Wednesday, March 11, 2020

நல்லூரை நோக்கி பயணம் : பாகம் 4

அந்தி சூரியன் வரவேற்க கேப் புக் செய்து கொழும்பை நோக்கி பயணம். பலவித ஞாபகங்கள் உடன் வர இரவு 7 மணி வாக்கில் நாங்க முன்பு தங்கியிருந்த வீட்டின் வாயிலை அடைந்த பொழுது மனசு ஒரே குதூகலம். தாய்வீட்டிற்கு வரும் மகளை வரவேற்கும் ஆனந்தத்துடன் காந்தி ஆண்ட்டி வாயில் கதவை திறந்து கட்டி கொண்டார்.

அங்கே அவருடன் தங்கியிருந்த தோழியை அறிமுகம் செய்தார். ஃப்ரெஷ்ஷப் ஆகி இரவு உணவு உட்கொள்ள மேசைக்கு வந்தேன். ஆண்ட்டியின் ஆஸ்தான சமையற்காரர் சந்திராவிடம் சிகப்பரிசியில் இடியாப்பம், எனக்கு பிடித்த ஸ்ரீலங்கன் முந்திரி கறி, பலாக்கொட்டை தேங்காய்ப்பால் கறி என செய்ய சொல்லியிருந்தார் ஆண்ட்டி.

சாப்பிடும் பொழுது காந்தி ஆண்ட்டியின் தோழி ஒரு விஷயம் சொன்னார். சிரித்து சிரித்து புரையேறியது. நான் அங்கே இருந்த பொழூது எனது ஆஸ்தான ஆட்டோ டிரைவர் ரவி. அவர் தான் இப்பொழுது காந்தி ஆண்டிக்கும் டிரைவர். நான் என் கொழும்பு பயணம் பற்றி ரவிக்கு போன் செய்து சொல்லியிருந்தேன். என் வருகை பற்றி அவருக்கு தெரியும். காந்தி ஆண்ட்டியின் தோழிக்கு இவை தெரியாது. அவர் ஏங்கோ வெளியே செல்ல வேண்டுமென வெளிக்கிட்ட பொழுது ரவிதான் அழைத்து சென்றிருந்திருக்கிறார். திரும்ப இறக்கி விடும்பொழுது என் வருகையை பத்தி ரொம்ப மகிழ்ச்சியை பற்றி ரவி சொல்ல இந்த புது ஆண்ட்டிக்கு ஷாக்.

இந்த ஆட்டோ டிரைவருக்கு இதெல்லாம் எப்படி தெரியும்? நம்மை ஃபாலோ ஏதும் செய்கிறாரா? என பயந்து போயிருக்கிறார். மேலே வந்து காந்தி ஆண்ட்டியிடம் வந்து விவரம் சொல்ல ரவியை பற்றி விவரமாக சொல்ல இருவரும் சேர்ந்து சொல்லியிருக்கிறார். அதை நான் வந்த பிறகு ஆண்ட்டி பயத்துடன் சொன்ன விதம் எனக்கும் குபீர் சிரிப்பு வந்தது. இத்தனை களேபரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டேன் என அயித்தானுக்கு போன் செய்ய மறந்தே போனேன்.

அவரே போன்செய்து என்ன அவ்ளோதான் எங்களை மறந்துவிட்டாயான்னு கேட்க சாரி சொல்லி அடுத்த நாள் அதிகாலை சீக்கிரம் எழவேண்டுமென சொல்லி தூங்க சென்றேன். அடுத்த நாள் காலை கேப் புக் செய்து கொண்டு கோட்டை ரயில் நிலையம் சென்றோம். இருள் பிரியாத அந்த நேரத்தில் வந்து நின்றது யாழ்ப்பாணம் செல்லும் ரயில். ஏறிக்கொண்டோம். மனது என் நீண்ட நாள் கனவு நனவாகப்போவதை நினைத்து குதூகலித்தது.

ஜாஃப்னா என ஸ்டேஷனில் பெயர் பார்த்தபொழுது நானே நானா யாரோ தானான்னு பாட்டு மனதில் ஓடியது. யாழ்ப்பாணம் எனும் பெயர்ப்பலமை பின்னால் தெரிய ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டேன். வரலாறு ரொம்ப முக்கியமாச்சே.

காந்தி ஆண்ட்டி எங்களுக்கு ஹோட்டலில் ரூம் புக்கிங் செய்து வைத்திருந்தார். அந்த ஹோட்டலில் ஸ்டேஷன் பிக்கப்பும் சேர்ந்து இருக்க வண்டி வந்திருந்தது. டிரைவரை கண்டு பிடிக்க தான் கொஞ்சம் கஷ்ட பட்டோம். ஒரு கிலோமீட்டர் கூட தூரமில்லை ஹோட்டல் வந்தது.

தொடரும்

No comments: