Thursday, February 16, 2017

கொடி அசைந்ததும் காற்று வந்ததா???!!!!.....பாகம் 17


ஒரு திரைப்படத்தை அல்லது நாடகத்தை மிகவும் ரசித்து பார்க்கிறோம். சில சமயம் அந்த நாயகன் நாயகிக்கு அந்த கேரக்டரே பேராக அமையும் அளவிற்கு மிகச் சிறந்த நடிப்பாக இருக்கும். ”சிவாஜி” கணேசன் என்று சொன்னாலே கம்பீரமான நடிப்பு, கர்ஜிக்கும் குரல் எல்லாம் நினைவுக்கு வரும். வெறும் கணேசன் என்று போட்டால் ஜெமினி கணேசனா யாரு? என குழப்பம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நடிகர் தனது கதாபாத்திரத்துடன் ஒன்றி சிறப்பாக நடித்தால்தான் முழுமை பெறும்.

 போலீஸ் என்று சொன்னாலே தங்கபதக்கம் சிவாஜி என்று அந்தக்கால ரசிகர்களும் காக்க காக்க சூர்யா என இந்தக்கால ரசிகர்களும் போற்றும் அளவுக்கு அந்த பாத்திரத்துடன் ஒன்றி உடலை ஏற்றி, மெருகு கூட்டி நடித்திருப்பது புரியும். எத்தனையோ பேர் போலிஸாக நடித்திருந்தாலும் சிலரே அந்தப் பாத்திரத்துக்கு பொருந்துவதன் காரணம் சில எக்ஸ்ட்ரா மெனக்கெடல்கள்.

 இதை ஆங்கிலத்தில் method acting என்பார்கள். வில்லனாக நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அந்த பாத்திரங்களைச் செய்தவர்களுக்குத்தான் தெரியும். அலுவலகத்திலோ, வீட்டிலோ பிரச்சனை ஏதும் ஏற்பட்டால் உடனே வாயிலிருந்து வரும் டயலாக் “என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்!” இது சத்தியமான உண்மை. தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் புரியும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அனுபவம் தான் சரியான ஆசான். வாதம் விவாதமாகி பெரிய பிரச்சனையாகிடகாரணம் பிரச்சனையை சரியாக புரிந்து கொள்ளாமல் போவதே.

 இது எந்த வித பிரச்சனையாகவும் இருக்கலாம். கோர்ட்டில் வாதிடும் போது வாதி, பிரதிவாதி என குற்றம் சாற்றுபவர், குற்றம் சாற்றப்பட்டவர் என இரண்டு பக்கமும் வக்கீல்கள் பேசுவார்கள். அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் வக்கீல் வைத்துக் கொண்டிருக்க முடியாது. mono acting என்று ஒருவகை நடிப்பு உண்டு. இதில் கூட யாரும் நடிக்க மாட்டார்கள். ஒருவரே வேறு சில கதாபாத்திரமாகவும் நடிப்பார். மிகச்சிறந்த நடிப்பின் வெளிப்பாடாக இது இருக்கும். இதே போல மற்றவரின் இடத்தில் நாம் இருந்தால் நமது ரியாக்‌ஷன் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நம்மை அந்த தருணத்தில், இடத்தில் நிறுத்தி வைத்துப்பார்த்தால் நிலமையின் தீவிரம் புரியும்.

 ஆங்கிலத்தில் இதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். Always put yourself in others' shoes. If you feel that it hurts you, it probably hurts the other person, too. ஆம் அடுத்தவரின் பக்க நியாயத்தை அறிய இதை விட சிறந்த வழி இருக்காது. 25 வயதில் தந்தையைக் கண்டால் மகனுக்கு பிடிக்காது. அம்ஜத்கானாகத்தான் தெரிவார். அந்த மகனுக்கும் திருமணமாகி குழந்தை பிறந்து வளரும் பொழுது தகப்பனாக தன்னை உணர ஆரம்பிக்கும் பொழுது தன் தந்தையை மிகவும் நேசிக்கத் துவங்கி விடுவார். ( மகன் உணர்ந்ததை அறிய முடியாத தூரத்துக்கு தந்தை போயிருக்கக்கூடும்!!)

 அம்மா என்பவள் ட்ரில் மாஸ்டர் போல் வீட்டில் வேலை வாங்குகிறாள், கத்துகிறாள் என்றே மகள் தந்தையின் துணையோடு அன்னையிடம் அன்னியப்பட்டு போகிறாள். அவளும் தாயாகும் பொழுதுதான் அன்னையாக இருப்பதன் கஷ்ட நஷ்டங்கள் புரிய ஆரம்பிக்கும். தனக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை, தனது கம்பெனி சரியில்லை, உயரதிகாரி சரியில்லை என வருந்துபவர்கள் ஒரு கணம் தன்னை அந்த உயரதிகாரியாகவும் தனக்கு கீழ் ஒருவர் தன்னைப்போல(ஒரிஜனலாக) வேலை செய்தால் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்தால் தன் பக்கம் இருக்கும் தவறு புரியும்.  தான் வாடிக்கையாளர்களிடமும், அலுவலக நண்பர்களிடமும் எப்படி நடந்துக்கொண்டிருக்கிறோம் என்று தெளிவாகத் தெரியும். மாற்றம் எங்கே தேவை என்பது வெளிச்சமாகும்.

 கணவன் மனைவிக்குள் பலவித கருத்து மோதல்கள் ஏற்படக் காரணமும் இத்தகைய ஒரு உணர்தல் இல்லாத காரணமே. ஆண் தனது கோணத்திலிருந்து மட்டுமே பார்த்து தான் செய்வது நியாயம் என்று கூற பெண்ணும் அதையே செய்யும் பொழுது நிலமைத் தீவிரமாகிறது. இப்போது காலம் மாறிவிட்டது.

பெண்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடப்பதில்லை. உத்யோகம் புருஷ லட்சணம் என்று ஆண்கள் மட்டும் வேலைக்கு போவது போய் இப்போது இருவரும் வேலைக்கு போகிறார்கள். கூடவே சம்பாதிக்கிறார்கள். அதனால் இது ஆண் செய்யும் வேலை, பெண் செய்யும் வேலை என்று ஏதும் தனியாக இருப்பதில்லை. ஆனால் பல குடும்பங்களில் பிரச்சனை வெடிக்கத்தான் செய்கிறது. சில நிமிஷம் அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து அடுத்தவரின் இடத்தில் தன்னை நிறுத்திப்பார்த்தால் தவறு எங்கே என்று புரிந்து விடும்.

திருத்திக்கொள்ள முடியும். விளையாட்டாக கூட இதைச் செய்து பார்க்கலாம் கணவன் மனைவியாக, மனைவி கணவனாக அவரவர் செய்யும் வேலையை மாற்றி செய்து பார்த்தால் புரியும். வேலைக்கு போகும் பெண்களை விட வீட்டில் இருக்கும் பெண்கள் எந்த விதத்திலும் குறைவில்லாதவர்கள் என்பதும் வீட்டில் இருக்கும் பெண் இடத்தில் இருந்து பார்த்தால்தானே புரியும்!! Step into someone else's shoes to understand better என்று உளவியாளலர்கள் சொல்கிறார்கள். என் இடத்தில் நீ இருந்தால்!!!! இப்படி கேட்கும் உரிமை சக மனிதருக்கும் இருக்கு.

 

3 comments:

Nagendra Bharathi said...

Super

திண்டுக்கல் தனபாலன் said...

50:50 Always good...!

புதுகைத் தென்றல் said...

நன்றி நாகேந்திர பாரதி

நன்றி தனபாலன்