருது. அப்ப மொதல்ல செஞ்சது சரியில்லையான்னு கேள்விகள் மண்டைக்குள்ள குடையுது. பதில் சொல்லத்தான் யாருமில்லை. சரின்னு விட்டுட்டேன். பசங்க டைம் வரும்போது பார்த்துக்கலாம் :-)))

pudugaithendral said...

வாங்க இராஜராஜேஸ்வரி

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

pudugaithendral said...

வாங்க அமைதிச்சாரல்,

எனக்கு தெரிஞ்ச விவரத்தை சொல்றேன்.

கல்யாணம்னு வரும்போது இரண்டு குடும்பங்கள் இணையுதுல்ல. அதனால அவங்கவங்க வீட்டு பழக்கம்த்தை செயல்படுத்துவாங்க.
அதனால கன்ஃப்யூஸ் ஆகுது. (இதைப்பத்தி விரிவா பதிவு வருது)

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா அடுத்த கல்யாணம் பற்றிய தொடரா.....

எழுதுங்க....

தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

pudugaithendral said...

வாங்க சகோ,

தொடர் ஆரம்பமாயாச்சு. சீதா கல்யாண வைபோகமே....


தொடர்வதற்கு நன்றி