Tuesday, December 21, 2010

இந்த மாற்றம் தேவைதானா????!!!!!????????

பெண்ணுக்கு படிப்பெதற்குன்னு சொல்லி வீட்டில் அடுப்பங்கரையே
உலகம்னு வெச்சிருந்தாங்க. பெண் குடும்பத்தை பாத்துகிட்டா
போதும்னு அவளோட திறமைகளை அடக்கி ஒடுக்கி உருத்தெரியாம
ஆக்கினாங்க. அதுலயும் பிரகாசித்தது ரொம்ப கொஞ்சம் பேருதான்.
பெண்களோட இந்த நிலைக் கண்டு மீசைக்கார கவிஞனுக்கு மீசை
துடித்து கோபம் வந்து,” நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்”
பெண்களுக்கு வேணும். படிப்பு மிக மிக அவசியம். என்றெல்லாம்
சொன்ன பாரதியின் கனவு நனவாகி பெண்கள் பாரதி கண்ட
புதுமைப் பெண்களாக திகழ் வேண்டும் என எத்தனையோ
பாடுபட்டு மெல்ல மெல்ல மாற்றங்கள் நிகழ்ந்தது.

மாற்றங்கள் ஒரேநாளில் நிகழ்ந்து விடவில்லையே!! மெல்ல
மெல்ல இந்த நிலையை அடைய 3 தலைமுறை ஆகியிருக்கிறது.
ஆனால் இப்பொழுது இருக்கும் நிலை... இந்த மாற்றம்
மகிழ்ச்சிக்கு பதில் வெட்கத்தை தருகிறது.

அனைவரும் இப்படி இல்லை. ஆனால் ஒரு சிலரின் நடவடிக்கைகளால்
பெண் இனத்துக்கே அவமானம். தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ள
முடியாமல் அப்படி என்ன ஒரு குணம்?? சமீபத்தில் நாளிதழ்
ஒன்றில் படித்ததில் நெஞ்சு குமுறியது.

கணவன் வெளிநாட்டில் இருக்க கணிணி வலைத்தளம் மூலம்
நட்பான ஒருவனுக்காக வெப்கேமராவில் தன்னை துகிலுரிந்து
காட்ட அவன் அதை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு
மிரட்ட வீட்டிலிருந்து பணத்தையும் நகையையும் திருடி
அவனிடம் கொடுத்திருக்கிறாள். அந்தப் பணமும் போதாமல்
வேறொருவனுக்கு தனது புகைப்படங்களைக்காட்டி அதன்
மூலம் பணம் பெற்று தருவதாக செய்தி. என்ன கொடுமை இது
கடவுளே!!

மிஸ்டுகால் கொடுத்து நட்பான ஒருவனுடன் சாட்டிங், போட்டோக்கள்
பகிர்வு என ஒரு பெண் அவதிபட்டதாகவும் படித்தேன். இப்படி
எத்தனையோ வெளியுலகிற்கு தெரியாத பல விஷயங்கள்.
தன்னோடு அலுவலகத்தில் வேலைபார்ப்பவருக்கு
ஃபார்வேர்டு மெசெஜ் அனுப்பி வைக்கும் பழக்கம் ஒரு பெண்ணுக்கு
உண்டு. அந்த சாதாரண ஃபார்வேர்டு மெசெஜ்ஜே அந்த ஆணின்
மனைவிக்கு சந்தேகம் உண்டாக்கி இருவருக்கும் சண்டை
முற்றி விவாகரத்து வரை போய்... இந்தப் பெண் தான்
காரணம் என அலுவலகத்துக்கு சென்று அனைவரின் முன்னிலும்
அவமானப்படுத்தி... போலிஸுக்கு போவதாக மிரட்டி
எல்லாம் நடந்தது.

இந்த மாதிரி விஷயங்களில் திருமணமான பெண்களும்
மாட்டிக்கொள்ளும்பொழுதுதான் பிரச்சனை அதிகமாகிறது.
எனக்குத் தெரிந்து பல சம்பவங்கள் இருக்கின்றன. சம்பந்த
பட்ட கணவன் மற்றும் குடும்பத்தாரின் நிலையை பார்க்கும்
பொழுது பாவமாக இருக்கிறது.
விவாகரத்துக்களின் எண்ணிக்கை பெருக ஆரம்பித்திருக்கிறது.

நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்
நடந்து கொண்டால் பிரச்சனையே இல்லை. அல்ப சந்தோஷங்களுக்கு
அடிமை ஆகாமல் ,மனதை அலைபாய விடாமல் நல்ல
நட்பு கொள்ள தெரியாதா??? நட்பிற்கு இலக்கணம் வள்ளுவர்
சொல்லியிருக்கிறாரே!! அவற்றையெல்லாம் மனனப்பகுதி
மதிப்பெண்களுக்காக மட்டும்தான் பள்ளியில் படிக்கிறார்களா?????

பெண்ணை மட்டும் குற்றம் சொல்ல முடியாது!!! இந்த
காலகட்டத்திலும் பெண்ணை அடிமையாக்கி,, பேசி மயக்கி
செய்யும் குள்ளநரிகள் பேச்சுக்கு மயங்குவதைத் தவிர
அவர்கள் செய்யும் குற்றம் வேறொன்றுமில்லை.அது
ஒன்றே அவர்களை எழ விடாமல் செய்து விடுகிறது.
குள்ளநரியின் தந்திரத்தை புரிந்து கொள்ளும் தன்மையை
பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.எந்த காலகட்டத்திலும்
இந்த வகை ஆண்கள் இருப்பார்கள்தான். நாம்தான்
நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதை படிக்கும் பொழுது
சில ஆண்களுக்கு கோவம் வரலாம். நண்பர்களே, நல்ல
உள்ளங்களே உங்களை சாட வில்லை. பொதுவாக
சொல்வது போல சொன்னேன்.

தவறு செய்யும் சில பெண்களால் பெண் சமூகத்துக்கே
அவப்பெயர் வருவது போல சில ஆண்களால் ஆண்
சமூகத்துக்கும் அவப்பெயர் வருகிறது.

ஷாப்பிங் மால்களில்.. ஹோட்டல்களில் டூ வே மிர்ரர்
பயங்கரம், தவறானவர்கள் கையில் இருக்கும் செல்போன்
கேமரா என நம்மை எப்போதும் இரு ஜோடி கண்கள்
உத்து பார்த்துக்கொண்டே இருக்கின்றன என வருத்தப்பட்டுக்
கொள்ளும் சூழலில் தாமகவே வலிய சென்று வம்பை
விலைக்கொடுத்து வாங்கிக்கொள்ளும் அவலம் ஏன்???

மீண்டும் பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்து
கொடுமை படுத்த ஆரம்பித்து விடும் சூழ்நிலை உருவாகிடுமோ
என அச்சம் ஏற்படுகிறது!! இது அனாவசியாமனது என்றும்
சொல்லிவிட முடியாது. அரிதாக கிடைத்த பெண் சுதந்திரத்தை
தவறாக பயன்படுத்தி களங்கத்தை ஏற்று பரிதவிக்க்கும்
இந்த மாற்றம் தேவைதானா????!!!!

கிடைத்த சுதந்திரத்தை அளவாக உபயோகித்து தக்க வைத்துக்கொள்ள
வேண்டும். பெற்றோர்களும் முக்கிய பங்கு எடுத்து பார்க்க
வேண்டும். தோளுக்கு மிஞ்சிய பிள்ளையை கொஞ்சம்
நோட்டம் வைத்து பார்ப்பதும் நல்லது. பிள்ளை வழிதவறுகினா/ளா
என கண்கொத்தி பாம்பு போல பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய
ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

நான் எந்த ஈயவாதியும் இல்லை. ஒரு சாதாரணப் பெண்ணின்
மனநிலையாக இந்தப் பதிவு..


19 comments:

கோவி.கண்ணன் said...

