Wednesday, January 18, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா??? பாகம் - 15

உறவினர்கள் வருகை பல சமயம் சந்தோஷத்தை தரும். சில சமயம் இவங்க கிளம்பிப்போனதும் இருக்கே கச்சேரின்னு பயங்கொள்ள வைக்கும். வாட்சப்ல உலவின ஒரு படத்துல சொல்லப்பட்டிருந்த வாக்கியம் நிஜம்தான்னு தோணும். “ நாரதர் எல்லா இடத்துலயும் இருக்க முடியாதுன்னு உறவினர்களை படைச்சிருக்காப்லனு”. எத்தனை பேருக்கு உறவினர் இருக்கும்போதோ கிளம்பிப்போனதுமோ சரி மண்டகப்படி நடந்திருக்கு நினைச்சு பாருங்க.

தினமும் சஷ்டி கவசம் சொல்லாம சோறு திங்க மாட்டேன். இது யாரும் சொல்லாம எனக்குள் வந்த பக்தி. கோவிலுக்கு போக ரொம்ப பிடிக்கும். காரணம் நல்லா பாசிடிவ் வைப்ரேஷன் சேத்துக்கிட்டு வரலாம். (சாமி ஊர்வலம் வருவதைக்கூட  கோவிலுக்கு வரமுடியாத பக்தர்களுக்காக சாமி  வைப்ரேஷனை தர ஒரு ஐடியான்னுதான் எங்க அம்மம்மா சொல்வாங்க) வீட்டுக்கு வந்த ஒரு உறவினர் அவங்க பொண்ணு ஏதோ ஸ்லோகம் சொல்வதாகவும் தினமும் அதை சொல்லாம இருக்க மாட்டாங்கன்னும் பெருமையா சொல்லிட்டு, போகும்போது உம்பொண்ணுக்கும் இதெல்லாம் சொல்லிக்கொடு, இன்னமும் இதெல்லாம் தெரியலையேன்னு பத்த வெச்சிட்டு போயிட்டாங்க.

 அம்மாவும் ரொம்ப திட்டினாங்க. அப்பல்லாம் எதிர்த்து பேச முடியாதே!! வளர்ந்து திருமணமெல்லாம் ஆனதும்தான் அம்மாகிட்ட அந்த டாபிக்ல பேசினேன். அந்தப்பொண்ணு பெருசா ஸ்லோகமெல்லாம் சொன்னிச்சுன்னு எனக்குத் தெரியலைன்னு திட்டீனீங்க இப்ப அந்த பொண்ணோட நிலையை என்னைய பாருங்க. யார் திறமைசாலின்னு புரியுதான்னு கேட்டப்ப,  அம்மா சொன்னது,” ஆமாம் எனக்கு அப்ப தெரியலை. ஏதோ பெரியவங்க சொன்னாங்களேன்னு நானும் உன்னை திட்டிட்டேன்னு” சொன்னாங்க.

எங்கம்மான்னு இல்லை. பல அம்மா, அப்பாக்கள் செய்யற தப்பே இதுதான். வீட்டுக்கு வரும் விருந்தினர்கிட்ட நம்ம குழந்தையை ஒரு ஃப்ர்மாஃபன்ஸ் போட்டு காட்டி அவங்க கிட்ட பாராட்டு பத்திரம் வாங்கிடணும். “மாமாக்கு ரைம் சொல்லு, அத்தைக்கு இந்த பாட்டு பாடிகாட்டுன்னு” அவங்களை நாம துன்புறுத்தறதெல்லாம் வேற லெவல். சூப்பர் சிங்கர் ஜூனியருக்கெல்லாம் முன்னோடி இந்த ஃபர்ஃபாமன்ஸ். அந்த குழந்தைக்கு விறுப்பு இருக்கா இல்லையா இதெல்லாம் கவலையே பட மாட்டோம். சொன்னா உடனே பாடணும் இல்லை பேசணும். இல்லாட்டி விருந்தினர் போனதும் நல்லா திட்டுறது இல்ல அடிக்கறதுன்னு அவங்களுக்கு டார்ச்சர். நம் பிள்ளை வளர்ப்பை பத்தி அவங்க  சர்டிபிகேட் கொடுத்து என்ன ஆகப்போகுது.

நம்ம பிள்ளையின் மனசு நமக்கு முக்கியம். அதை நோகடிக்காம இருந்தோம்னாலே பெரிய விஷயம். படிப்பைத் தவிர பிள்ளை வேற ஏதோ ஒரு கலையை கத்துக்கறது நல்லது. ஆனா வீட்டுக்கு வர்றவங்க முன்னாடி எல்லாம் செஞ்சு காட்ட சொன்னா நல்லா இருக்குமா? பாடுறவங்களை பாடச்சொல்லி டார்ச்சர் கொடுக்கற மாதிரி கராத்தே கத்துக்கறவங்களை மாமாவுக்கு ஒரு அட்டாக் போடுன்னு சொல்வோமா!!!

