Friday, November 22, 2013

செம்மலர் பால் பண்ணை!!!

ஒரு ராஜாவிடம் எத்தனையோ செல்வம் இருந்தாலும், எத்தனை மாடுகள் இருக்கிறதோ அதை வைத்துத்தான் செல்வத்தை கணக்கிடுவாங்கன்னு பெரியவங்க சொல்ல கேள்விபட்டிருப்போம்.  எங்க புதுக்கோட்டையையும் அப்படி கணக்கு போட்டுப்பாத்தா எம்புட்டு செல்வ செழிப்போட இருந்திருக்குன்னு நினைச்சு பார்க்கறேன்.

 பால் பாக்கெட்டெல்லாம் வராத காலம் அது.  நாங்க இருந்த கீழ 3ஆம் வீதியில் கோபால் அண்ணாவீட்டில் மாடு இருக்கும். கோபால் அண்ணா வீடு வீடாக பால் கொண்டு வந்து ஊத்துவாங்க. சைக்கிளில் இருக்கும் மணியை அடிச்சுகிட்டு வருவதை வெச்சே பால் வண்டி வந்திருச்சுன்னு சொல்லலாம். கோபால் அண்ணா மட்டுமில்லை ஒவ்வொரு வீதிக்கும் ஒண்ணு அல்லது ரெண்டு  பால்க்காரர் இருந்த ஊர் எங்களது. செம்மல பால் பண்னை பேர் மட்டும் தான் ஞாபகம் இருக்கு.  காலையில் மாலையில் ரெண்டு வேளையும் பால் கொண்டு வந்து தருவாங்க. ஃப்ரிட்ஜெல்லாம் கிடையாது. மாடு கண்ணு போட்டிருந்தா சீம் பால் கொண்டு வந்து கொடுப்பாங்க சிலர். பால்கோவா அன்னைக்கு கண்டிப்பா உண்டு. :)

நான் பிறந்த பொழுது எங்க அம்மம்மா வீட்டுல கூட மாடு வெச்சிருந்தாங்களாம். ஒரே மாட்டு பால் குடிச்சு வளர்ந்தா நல்லதுன்னு தாத்தா காலையிலயும், சாயந்திரம் அம்மம்மாவும் பால் கொண்டு வந்து கொடுப்பாங்க.

நாங்க வடக்கு 4ஆம் வீதி வீட்டுக்கு போன புதுசுல எனக்கு மதியம் 1 மணிக்கு ஒரு புல்லுக்கட்டு வண்டி வந்து வீதி முழுக்க பல வீட்டு வாசல்ல புல்லுக்கட்டு போட்டுட்டு போவதை பார்த்து ஆச்சரியமா இருக்கும். ஆரஸ்பதி கட்டு இல்லாட்டி விறகு கட்டு கூட இப்படி வண்டியில கொண்டு வருவாங்க. ஆனா யார் வேணுமோ அவங்கதான் வாங்குவாங்க. ஆனா புல்லுக்கட்டு நிறைய்ய வீடுகள்ல போடறாங்கன்னா அத்தனை பேர் வீட்டுலயுமா மாடு இருக்குன்னு எனக்கு நிறைய்ய ஆச்சரியம்.

எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி, எதிர் வீட்டுல மாடு இருக்கறது தெரியும். ஆனா அந்த வீதி மொத்தமே நிறைய்ய பேர் வீட்டுல மாடு வெச்சிருந்தாங்க.  எதிர் வீட்டுல பால் வாங்கி கிட்டு இருந்தோம் கொஞ்ச நாள். அப்புறம் ஆஸ்தான பால் டெலிவரி மோகனம்மா தான். (எஸ்.... மோகனோட அம்மா) 3.30 மணிக்கு பால்கறப்பவர் வந்ததும் 1 லிட்டர் பால் கொண்டு வந்து கொடுத்திடுவாங்க. அதை விட்டா அவங்க தூங்கி எழ மணி 6 ஆகிடும். அதனால தான் இந்த ஏற்ப்பாடு. அதோட எனக்கு காலை அலாரம் அவங்கதான். “கலா பாலை வாங்கி வெச்சிட்டு படிக்க உட்காருன்னு”!!! சொல்லிட்டு போவாங்க.

இத்தனை வீட்டுல பால் மாடு இருக்கே கறந்து என்ன செய்வாங்கன்னு யோசனை வந்தப்பதான் தெரிஞ்சது எல்லா பாலையும் எடுத்துபோக பண்ணைலேர்ந்து ஆள்வருவாங்கன்னு. பால் பண்ணையில் இருந்து கூட பால் வாங்கியாந்து கொடுப்பவங்க இருந்தாங்க. ஊருக்கே விநியோகம் நடந்தது. எங்க ஊர்ல பால் பண்னை திருக்கோகர்ணம் போற வழியில இருக்கு.  திருச்சியிலேர்ந்து வரும்போது திருக்கோகர்ணம் வழியா வந்து பால்பண்னை தாண்டி, பழநியப்பா ஸ்டாப்பிங் வழியா தான் பஸ் பஸ்ஸ்டாண்ட் போகும்.  சாண வாசனையுடன் பால்பண்னை வந்திருச்சிருங்கறதை கண்டக்டருக்கு முன்னாடி சொல்லும் மாட்டு சத்தம். 

 சில பல காரணங்களால அக்கம்பக்கத்து வீட்டுல பால் வாங்குவதை விட்டு பாட்டி பண்ணையிலிருந்து ஆள் கொண்டு தர்றவரை பிடிச்சு ஏற்பாடு செஞ்சாங்க. ரெண்டு பால் கேன் வாங்கி வெச்சுக்கணும்.  பால் கேனை கொடுத்துட்டு எம்ட்டி கேனை எடுத்து கிட்டு போவாரு. அடுத்த வேளை அந்த கேனில் பால் கொண்டு வந்து கொடுப்பாரு. அப்புறம் திரும்ப மோகனம்மாவே கொடுக்க ஆரம்பிச்சாங்க.

மாட்டுப்பொங்கல் அன்னைக்கு எங்க வீதியே திருவிழா கோலத்துல இருக்கும். அத்தனை பேர் வீட்டுலயும் இருக்கற மாட்டை ஜல்லிக்கட்டு மாதிரி ஜோடிச்சு, சும்மா பிடிச்சுகிட்டே ஒடியாந்து ஏதோ விளையாட்டு நடக்கும். குட்டி கன்னுக்குட்டியெல்லாம் கூட ஜல்லிக்கட்டுக்கு வரும். சின்ன பசங்களு பரிசு கன்னுக்குட்டி கழுத்துல இருக்கற கரும்பு மாலை. :))

வீடு வீடா பால் கொண்டு வந்து கொடுப்பவங்க, வீட்டுக்கே வந்து பால் வாங்குவங்க இத்தனை பேர் தேவைகளுக்கும் போக மீதம் பண்னைக்கு கொடுத்து அங்கேயிருந்தும் பால் பல வீடுகளுக்கு போயிருக்குன்னா என்னா ஒரு செல்வ செழிப்பு எங்க ஊர்ல. யப்பா..... நினைச்சுப்பாக்கும்போதே மலைப்பா இருக்கும்.


சமீபகாலத்துல நிறைய்ய மாற்றங்கள். வடக்கு 4 பத்தி தெரியலை. அப்பா அம்மா இப்ப வேற இடத்துக்கு மாறிட்டாங்க. பால்பண்னை இருந்த இடம் மட்டும் அப்படியே இருக்கு!!! மாடே இல்லை. எத்தனை செல்வ செழிப்பா நம்ம ஊரு இருந்துச்சுன்னு நினைச்சு பார்த்துக்கறேன். பால் பாக்கெட்டுகளில் கலப்படம், பழைய பாக்கெட் பால்களை வாடிக்கையாளர்களுக்கு தாரளமா கொடுப்பதுன்னு தில்லுமுல்லுகள் நடக்கும்போது எங்க ஊர்ல பால்வியாபரத்தை பத்தி நினைச்சு பாத்துக்கறேன்.


12 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கும் தில்லுமுல்லுகள் என்றாகி விட்டது...

மனோ சாமிநாதன் said...

சிறு வயது அனுபவங்கள் சுவாரசியத்துடனும் இனிமையுடனும் இப்படித்தான் மனதில் நிலைத்து விடும்!

அருமையான பதிவு!

புதுக்கோட்டை என்றால், தஞ்சாவூருக்குப்பக்கத்தில் தான் இருக்கிறீர்களா?

வெங்கட் நாகராஜ் said...

இப்போ பல பெயர்களில் பால் பாக்கெட்.... அப்போது வீடுகளில் கொண்டு வந்து கரந்த பால் கொடுப்பார்கள்... நல்லாவே இருக்கும். இப்போது எங்கும் எதிலும் கலப்படம்...

புதுகைத் தென்றல் said...

வாங்க தனபாலன்,

ஆமாம், :(

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க மனோ சாமிநாதன்.

புதுக்கோட்டையில் தான் பிறந்து வளர்ந்தது எல்லாம். தற்போது ஹைதையில் இருக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க சகோ,

எல்லா ஊர்லயும் இந்த மாற்றம் வந்திருச்சுன்னே நினைக்கிறேன்.

வருகைக்கு மிக்க நன்றி

நம்பள்கி said...

+1

புதுகைத் தென்றல் said...

நன்றி நம்பள்கி

Pudukai Ravi said...

அருமையான பதிவு. நானும் கீழ மூன்றாம் வீதியில் வசித்து இருப்பதால் செம்மலர் பால் பண்ணைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் வீட்டிற்கு கிராமத்திலிருந்து வயதான தாய்மார்கள் ( மண்வாசனை காந்திமதி போல இருப்பார்கள் ) தயிர், மோர், வெண்ணை போன்றவற்றை கொண்டு வந்து கொடுப்பார்கள். மிகவும் சுவையாக இருக்கும். இப்பொழுது பாக்கெட்டில் கிடைக்கும் பாலும், தயிரும் நன்றாக இல்லை. நன்றி புதுகைத் தென்றல்

Anonymous said...

வடக்கு நாலு புகழ் பாடும் பதிவிற்கு நன்றி
-பாண்டியன்

புதுகைத் தென்றல் said...

வாங்க புதுகை ரவி,

உடையார் தாத்தா தயிர் அதுவும் அவர் கொட்டாங்குச்சியால் செய்த கரண்டியால் எடுத்து ஊத்துவது கொசுவத்தியா சுத்துது. கீழ 3ல் எங்கே? செட்டியார் கடைக்கு எதிரில் டிசம்பூர் பூ விற்பார்களே அவர்கள் வீட்டில் தான் நாங்க இருந்தோம்.

வருகைக்கு மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கடைசி பெஞ்ச்,

:))

வருகைக்கு மிக்க நன்றி