நீங்க ஒரு சிலரின் நடவடிக்கை ஒட்டு மொத்த பெண்களின் நடவடிக்கையாக நினைத்துக் கொண்டு எழுதி இருக்கிங்க. கெட்டுப் போகிறவர்கள் பொத்தி வச்சாலும் கெட்டுப் போவாங்க, மற்றவர்கள் எல்லோரும் கூட்டிக் கொடுத்தாலும் கெட்டுப் போக துணியமாட்டாங்க.

settaikkaran said...

சவுக்கடி!
செய்திகள் வாயிலாக வெளிவருகிற இது போன்ற சம்பவங்கள் பனிக்கட்டியின் ஒரு சிறுதுளியாகும். பல்வேறு இணையதளங்களிலும், மின்னஞ்சல்கள் மூலமாகவும் இப்படிப்பட்ட ஆபாசப்புகைப்படங்களும், வீடியோக்களும் அங்கிங்கெனாதபடி பரவி வருகின்றன. வெட்கக்கேடு!

ஹுஸைனம்மா said...

நல்லா எழுதிருக்கீங்க தென்றல். வார்த்தைக்கு வார்த்தை ரிப்பீட்டிக்கிறேன். சுதந்திரத்தைத் தவறாக உபயோகிக்கும் ஒரு சிலரால் எல்லாருக்குமே பாதிப்பு.

//நமக்கான எல்லை எது என புரிந்து//
அந்த எல்லை எதுன்னுதான் நிறைய பேருக்குப் புரிவதில்லை!!

//பிள்ளை வழிதவறுகினா/ளா
என கண்கொத்தி பாம்பு போல பார்த்துக்கொண்டே இருக்கவேண்டிய
ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.//
வேதனையோடு!! :-((((

எல் கே said...

என்ன சொல்றதுன்னு தெரியலை . தெரிஞ்சு செய்யறவங்க கொஞ்சம் பேறு. தெரியாம விளையாட்டா சாட்ல இறங்கி மாற்றவங்க நெறைய

துளசி கோபால் said...

அட ராமா............ இப்படியெல்லாமா நடக்குது!!

பெண்கள் கவனமா இருக்கவேண்டிய காலம் இது.

pudugaithendral said...

வாங்க கோவி.கண்ணன்,

எல்லா ஆண்களும் தவறானவர்கள் இல்லை. ஆனாலும் ஆண்கள் என்றாலே பயப்படும் நிலைதான். அது போலத்தான் இதுவும்.

கெட்டுப் போகிறவர்கள் பொத்தி வச்சாலும் கெட்டுப் போவாங்க, மற்றவர்கள் எல்லோரும் கூட்டிக் கொடுத்தாலும் கெட்டுப் போக துணியமாட்டாங்க.//

பொத்தி வைக்கச் சொல்லி சொல்லவில்லை.

pudugaithendral said...

வாங்க சேட்டைத் தம்பி,

செய்திகள் வாயிலாக வெளிவருகிற இது போன்ற சம்பவங்கள் பனிக்கட்டியின் ஒரு சிறுதுளியாகும்//

ஆமாம். சமீபகாலமா இந்த மாதிரி விடயங்கள் படிக்க நேர்ந்ததாலயும், சிலரின் அனுபவங்களை பார்த்ததாலும் இந்த பதிவு எழுதினேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

வாங்க ஹுசைனம்மா,

காலத்தின் மோசமான இந்தக்கோலம் மாறவேண்டும்னு பிராத்திக்கறேன்.

வருகைக்கு நன்றி

pudugaithendral said...

என்ன செய்ய வித்யா!??
:(

pudugaithendral said...

தெரிஞ்சு செய்யறவங்க கொஞ்சம் பேறு. தெரியாம விளையாட்டா சாட்ல இறங்கி மாற்றவங்க நெறைய//

ஆமாங்க இதைப்பத்தி ஒரு விழிப்புணர்வு கொண்டுவரணும்.

வருகைக்கு நன்றி எல்.கே

pudugaithendral said...

ஆமாம் டீச்சர்,

இந்தக்கூத்துக்களும் நடக்குது.

வருகைக்கு நன்றி

Thamira said...