இப்ப பிள்ளைகளா இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். மொபைல், கேம்ஸுன்னு அவங்க வாழ்க்கை ஆகிடுச்சு. ஓடியாடி விளையாட முடியாத அளவுக்கு படிப்பு கழுத்தை நெறுக்குது. ஸ்கூல்லயும் படிப்பு மட்டும்தான். எக்ஸ்ட்ரா ஆக்டிவிட்டீஸெல்லாம் இருக்கும். ஆனா அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க.

முன்னெல்லாம் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல ஒரு புக் இருக்கும் எனக்கு அது ரொம்ப பிடிக்கும். (நான் படிச்சது தமிழ் மீடியம், அரசினர் பள்ளிதான்) அந்த புத்தகத்துக்கு பேரு GK. (General Knowledge). Moral values பத்தில்லாம் ரொம்ப அழகா ஒவ்வொரு பாடம் இருக்கும். தமிழ்வழிக்கல்வில கூட புத்தகம் இல்லாட்டியும் வகுப்பு ஆசிரியை இந்த வகுப்பை நடத்துவாங்க. அதுல நீதிக்கதைகள் சொல்வது, நல்ல விஷயங்கள் போதிப்பதுன்னு இருக்கும். வீட்டுலயும் பெரியவங்க நேரம் ஒதுக்கி பேசுவாங்க. அதனால நற்சிந்தனையோட எல்லோரும் இருந்தாங்க.

இப்ப ஸ்கூல்ல டீச்சருக்கு இருக்கற பெரிய டென்ஷன் போர்ஷன் முடிப்பது மட்டுமில்லாம , எல்லா பிள்ளைகளும் 100க்கு நூறு வாங்க வைப்பது. இதுக்கு தான் எடுக்கும் பீரியட் போறாம அடுத்த டீச்சர் பீரியடையும் கடன்வாங்கி ஒட்டுறாங்க. இந்த நிலையில டீச்சருக்கு நீதிபோதனை வகுப்பெடுக்க எங்க நேரமிருக்கு. மேனேஜ்மெண்ட்ல இந்த பீரியட், விளையாட்டு பீரியட், லைபரரி பீரியடெல்லாம் காணாம போக்கிட்டு மொத்தமும் படிப்பையே வெச்சிட்டாங்க.
பசங்களுக்கு ரிலாக்ஸ் செய்யவோ ஒரு ப்ரேக் கொடுத்துக்கவோ வாய்ப்பே இல்லை.

அவ்வளவு பணத்தைக்கட்டி ஸ்கூல்ல சேத்திருக்கோம். ஸ்கூல்லதான் எல்லாம் சொல்லித்தரணும்னு பெத்தவங்க ரெண்டு பேரும் பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. அவங்களுக்கே நேரமில்லை என்பதுதான் உண்மை. நாமளும் வீட்டுல நீதிபோதனைக்கதைகள் எல்லாம் சொல்லி பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது சொல்லிக்கொடுப்பதில்லை, ஸ்கூல்லயும் நேரமில்லைன்னு ஆனதுக்கப்புறம் அந்த பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும்.

இதெல்லாம் தந்திருக்கும் மன உளைச்சல் பிள்ளைகளுக்கு தன்னை அழகா உருவாக்கிக்கத் தெரியாம போயிருச்சு. படிப்பு மட்டும் இருந்தா போதுமா? நல்ல குணம் வேண்டாமா?  பதின்ம வயதுப்பிள்ளைகளுக்கு personality development  சொல்லிக்கொடுக்க போவது யாரு? ஆசிரியர்களா? இல்லை பெற்றோரா??!!! இதைப்பத்தி யோசிச்சிருப்போமா?? சும்மா இந்த தலைமுறை குழந்தைகள் சரியில்லை, மரியாதையில்லைன்னு குத்தம் மட்டும் சொல்றோம். எத்தனை பேர் குழந்தைகள்  மனசுவிட்டு பேசும் சூழலை அமைச்சுத்தர்றோம்.

அவங்க நட்பு வட்டம் சரியில்லை என்பதுதான் பெரிய குற்றச் சாற்று. ஆமா எல்லார்வீட்டிலயும் இதே நிலை அப்படிங்கும்போது அந்த பிள்ளைகள் மட்டும் எங்கேயிருந்து கத்துக்கும்? இப்ப பிள்ளைகளுக்கு நல்ல நட்பு சாத்தியம் ரொம்ப குறைவு. நமக்கு இருந்த மாதிரி ஒரு நல்ல நட்பு, உறவினராக மாறிப்போகும் நட்பு கிடையாது. முகநூலில், வாட்சப்பில் சாட்டிங் போய்கிட்டே இருக்கும். ஆனாலும் அவங்க மனதில ஒரு வெறுமைதான் இருக்கும். நட்புக்கு இலக்கணம் எந்த பிள்ளைக்கும் சொல்லிக்கொடுக்கப்படுதா? தமிழை பாடமா எடுத்து படிச்சிருந்தா அட்லீஸ்ட் மனனப்பகுதிக்காகவாவது திருக்குறள்கள் படிச்சிருப்பாங்க. வேற பாஷை எடுத்தது தப்பில்லை. ஆனா திருக்குறள், கதைகள் இதை நாம சொல்லிக் கொடுக்கணும். ஆமா இதை செய்ய வேண்டியது பெத்தவங்கதான். தாத்தா பாட்டிகள் கூட இருந்தா அவங்க இதை செஞ்சிருப்பாங்க. நமக்கு தாத்தா பாட்டிதான சொன்னது. இப்ப வரைக்கும் என் அம்மம்மா, அவ்வா சொல்லிக்கொடுத்ததுதான ஞாபகம் இருக்கு.


 கதை சொல்லி சோறு ஊட்டுவதை என்னைக்கு நிப்பாட்டி கார்ட்டூனும், யூட்யூப்ல பாட்டும் கேட்க விட்டு சோறு ஊட்ட ஆரம்பிச்சோமோ அப்பவே அருமையான நீதிபோதனை நேரத்தை பெற்றோர்கள் தொலைச்சாச்சு. பெத்தவங்களுக்கும், குழந்தைக்கும் இடையே ஒரு அருமையான பொழுது அந்த பொழுது. இது தன்னுடைய கடமைன்னு பலருக்கு நினைவும் இல்லை. இவங்க தப்பு கிடையாது. அவங்க பெற்றோர் செஞ்சிருந்தா கண்டிப்பா இவங்களும் செய்வாங்க.

நிலாவை காட்டி சோறு ஊட்டின தாய் போய் யூட்யூப் காட்டி சோறு ஊட்டுவது பழக்கமாடிச்சு. அதை விட்டு சோறு பினைஞ்சு குட்டி குட்டி கைகளில் உருண்டை உருட்டி வெச்சு தன் கையால சாப்பிட வெச்சா தன் கையின் ருசி பட்டு பிள்ளை சோறை விரும்ப அரம்பிக்கும். பிள்ளைகளுக்கு மன உளைச்சல் உண்டு. இரவில் தூக்கமில்லாத எத்தனையோ பதின்ம வயதுக்குழந்தைகள் உண்டு. எல்கேஜி குழந்தைக்கும் மன உளைச்சல் உண்டு என்பதுதான் இப்போதைய வருத்தமான விஷயம்.

குழந்தைகளின் உலகத்தை கொஞ்சம் எட்டி பாப்போம். அவங்களுக்கு நம்மால என்ன செய்ய முடியும்? அதையும் யோசிப்போமா??!!!!

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பல நல்லதும் தொலைத்து விட்டோம் என்பது உண்மை...

புதுகைத் தென்றல் said...

இரண்டு தசாப்தாங்களாக தொலைக்கப்பட்ட நல்ல விஷயங்களை மீட்டெடுக்கணும்.
வருகைக்கு மிக்க நன்றி

Dr B Jambulingam said...

நாம் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருப்பனவற்றைப் பற்றிப் பகிர்ந்த விதம் அருமை.

Krishnamurthi Balaji said...

பெத்தவங்க குழநதைகள கவனிக்கறத விடவும் அதிகமா வாட்ஸாப்பயும், ஃபேஸ்புக்கயும் கவனிக்கறாங்க. அத நிறுத்தி குழந்தைங்க மனசுக்குத் தகுந்தபடி அவங்ககிட்ட ஒரு அரைமணி நேரம் செலவழிச்சா போதும்! குழந்தைங்களுடைய மனோபலம் கூடும்! மனநலம் பாதுகாக்கப்படும்!

புதுகைத் தென்றல் said...

வாங்க ஐயா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

புதுகைத் தென்றல் said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி பாலாஜி,

முகநூல் வாட்சப் எதுவும் தவறில்லை. அதில் அதிக நேரம் செலவிடாமல் சீக்கிரம் வெளிவரத் தெரியணும். பிள்ளைகள் எதிரில் நாமும் அதிக நேரம் உட்காரும்போதுதான் பிரச்சனையாகுது.

வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றி