உங்கள் மனநிலை புரிகிறது. இன்னும் அதிகரிக்கும் கல்வி வாய்ப்புகளும், சிந்தனையும் பெண்களை இந்த சிக்கலிலிருந்து வெளியே கொண்டுவரும். அதற்கு இன்னும் சிலகாலம் ஆகலாம்.

Thamira said...

ஆனால் பின்விளைவாக விவாகரத்து அதிகரிப்பதை தவிர்க்க இயலாது.

pudugaithendral said...

வாங்க ஃப்ரெண்ட்,

இப்ப இருப்பது ஜாங்கிரி சிக்கல்தான். அது மேலும் இடியாப்பச் சிக்கலாகிவிடாமல் இருந்தால் சரி. :((

விவாகரத்தில் பாதிக்கப்படுவது குடும்பத்தினரும் பிள்ளைகள் இருந்தால் அந்தப் பிள்ளைகளும் என்பதுதான் கொடுமை. சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்காலம்???

Thamira said...

எப்பேர்ப்பட்ட நல்ல விஷயங்களுக்கும் பின்விளைவாக சில கெட்டவைகளும் இருக்கலாம்.

எப்பேர்ப்பட்ட ஆண்களுக்கும் ஒத்துப்போகும்படியான பெண்களை உருவாக்கி வைத்ததுதான் 'அடுப்படிக் கல்ச்சர்'. அதைவிடுத்து கல்வியாலும், சிந்தனையாலும் பெண்கள் ஒரு பூரண மனுஷியாக வெளியேறும் போது விவாகரத்தை தவிர்க்கமுடியாது.

'சம்பந்தப்பட்ட பெண்களின் எதிர்காலம்?' என்ற கேள்விக்கு இடமிருக்காது. அப்போது அவர்கள் தனித்து வாழவோ, தனக்கொத்த ஆண்களை தேர்வு செய்துகொள்ளுமளவோ திறன்பெற்றவர்களாக இருப்பார்கள்.

பிள்ளைகள் பாதிக்கப்படுவார்களே என்ற வாதத்துக்கு என்னிடம் பதிலில்லை. முதல் பாராவைக் காணவும்.

pudugaithendral said...

அதைவிடுத்து கல்வியாலும், சிந்தனையாலும் பெண்கள் ஒரு பூரண மனுஷியாக வெளியேறும் போது விவாகரத்தை தவிர்க்கமுடியாது.//

பூரணமனுஷியான அனைவரும் விவாகரத்து செய்வதில்லையே!!! சிலர் நிஜமாகவே கஷ்டபடும்பொழுது விவாகரத்து தவிர்க்க முடியாத விஷயம். ஆனால் தன் காலில் நிற்கும் சக்தி இருப்பதாலேயே சிலர் சின்ன சின்ன விஷயத்துக்கு விவாகரத்து வரை போகிறார்கள்.

pudugaithendral said...

அப்போது அவர்கள் தனித்து வாழவோ, தனக்கொத்த ஆண்களை தேர்வு செய்துகொள்ளுமளவோ திறன்பெற்றவர்களாக இருப்பார்கள்.//

தனித்து வாழ்வது குறித்தோ, தனக்கொத்த ஆண்மகனை தேர்வு செய்து மகிழ்ச்சியாக வாழ்வது குறித்தோ எனக்கு எந்த விதமான கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இந்த மாதிரியான அடாவடித்தனங்கள் இல்லாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை அவசியம்.

pudugaithendral said...

பிறன்மனை நோக்குவது ஆணுக்கு தவறு. அப்படிப்பட்ட ஆணிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறனையும் படிப்பறிவோடு சேர்ந்து வளர்த்துக்கொண்டு நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக புதுமைப்பெண் திகழ்வாளேயானால் அதைவிட ஆனந்தம் வேறெதுவும் கிடையாது. தன்னை சீரழித்துகொள்வதுதான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

கருத்துக்கு நன்றி ஃப்ரெண்ட்

மங்களூர் சிவா said...

/

நமக்கான எல்லை எது என புரிந்து ஆணும்,பெண்ணும்
நடந்து கொண்டால் பிரச்சனையே இல்லை.
/

அந்த எல்லை எதுன்னு தெரியாததுனாலதான் பிரச்சனை :(